நம்ம ஊர் காய்கறிகளும் பழங்களும் சாப்பிடத் தகுந்ததில்லையா?



* ‘‘இந்தியாவில் விளையும் கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேப்பங்கிழங்கு... இவை எதுவும் சாப்பிடத் தகுந்ததில்லை. வெற்றிலைகளிலும் ''சால்மோனெல்லா'' என்ற நுண்ணுயிர் தொற்று அதிகம். மாம்பழங்களில் பழ ஈக்கள் உள்ளன. அந்த ஈக்கள் எங்கள் நாட்டின் விவசாயத்தையே அழிந்துவிடும்’’ என்று சொல்லி, இங்கிருந்து அனுப்பிய எல்லாவற்றையும் கடலில் கொட்டி அழித்துவிட்டன ஐரோப்பிய யூனியன் நாடுகள்.

* அனுமதிக்கப்பட்டதை விட அதிக பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பதாகக் கூறி இந்திய மாம்பழங்களைத் தடை செய்திருக்கிறது ஜப்பான். 

* இதே காரணத்துக்காக இந்திய பச்சை மிளகாய் கன்டெய்னர்களையும் திருப்பி அனுப்பிவிட்டது சவூதி அரேபியா.

* இந்திய உருளைக்கிழங்குகளுக்கு தடா போட்டிருக்கிறது ரஷ்யா.

* இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் கறிவேப்பிலை, வெண்டைக்காயில் தரமில்லை என்று ஆஸ்திரேலியா, மலேசிய நாடுகள் எச்சரித்துள்ளன.
அப்படியென்றால்... ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும், அரேபியர்களும் நிராகரிக்கும் விஷத்தைத்தான் நாம் சாப்பிடுகிறோமா?

‘‘ஆமாம். ஆனால் இந்தத் தடைக்குப் பின்னால் அதையும் தாண்டிய ஒரு அரசியலும் இருக்கிறது...’’ என்கிறார் தமிழ்நாடு மாம்பழ விவசாயிகள் சங்கத் தலைவர் பிரபுராம்.
‘‘இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 63,000 டன் மாம்பழம் ஏற்றுமதியாகிறது. ஐரோப்பா மட்டுமின்றி வங்க தேசம், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யாவுக்கும் போகிறது. பொதுவாக ஏற்றுமதி வணிகத்தின் அடிப்படையே ‘கொடுத்து வாங்குவது’தான்.

பழங்களின் உள்ளே உள்ள பூச்சிகளை அழிக்கும் ‘வேப்பர் ஹீட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட்’களை தங்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று கேட்டது ஜப்பான். இந்தியா அதை வாங்க விரும்பவில்லை. ஐரோப்பா, இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ள விரும்புகிறது. இதற்கெல்லாம் நெருக்கடி கொடுக்கும் வகையில்தான் மொக்கை குற்றச்சாட்டுகளைச் சொல்லி தடைகளை அறிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் இணைந்து சில அமைப்புகளை உருவாக்கி உணவுப்பொருட்களின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. foodcert, indocer, sளீணீறீ போன்ற அமைப்புகள் இந்தியாவில் இந்த வேலையைச் செய்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படிதான் இவர்கள் விளை பொருட்களை தரப்பரிசோதனை செய்து சோதித்து சான்றிதழ் தருவார்கள். இந்த சான்றிதழை வாங்க ரூ.1 லட்சம் வரை செலவாகும்.

இதோடு, பூ பூக்கும் தருணத்தில் இருந்து காயாகி பழமாகும் வரை எல்லாவற்றுக்கும் ‘சாம்பிள்கள்’ அனுப்ப வேண்டும். இவ்வளவு சோதனைகளுக்குப் பிறகு அனுப்பும் பொருட்களையே குற்றம் சொல்லி கடலில் கொட்டுகிறார்கள்.

இவர்கள் இஷ்டத்துக்கு தடை விதிப்பார்கள் என்றால் தரச்சான்று எதற்கு? அண்மையில் அனுப்பப்பட்ட 207 அல்போன்சா பழப் பெட்டிகளில் பழ ஈக்கள் இருந்ததாம். அதை அனுமதித்தால் 32 கோடி பவுண்ட் மதிப்புள்ள ஐரோப்பாவின் காய்கறி விவசாயமே அழிந்துவிடுமாம்.

இதைவிட மோசமாக ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். நம் பொருட்களுக்குத் தடை விதிப்பதன் மூலம், இந்தியாவின் பெயரைக் கெடுத்து, நம் மார்க்கெட்டை குலைக்கும் சர்வதேச சதி இதன் பின்னால் இருக்கிறது...’’ என்று குமுறுகிறார் பிரபுராம்.

‘‘உண்மைதான். உலக வர்த்தக நிறுவனத்தைப் போன்று தங்களுக்கென்று தனித்த டிரேட் ரெகுலேஷன் சிஸ்டத்தை உருவாக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கின்றன. அதை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. அந்த எதிர்ப்பை முறியடித்து பேரம் பேச ஏதுவாகவே இது போன்ற தடைகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால், அதையும் தாண்டி மாபெரும் விபரீதத்தை நோக்கி இந்திய விவசாயம் சென்று கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார் இயற்கை வேளாண்மை ஆர்வலர் அரச்சலூர் செல்வம்.

‘‘ரவுண்ட்-அப் என்றொரு பூச்சிக்கொல்லி. இதைப் பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு வரும் என்று நிரூபித்திருக்கிறார்கள். கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் ரத்தத்தில் கூட இந்த விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதைத் தடை செய்து விட்டன. ஆனால், இங்கே இது இல்லாமல் விவசாயமே இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் தேனீக்கள் மொத்தம் மொத்தமாக செத்து விழுந்தன. ஆய்வு செய்தபோது, ‘இமிடா குளோரிப்பின்’ என்ற விஷம் தெளிக்கப்பட்ட செடிகளில் அமர்வதே காரணம் என்று தெரியவந்தது. உடனடியாக அது தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் இதைப்போல 170க்கும் மேற்பட்ட விஷங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

3 வருடங்களுக்கு முன்பு, ‘கன்ஸ்யூமர் வாய்ஸ்’ என்ற அமைப்பு டெல்லியில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்திய காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, 200 முதல் 2400 மடங்கு அதிக விஷம் இருந்தது அதில் தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், தானாகவே வழக்காக எடுத்து, ‘காய்கறிகளில் பூச்சிக்கொல்லி அளவைக் கண்காணிக்க ஆய்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடித்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு அதைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால், காலையில் பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட காய்கறி, மாலையில் பறிக்கப்பட்டு மறுநாள் காலை நம் தட்டுக்கு வந்துவிடுகிறது. இது அரசுகள், பல்கலைக்கழகங்கள் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் மௌனமாக இருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 30 வயதுக்குள்ள ஆண்கள் பலரும் மலட்டுத்தன்மைக்கு ஆளாகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட ஏகப்பட்ட பெண்களுக்கு கர்ப்பபை எடுக்கும் நிலை. இதற்குக் காரணம், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனமும், தண்ணீர் மாசுபாடும். நோய் என்பது கிருமியால் வரும். ஆனால், இப்போது 90% நோய்கள், இதயம், கிட்னி, ரத்தக்குழாய் என உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதால் வருகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் நம் உணவு தான்...’’ என்று வருந்துகிறார் செல்வம்.

விஷம் அதிகமிருக்கிறது என்று சொல்லி நம் உற்பத்தியைத் திருப்பியனுப்பும் நாடுகள்தான், பூச்சிக்கொல்லிகளையும் ரசாயனங்களையும் இங்கு கொண்டு வந்து கொட்டின. நிலம், நீர், மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய வன்முறையின் விளைவே, இன்றைய புறக்கணிப்புக்கு அடிப்படை. இனியாவது மக்களைக் காப்பாற்ற இயற்கை விவசாயத்துக்கு மாறியாக வேண்டும்!

- வெ.நீலகண்டன்