கர்நாடகா to சென்னை...



100 வருடம் பாரம்பரிய வீடு பயணித்த கதை!

சீலிங் மேல் சீலிங் வைத்த நவீன அடுக்கு மாடிகளே சீட்டுக்கட்டு மாதிரி சரிந்து விடுகின்றன. ஆனால், கர்நாடகாவிலுள்ள ஒரு கிராமத்தில் 1914ம் ஆண்டில் கட்டப்பட்ட பழங்கால வீடு ஒன்று, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அப்படியே பாகம் பாகமாக வண்டியேற்றி சென்னை கொண்டு வரப்பட்டு இங்கே கம்பீரமாக மீண்டும் கட்டப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? சென்னையைச் சேர்ந்த கலை பண்பாட்டு அமைப்பான தட்சிண சித்ரா இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

‘‘ஏங்க இந்த ஸ்டன்ட்?’’ - அவர்களிடமே கேட்டோம்... ‘‘ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளான்னு தென்னிந்தியாவின் பாரம்பரியத்தைப் பேசுவதுதான் எங்க அமைப்பின் நோக்கம். இதனாலதான் செட்டிநாட்டு வீடுகள், கேரள பாணியிலான பாரம்பரிய வீடுகள்னு பதினெட்டுக்கும் மேற்பட்ட வீடுகளை முட்டுக்காட்டில் இருக்குற எங்க தட்சிண சித்ரா அருங்காட்சியகத்துல நிறுவியிருக்கோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வீடும் கட்டப்பட்டுச்சு’’ எனத் துவங்குகிறார் தட்சிண சித்ரா அமைப்பின் மேலாளரான ஷரத் நம்பியார்.

‘‘‘கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் டவுனிலிருந்து சுமார் முப்பது கி.மீ தூரத்திலுள்ள அல்தூர் கிராமத்தில்தான் இந்தப் பழமையான வீடு இருந்தது. இதைப் பராமரிக்க ஆளில்லை. புல்டோசர் வச்சி எல்லாத்தையும் இடிச்சித் தள்ளப் போறதா கேள்விப்பட்டோம். விலை மதிக்க முடியாத அந்த வீட்டு மர வேலைப்பாடுகள் விறகாப் போறதை நாங்க விரும்பலை. உடனடியா நேர்ல போய் விசாரிச்சோம். கே.ஏ.முகமது இஸ்மாயில் என்ற ஒரு இஸ்லாமியர் அந்தக் காலத்தில் கட்டிய வீடு அது. பார்க்க ஏதோ ஒரு மன்னரின் அரண்மனை மாதிரி கம்பீரம்.

ஆனா, இதைக் கட்டிய இஸ்மாயில் ரொம்ப சாதாரண மனிதர்தான்னு அக்கம்பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. அவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் காபி தோட்டம் வச்சி பிழைச்சிட்டிருந்தாராம். அதே கிராமத்தில் ஒரு பல சரக்கு கடையும் வச்சிருந்தாராம். விலையுயர்ந்த மரங்களைப் பயன்படுத்தி, அழகியல் ரீதியாகவும், கட்டிடக் கலையின் தாத்பரியங்கள் கெடாமலும் இவ்வளவு பிரமாண்டமான வீட்டைக் கட்டியிருக்கும் அவர் எங்களுக்கு சாதாரணமானவரா தெரியலை.

அந்த வீட்டு ஜன்னல்கள், கதவுகளைச் சுத்தி இருந்த வேலைப்பாடுகளை இன்னிக்கு செய்ய ஆள் இருக்காங்களான்னு பார்த்தா சந்தேகம்தான். வீட்டுல வசிக்கிறவங்க சௌகரியமாக வாழத் தேவையான நடுக்கூடம், தூங்கும் அறை, சமையல் அறை, அலுவல் அறைன்னு அரை கிரவுண்ட் இடத்தில் திட்டமிட்டு வீட்டை வடிவமைச்சிருக்கார் இஸ்மாயில். நிச்சயம் அவர் நிறைய ஊர்களுக்குப் போய் வந்தவரா இருந்திருக்கணும். இந்தியா முழுக்க இருக்குற எல்லா இனத்தவர்களின் கட்டிடக் கலையையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துதான் இதைக் கட்டியிருக்கணும். இந்து, முஸ்லிம் பாரம்பரியங்கள் இணைச்சுக் கட்டப்பட்ட வீடுங்கறதை அந்த வீட்டின் வடிவமே காட்டிக் கொடுத்துடுச்சு.

பல வருஷமா வீட்டை யாரும் பயன்படுத்தலை. நல்ல வேளை... அது பேய் வீடுன்னு அந்த ஊர் மக்கள் நம்பினதால யாரும் வீட்டை சேதப்படுத்தவும் இல்ல. உள்ளே ஃபர்னீச்சர்கள் முதற்கொண்டு எல்லாம் அப்படியே இருந்துச்சு. இஸ்மாயிலின் வாரிசுகள் இப்போ எங்க இருக்காங்கன்னு யாருக்கும் தெரியாத நிலையில், கட்டிடம் உடைக்கிற கான்ட்ராக்டர்கள் கைக்கு அந்த வீடு போயிடுச்சு. சரியா அந்த நேரத்துலதான் நாங்க போய்ச் சேர்ந்தோம். நாங்க, கான்ட்ராக்டர்ஸ்கிட்ட விலை பேசி அந்த வீட்டின் மர பாகங்கள், உத்திரங்கள், படிகள், அப்புறம் வீட்டுக்கு உள்ளே இருந்த மர பீரோ, கட்டில், திவான், ஹுக்கான்னு எல்லாத்தையும் வாங்கிட்டோம். இன்ச் இன்சா பழைய வீட்டை புகைப்படம் எடுத்துக்கிட்டோம். சேதமாகிடாம எல்லா பாகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா பிரிக்கச் சொல்லி சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

அந்தக் காலத்து சுண்ணாம்புச் சுவரை அதே மாதிரி கட்டினாதான் இதையெல்லாம் பொருத்த முடியும். அதனால துளி கூட சிமென்ட் பயன்படுத்தலை. மூணு அடி தடிமன் உள்ள சுவர்களையே திரும்ப அமைச்சோம். சுண்ணாம்பில் மூணு விதமான கலவை ரெடி பண்ணி, லேயர் லேயரா பூச வேண்டியிருந்தது. சுண்ணாம்பு பேஸ்ட்டால கலை நுணுக்கங்களோட செய்யப்பட்டிருந்த பழைய டிசைன்களையும் அப்படியே ஆள் வச்சிப் பண்ணினோம்.

அதே கலை ரசனையோடு இந்த வீட்டை அங்குலம் மாறாம கட்டி முடிக்க 6 வருஷம் ஆகிடுச்சு. கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா இது மாதிரி ஒரு வீடு அடுத்த தலைமுறை கண்ணால் பார்க்கக் கூட முடியாதபடி அழிஞ்சு போயிருக்கும். வீட்டை சுத்திப் பாருங்க. ஆறு வருஷம் எஞ்சினியர்களின் உழைப்பும் காத்திருப்பும் செலவும் நியாயம்தான்னு உங்களுக்கே புரியும்’’ என்கிறார் ஷரத் நம்பியார். அதான் போட்டோஸ்லயே அள்ளுதே!

டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்