சாகா வரம் பெற்ற ஜாவா!



தடதடக்கும்  பைக் பிரியர்கள்

அந்தக் கால பளிச் சூப்பர் ஸ்டார், அழகு ததும்பும் பெல்பாட்டம் கமல் எனப் பலரையும் நினைவுபடுத்தி விடுகிறது எஸ்டீ, ஜாவா பைக். குடும்பத் தலைவர்களின் அடையாளம் ஸ்கூட்டர்களாக இருந்த காலத்தில், கட்டுத்தறி காளைகளின் கலக்கல் வண்டியாகத் திகழ்ந்த இரும்புக் குதிரை இது. 80களின் எத்தனை சினிமா க்ளைமேக்ஸ்களில் இது வில்லன் கார்களை விரட்டிப் பிடித் திருக்கும்... எத்தனை ஹீரோயின்களைக் காப்பாற்றி அள்ளி வந்திருக்கும். இரட்டை சைலன்ஸர், மிரட்டல் ஓசை என இந்திய சாலைகளில் சிங்கமாக வலம் வந்த இந்த வண்டி... இன்றைய தலைமுறைக்கு, ஜஸ்ட் கடந்த காலம்! ‘‘இல்லை... இன்னமும் இது எல்லாருக்கும் ஸ்பெஷல்தான்’’ என நம் இன்ட்ரோவைத் திருத்துகிறார்கள் சென்னையைச் சேர்ந்த ஜாவா காதலர்கள்.

இன்னமும் பழைய ஜாவா பைக்கை பொக்கிஷமாக வைத்திருக்கும் பலர் சேர்ந்து ‘ரோரிங் ரைடர்ஸ்’ எனும் க்ளப் ஒன்றையே அமைத்து எண்ணங்களைப் பகிர்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் கொண்டாடிய ‘இன்டர்நேஷனல் ஜாவா டே’வில் நாமும் ஆஜர்! மொத்தம் 91 வண்டிகள்... ராணுவ வீரர்கள் போல அணிவகுத்திருக்கின்றன. ஜாவா 250, எஸ்டீ 250 ரோடு கிங், எஸ்டீ 175 எனப் பல்வேறு மாடல்கள். அனைத்திலும் பழமை மாறாத பளிச் லுக். சென்னை லூகாஸ் பாலத்தில் இருந்து சோழவரம் வரை 20 கி.மீ பயணத்தைத் தொடர்ந்து, ஒரு சின்ன மீட்டிங்...

‘‘ ‘நான் ஒரு ‘பைக்’ பிரியன் பாஸ். ரெண்டரை வருஷமா இந்த ஜாவா பைக்கை வச்சிருக்கேன். இது 73ம் வருஷ மாடல். ஜாவா ஓனர்ஸ் ஒவ்வொருத்தரா தேடி அலைஞ்சு இதை வாங்க நான் பட்ட சிரமம் எனக்குத்தான் தெரியும்.’’ - விழி விரியப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பிசினஸ்மேன் பிரிஜேஷ். இப்படிப்பட்ட ஒரு இளைஞரைக் கூடவா இந்த பைக் ஈர்த்திருக்கிறது என ஆச்சரியம் தொற்றுகிறது நமக்குள். பிரிஜேஷ் போலவே அங்கு குழுமியிருந்த ஜாவா ஓனர்களில் பலரும் இளம் தலைகள். பெரும்பாலும் அவர்களின் பைக்குகள் அவர்கள் பிறப்பதற்கு முன்பே உருவான ‘அண்ணன்கள்’!

‘‘1998ல இந்த எஸ்டீ ரோடுகிங் பைக்கை வாங்கினேன் சார். சின்ன வயசுல எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒருத்தர் இந்த வண்டி வச்சிருந்தார். இதோட சத்தம் அப்பவே என்னை வசீகரிச்சிருச்சு. ‘வாங்கணும்... வாங்கணும்...’னு நினைச்சிட்டிருந்தவன் நம்மூர்ல கடைசியா வந்த இந்த மாடலை ஒரு வழியா வாங்கிட்டேன். 250 சிசி எஞ்சின்... மைலேஜ் குறைவாதான் கொடுக்கும். ஆனா, இதை ஓட்டும்போது கிடைக்கிற சுகம் வேறெந்த பைக்லயும் இல்ல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பைக்ல மூணாறு போனேன். அப் அண்ட் டவுன் கிட்டதட்ட 1300 கி.மீ பயணம். உடம்பு வலி எதுவும் இல்ல. நைஸ் பைக்’’ எனத் தன் ‘எஸ்டீ’யை அன்பாகத் தடவிக் கொடுக்கிறார் இந்தி பிரசார சபாவில் பணிபுரியும் வெங்கடேஷ்.   

எல்லோருக்கும் சீனியரான சந்திரசேகர், 40 வருடங்களாக ஜாவா பைக்கிலேயே வலம் வருபவர். ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர். ‘‘நான் பெங்களூருவைச் சேர்ந்தவன். 1972ல ஜாவா பைக் வாங்கிட்டு, அப்படியே சென்னைக்கு ஓட்டிட்டு வந்தேன். அப்போ தொடங்கி வேற பைக்கை தொட்டதில்லை. இப்ப என்கிட்ட இருக்குறது ஆறாவது ஜாவா எஸ்டீ. இதில் இருக்குற பிக்கப், த்ரில் எல்லாம் தனி ரகம். ‘டப், டப்’னு இதுல வர்ற சத்தம் பலருக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா, அந்த பீட்ஸ்தான் எனக்கு சந்தோஷம் தர்ற இசை’’ - பூரிப்பாய் சிரிக்கிறார் அவர்.

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் விக்ரம் தனது மனைவி நீனாவுடன் வந்திருந்தார். ‘‘ரெண்டு வாரத்திற்கு முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு. ஏழு வருஷமாச்சு. நீனாவை காதலிக்க ஆரம்பிக்கும்போது இந்த பைக்கை வாங்கினேன். என்னை விட இவங்களுக்குத்தான் இது ரொம்ப உயிர். வேற பைக் வாங்கினா பில்லியன்ல உக்கார மாட்டேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க’’ என்கிறார் உற்சாகம் பொங்க.

ஜாவா பைக் வைத்திருப்பவர்களைத் தவிர, அதை பழுது பார்க்கும் ஸ்பெ ஷல் மெக்கானிக்குகள், உதிரி பாகங்கள் வாங்கித் தரும் ஏஜென்ட்கள் என எல்லோரும் சங்கமிக்கும் கெட் டுகெதராக அமைந்தது இந்த நிகழ்ச்சியின் ப்ளஸ். ‘‘1964ல இந்த பைக் விலை வெறும் 4 ஆயிரம் ரூபாய். இப்ப, ஒரு லட்சம் கொடுத்தாலும் கிடைக் காது. ரெண்டு பக்கமும் சைலன்ஸர்கள் உள்ள ஒரே பைக் இதுதான். அதுமட்டுமில்ல, ஆட்டோ கிளட்ச் வண்டி இது. கிளட்ச் கேபிள் அறுந்துட்டாலும் கியர்ல கிளட்ச் வொர்க் ஆகும். கவலையில்லாம வண்டிய ஓட்டிட்டு வந்துடலாம். இப்ப டெக்னாலஜி நிறைய வந்துருச்சு. ஆனா, இது மாதிரியான ஒரு பைக் வரவேயில்ல’’ என்கிறார் தாம்பரத்தைச் சேர்ந்த மெக்கானிக் ராஜு.

‘‘இந்த கிளப்பை 2003ம் வருஷம் தொட ங்கினோம் சார்... நான், பிரகாஷ், கார்த்திக், ஹரீஷ், அனந்தராம்னு அஞ்சு பேர் சேர்ந்த கூட்டணிதான் முதல்ல இருந்துச்சு’’ எனத் துவங்குகிறார் ஸ்ரீநி காஷ்யப். ‘‘இந்தியாவுல இந்த ஜாவா பைக்குக்குன்னு ஒரு க்ளப் இருக்கு. அந்த க்ளப் மூலமா ஒரு இ-மெயில் தட்டி, சென்னையில யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன். அப்படியே நாங்க அஞ்சு பேரும் நெட் மூலமா சந்திச்சோம். பிறகு, பெசன்ட் நகர்ல ஒரு மீட்டிங் போட்டோம்.

உதிரி பாக பிரச்னை, மெக்கானிக் தேவைகள் பற்றி நிறைய பேசினோம். அப்படியே, இணையத்தில் இந்த ‘ரோரிங் ரைடர்ஸ்’ கிளப்பை உருவாக்கிட்டோம். கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்ப இதில் 300க்கும் மேற்பட்டவங்க உறுப்பினரா இருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் ‘ஜாவா டே’ கொண்டாடுறோம். இது 12வது வருஷம். ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் ஸ்ரீநி காஷ்யப். நிறைவாக, உடல் தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தோடு முடி வடைந்தது ரைடர் ஸின் உறுமல்!

ஜாவா... ஒரு ஃப்ளாஷ்பேக்!

ஜாவா பைக்குகளின் பூர்வீகம் செக்கோஸ்லோவாகியா. அங்கு ஜானெசெக் என்பவர் வான்டரர் நிறுவனத்தின் டூ வீலர் பிரிவை விலைக்கு வாங்கி இந்த பைக்குகளை தயாரித்தார். அவர் பெயர், மற்றும் வான்டரர் நிறுவனத்தின் முதல் எழுத்துக்கள்தான் ‘ஜாவா’. இந்தியாவில் மைசூரைத் தலைமையகமாகக் கொண்ட ஐடியல் ஜாவா என்ற நிறுவனம், 1960ல் இந்த நிறுவனத்தின் உரிமம் பெற்று ஜாவா பைக்குகளை விற்கத் துவங்கியது.

பிற்காலத்தில் எஸ்டீ பைக்குகளும் இவர்களால் உருவாக்கப்பட்டன. மோட்டார் துறையில் 4 ஸ்ட்ரோக் எஞ்சின்களின் ஆதிக்கம் வலுத்ததும், ஜப்பானின் புதிய தொழில்நுட்பங்கள் புகுந்ததும், இந்த 2 ஸ்ட்ரோக் வண்டிகளின் வணிகத்தைப் பெரிதும் பாதித்தன. இதனோடு தொழிலாளர் பிரச்னை, பொல்யூஷன் கன்ட்ரோல் நெருக்கடி எனப் பல சிக்கல்களை எதிர்கொண்ட ஐடியல் ஜாவா, 1996ம் ஆண்டோடு தன் உற்பத்தியை நிறுத்திக் கொண்டது!

‘‘1964ல இந்த பைக் விலை வெறும் 4 ஆயிரம் ரூபாய். இப்ப, ஒரு லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது.’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்