பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ  17 அருண்

மரண ‘பை’! ‘இன்றைய கலாச்சாரத்தையும், நமது ஆழ்மன உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பிம்பங்கள் உருவாக வேண்டியது அவசியம். அதனால்தான் எந்த இலக்கை நோக்கி எடுக்கப்பட்டவையாக இருந்தாலும், எத்தகைய கதைக் கருக்களைக் கொண்டிருந்தபோதிலும் முற்றிலும் புதிய முறையில் படிமங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்களை நான் அதிகமாக விரும்புகிறேன். புதிய படிமங்களைத் தேடி உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இருந்தும் இந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்ள சில படைப்பாளிகள் எப்போதும் தயாராக இருக்கின்றனர்...’
வெர்னர் ஹெர்சாக்

பரிசோதனை முயற்சி என்பது அறிவியல் துறையில் மட்டுமின்றி, கலைத் துறையிலும் மிக முக்கியமான ஒன்று. கலையின் எல்லா பரிமாணங்களும் மக்களுக்கானவை. மக்களின் சிந்தனையை கூர் தீட்டுமிடமாகவே கலை எப்போதும் இருந்து வருகிறது. கலைஞர்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகள், அத்தகைய கூர் தன்மையை இன்னமும் ஆழப்படுத்துகின்றன; செறிவூட்டுகின்றன. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பொருட்களைப் பார்க்கும்போதோ, ஒரு மாதிரியான சம்பவங்களைக் கேட்கும்போதோ, இயல்பாகவே மனித மனதுக்குள் ஒருவித சோர்வு ஏற்பட்டு விடும்.

பரிசோதனை முயற்சிகள் முதலில் இந்த சோர்வை மனதிலிருந்து துடைத்தெறிகிறது. நமது தொலைக்காட்சிகளும் இன்னபிற காட்சி ஊடகங்களும் பிம்பங்களை பாழ்படுத்துகின்றன. பிம்பங்களை அத்தகைய சேதாரத்திலிருந்து விடுவிப்பதற்கு பரீட்சார்த்த முறை மிக அவசியமான ஒன்று.

தமிழில் முழுக்க முழுக்க வணிகமாகிவிட்ட திரைப்படங்களில் இத்தகைய பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இடமில்லை. ஆனால், சினிமாவில் கலைக்கான கூறு இருக்கிறது என்று இன்னமும் திடமாக நம்புகிறவை குறும்படங்கள். இவற்றில் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. தமிழில் அத்தகைய பரீட்சார்த்த முறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் ‘லீ சாக்’.

ஒரு புகைப்படம் போல் அசைவற்று கிடைக்கிறது குறும்படத்தின் முதல் காட்சி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கதாபாத்திரங்களும், ‘செட் பிராப்பர்ட்டி’ என்று சொல்லப்படும் பொருட்களும் ஃபிரேமிற்குள் வந்து சேர்கின்றன. ஒருவர் தோளில் தொங்கும் பையுடன் மிக அயர்ச்சியோடு நடந்து வந்து, ரயில்வே பிளாட்பாரத்தில் இருக்கும் இருக்கையில் அமர்கிறார்.

 ரயிலில் கொள்ளையடிக்கும் திருடன் ஒருவன், ரயிலுக்காகக் காத்திருக்கிறான். சற்று திரும்பி, இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரைப் பார்க்கிறான். அவர் நீண்ட நேரம் எவ்வித அசைவுமின்றி தூங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் கையில் ஒரு பை இருக்கிறது. அதில் திருடனுக்குத் தேவையான பணமோ, மற்ற பொருட்களோ இருக்கலாம். எனவே திருடன் தயங்கித் தயங்கி அவர் அருகில் வந்து அமர்கிறான். தூங்கிக்கொண்டிருக்கும் நபரின் கையில் இருக்கும் பையை, தனக்கே உரிய தொழில் நேர்த்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறான்.

ஆனால் அவர் பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார். திருடன் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அவரது கையிலிருந்து பை தனியாக வந்துவிடுகிறது. திடீரென ஒரு நொடியில், பையை உருவிக்கொண்டு ஓடும் உத்வேகத்துடன் திரும்பும் திருடன் திடுக்கிட்டுப் பார்க்கிறான். பார்வையாளர்களும் கொஞ்சம் திடுக்கிடும் வேளையில் குறும்படம் முடிந்துவிடுகிறது.

இந்த குறும்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எவ்வித வசனங்களும் இல்லாமல், ஒரே ஷாட்டில் கதைசொல்லும் ஒரு புதிய பாணியை தமிழ் குறும்பட சூழலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக், ஒவ்வொருமுறையும் திரைப்படம் எடுக்கும்போது, கூடவே ஒரு குறும்படத்தையும் எடுப்பார். ‘சைன்ஸ் ஆஃப் லைஃப்’   (Signs of Life)   என்கிற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது, இரண்டு நாளில் ‘லாஸ்ட் வேர்ட்ஸ்’ என்கிற குறும்படம் ஒன்றையும் எடுத்தார்.

கதை சொல்வதில் முற்றிலும் புதிய பாணியை அறிமுகப்படுத்துவதில் ஹெர்சாக் எல்லாருக்கும் முன்னோடி. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு தனித்த தீவில் இருக்கிறார்கள். போலீஸார் அவர்களை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் மனநிலை சரியில்லாத ஒருவர் மட்டும் அங்கிருந்து வெளியேற மறுக்கிறார். போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள்.

அவர் யாருடனும் பேசாமல், இரவின் தனிமையில் இசைக் கருவியை மீட்டிக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய படிமங்களோடு இந்தக் குறும்படத்தில் கதை சொல்லியிருப்பார் ஹெர்சாக். இறுதிவரை அந்த தொழுநோயாளியை காட்டாமல், எதையும் புனைவாகக் காட்சிப்படுத்தாமல், எல்லாரையும் பேச விட்டு, இசைக்கருவியை மீட்டி, இந்தக் கதையை பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார்.

‘லீ சாக்’ குறும்படத்தின் கதைக் களம் ஒரு மழைநாளில் நடக்கிறது. ஒரு புகைப்படத்தில் இருக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தால் எப்படி இருக்குமோ, அந்த உணர்வைத்தான் இந்தக் குறும்படம் கொடுக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும்போது நாம் ஒரு ரயில்வே நிலையத்தில் மாட்டிக்கொண்டது மாதிரியாகவும், நம் கண்முன்னே ஒரு திருடன் இன்னொருவரின் பையைத் திருடிச் செல்வது போலவும், அதனைப் பார்த்து நாம் சில்லிட்டு நின்றிருப்பது போலவும், நமக்குள் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. படம் முடிந்தபிறகும், அதன் பின்னணியில் பெய்துகொண்டிருந்த மழை நம் நினைவுகளிலிருந்து அகல மறுக்கிறது. ஒரு கொடுமையான, மோசமான திருட்டைப் பார்த்துவிட்டு நாம் எத்தனை முறை, எதுவும் தெரியாதது போல் நகர்ந்திருப்போம்! அதற்காக நம்மைப் பழிப்பது போல், இந்த மழையின் சப்தம் காதுக்குள் தொடர்ந்து ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது.

படத்தில் நிகழும் சம்பவம் நம் கண்ணெதிரே நடந்தது போல நாம் பரிதவித்துப் போவதற்கு முக்கியக் காரணம், இந்தக் குறும்படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதை சொல்லும் முறைதான். ‘ஒரே காட்சியை தொடர்ச்சியாக மூன்று நொடிக்கு மேல் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த காட்சி அடுத்த சில நொடிகள் நமது கண்களை விட்டு அகலாது’ என்கிறது அறிவியல். இந்தக் குறும்படத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல், ஒரு புகைப்படம் மாதிரி அசையாத ஃபிரேமிற்குள் நகரும் பிம்பங்களைப் பார்க்கும்போது,

நாமும் கிட்டத்தட்ட மழையில் நனைந்துகொண்டே அந்த ரயில் நிலையத்திற்குள் சென்றுவிட்ட உணர்வு ஏற்படுகிறது. படம் என்கிற உணர்விற்கு பதிலாக, நாம் எதிரில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சம்பவம் என்கிற உணர்வை மனம், மூளைக்குள் செலுத்தி, அறிவியலையே கேள்விக்கு உட்படுத்துகிறது. இதுதான் காட்சி ஊடகத்தின் மகத்தான வலிமை. ‘லீ சாக்’ குறும்படத்தின் நேர்த்தியான ஒளியமைப்பும், ஒலியமைப்பும் கதையை நேரில் பார்க்கும் சம்பவமாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

படம்: லீ சாக்     இயக்கம்: கௌரி ஷங்கர்
நடிப்பு: ஹரிஹரன், விவேக் நேரம்: 09.46 நிமிடங்கள்
பார்க்க:   www.youtube.com/watch?v=Z3tD0Qplf_Y

ஒரு கொடுமையான, மோசமான திருட்டைப் பார்த்துவிட்டு
நாம் எத்தனை முறை, எதுவும் தெரியாதது போல் நகர்ந்திருப்போம்! அதற்காக நம்மைப் பழிக்கிறது இந்தப் படம்.

தன்னுடைய கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றிற்காக, சென்னையில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தை புகைப்படமாக எடுத்திருக்கிறார் கௌரி ஷங்கர். சில நாட்கள் கழித்து அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, இந்த புகைப்படத்தில் இருக்கும் பிம்பங்கள் அசைந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறார். பிறகு ஒரே நாளில் இந்தக் குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படம், படத்தொகுப்பு செய்யப்படவில்லை; பார்வையாளர்கள் பார்க்கும் காட்சிகள், எவ்வித கட்டும் (Cut) இல்லாமல், தொடர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

படம் பிடித்து முடித்த பின்னர் ரயில்வே காவல்துறை அதிகாரி வந்து, படம் பதிவு செய்யப்பட்ட டேப்பை வாங்கிக் கொண்டார். ‘‘அனுமதி இல்லாமல் படம் பிடிக்கக் கூடாது. நீங்கள் செய்தது தவறு’’ என்று சொல்லியிருக்கிறார். போராடி, டேப்பை பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார் கௌரி ஷங்கர். ‘‘வெளிநாட்டுப் படங்களே திரைப்பட ஆர்வத்தையும், ரசனையையும் வளர்த்தன’’ என்கிறார் இவர். ‘லீ சாக்’ என்பது பிரெஞ்சு மொழி வார்த்தை. அதன் அர்த்தம், The Bag.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி