வீட்டில் தூங்கும்போது ஏ.சி. வெடித்ததில் வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த மாதம் இறந்தனர். திருக்கோவிலூர் அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் பலியாகினர். அதிர்ச்சி தரும் இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு வாசகர் ஒருவர் நம்மிடம் கேட்ட கேள்வி இது. ‘‘ஏ.சியும், ஃப்ரிட்ஜும் வெடிக்குமா சார்?’’ அதிர்ச்சி விலகாமல் விசாரணையில் இறங்கினால், ‘‘வெடிப்பதற்கான சூழலை நீங்களே உருவாக்கித் தரும்போது வெடிக்காமல் என்ன செய்யும்?’’ என பல்ஸ் எகிற வைக்கிறார்கள் மெக்கானிக்குகள்.
‘‘இங்க, ஏ.சி, ஃப்ரிட்ஜ் வாங்குறவங்க பெரும்பாலும் அதோட விலையைத்தான் பார்க்கறாங்க. தரத்தைப் பத்திக் கவலைப்படுறதில்லை!’’ என கவலையோடு ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஏ.சி, ஃப்ரிட்ஜ் டெக்னீஷியனான பிஜிலி. ‘‘முன்னாடி, ஜி.ஐ ஷீட், தாமிர பைப்லைன், உறுதியான மெட்டல்னு கம்பெனிகளே தரமான பொருட்களைப் பயன்படுத் தினாங்க. ஆனா, இப்ப விலையைக் குறைக்கறேன்னு தரத்தை காம்ப்ரமைஸ் பண்ணிக்கறாங்க. தாமிரத்துக்குப் பதிலா அலுமினியம், மலிவான மெட்டல்கள், பிளாஸ்டிக், ஃபைபர்களைப் பயன்படுத்தி ஏ.சி., ஃப்ரிட்ஜ் செய்யிறாங்க.
இந்தப் பொருட்கள் எதுவும் ஹீட் தாங்காது. இப்பல்லாம் வீட்டு மின்சாரமும் ரொம்ப ஏறி இறங்கி ஃப்ளக்சுவேட் ஆகறதுனால ‘ஷார்ட் சர்க்யூட்’ உருவாகி வெடிச்சுருது’’ என்கிற பிஜிலி, அதற்காக விலை குறை ஃப்ரிட்ஜ்களை வாங்கவே கூடாது என்று சொல்லவில்லை. அதையும் சரியாகப் பராமரித்தால் காலாகாலத்துக்கும் உழைக்கும் என்கிறார். அவர் வழங்கும் பராமரிப்பு
டிப்ஸ்...ஏ.சி... ஒரு டன் ஏ.சி வைக்க வேண்டிய அறையில் ஒன்றரை டன் ஏ.சியை மாட்டிவிட்டு, பிறகு அதிகம் குளிருகிறது, கரன்ட் பில் அதிகம் வருகிறது எனப் புலம்புகிறவர்கள் இங்கு அதிகம். ஏ.சி வாங்கும் முன்னமே, தகுந்த டெக்னீஷியனை ஆலோசிக்க வேண்டும். ‘அறையின் வடிவத்துக்கு ஏற்ற ஏ.சி எது? அதை எப்படிப் பொருத்த வேண்டும்’ என்றெல்லாம் அவர்கள் பரிந்துரைப்பார்கள்.
ஏ.சியின் கண்டன்ஸர் உள்பட எந்தப் பகுதிகளைப் பார்த்து வாங்க வேண்டும் என்று கூட அவர்கள் அறிவுறுத்துவார்கள். அறையில் என்ன மாதிரியான பெயின்ட் அடிப்பது என்பதிலும் ஒரு லாஜிக் இருக்கிறது. சில வண்ண பெயின்ட்கள் அறையை அதிகம் குளிரூட்டலாம்; அல்லது குளிர்ச்சியே இல்லாமலும் செய்யலாம். இதையும் தகுந்த நிபுணர்களிடம் கலந்தாலோசித்து செய்வது நல்லது.
உங்கள் தேவைக்கு ஏற்றாற் போல் கூட, குறைய என மாற்றி வைக்காதீர்கள். ஏ.சியை 22 அல்லது 23 என இயல்பான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இப்போது வரும் பெரும்பாலான ஏ.சிகள் ஆட்டோமேட்டிக் ரகம். போதுமான குளிர்ச்சியைத் தந்தபின் தானாக ‘ஆஃப்’ ஆகி ரெஸ்ட் எடுக்கும். அறைக்குள் வெப்பம் அதிகரித்தால், மீண்டும் அதுவாகவே விழித்துக் கொண்டு குளிர்ச்சி தரும். ஆனால், சிலர் சீக்கிரம் குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக 16 பாயின்ட் வெப்பநிலை வரை வந்துவிடுகிறார்கள். இதனால் அந்தக் குளிர்ச்சியைத் தர முடியாமல் ஏ.சி ஓய்வின்றி தொடர்ந்து ஓடி, கடைசியில் பழுதாகிவிடும்.
வெளியில் போய்விட்டு வந்ததும் உடனே ஏ.சியை ஆன் செய்யாதீர்கள். வீட்டு ஜன்னல்களை திறந்து அறையினுள் போதுமான வெளிக்காற்று வந்த பிறகே ஆன் செய்ய வேண்டும். இல்லையெனில், அறையை மூடும்போது இருந்த நாற்றம் அப்படியே சுழன்றடிக்கும். இது உடலுக்கும் கெடுதல். இது கார் ஏ.சிக்கும் பொருந்தும்.
ஏ.சியை ஆன் செய்யும்போது, அறைக்கதவு முழுவதும் மூடி இருக்க வேண்டும். அடுத்த அறைக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் கதவைத் திறந்து வைத்தால் ஏ.சி தாங்காது.
மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஏ.சியின் ஃபில்டரில் படிந்திருக்கும் தூசியை துடைக்க வேண்டும். கோடைக் காலத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும், குளிர் காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் ‘சர்வீஸ்’ செய்தால், மின்சாரம் மிச்சப்படும். ஏ.சியும் நீண்ட காலத்திற்கு உழைக்கும். ஃப்ரிட்ஜ்... ஃப்ரிட்ஜுக்கு சர்வீஸ் தேவையில்லை. அதை வீட்டினரே சுத்தமாக பராமரிக்கலாம். மின்னழுத்தத்தை நிலைப்படுத்தும் ‘ஸ்டெபிலைஸரை’ தரமானதாக வாங்கி வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜுக்கென தனி ஸ்விட்ச் போர்டு அமைக்க வேண்டும். சில வீடுகளில் ஒரே ஸ்விட்ச் போர்டில் பல பிளக்குகள் வைத்து லைட், மிக்ஸி என பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு பெரிய ஆபத்தாகலாம். ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதால் வெளிக்காற்று உள்ளே சென்று ஈரப்பதமாகி ஃப்ரீஸரில் பனிக்கட்டிகள் ஆங்காங்கே உருவாகி இருக்கும். ஃப்ரிட்ஜை சிறிது நேரம் ‘ஆஃப்’ செய்தாலே போதும். தானாக அவை உருகி பின்புறமுள்ள டியூபின் வழியாக வெளியேறிவிடும். சிலர் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு குத்துவார்கள். இது ஆபத்தானது.
அஜாக்கிரதையால் ஃப்ரிட்ஜை சரியாக மூடாமல் விட்டால், உள்ளிருக்கும் குளிர்ச்சி வெளியேறி மின்சார செலவு அதிகமாகும். அதோடு ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸரையும் இது பாதிக்கும். வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வெளியூருக்குச் செல்வதாக இருந்தால் ஏ.சி, ஃப்ரிட்ஜ் இரண்டையும் சுவிட்ச் ஆஃப் செய்வதோடு, ‘ப்ளக்’குகளை கழற்றி வைத்து விடுவது நல்லது.
- பேராச்சி கண்ணன்