மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

தனிமை, துன்பம், துயரம், வலி, வேதனை... இன்னும் எத்தனை விதமாகக் குறிப்பிட்டாலும் இவற்றைப் போல உன்னதமானவை உலகில் எதுவும் இல்லை. இவை தரும் பாடம், நம்மை சத்தியத்திற்கு வெகு அருகில் அழைத்துச் செல்லும். எது நம்முடையது என்பதையும், எது நமக்கானது என்பதையும் உணர்த்தும் உன்னதமான நிமிடம், நிராயுதபாணியாக துன்பத்தின் முன்னால் நிற்கும் தருணம்தான். வேதனையால் தவிக்கும் தருணத்தில்தான் ஆன்மாவின் குரலை நம்மால் கேட்க முடிகிறது.

ஆன்மா என ஒன்று இருப்பது கூட அப்போதுதான் தெரிகிறது. சாமான்யனின் துன்பம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், தவசீலர்களுக்கு தனியான துன்பம் என்று எதுவும் இல்லை. காற்றில் அலைக்கழிக்கப்படும் பட்டாம்பூச்சியின் அவஸ்தையும் காலில் மிதிபடும் புல்லின் துயரமும், எறும்புக்கு பயந்து காதசைத்த வண்ணம் நடக்கும் யானையின் அச்சமும் அவர்கள் அறிவார்கள்.

சில நேரங்களில் அவர்களுக்கானதாக புரிந்துகொள்ளப்படும் விஷயங்கள்கூட அகிலத்திற்கானது என்பதை காலம் உணர்த்தும். கண்மூடி தியானத்தில் இருந்த அப்பாவு சுவாமிகளுக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் வார்த்தைகள் அவருக்கானது மாத்திரமல்ல, இந்த அவனிக்கேயானது. பிறவிப்பிணியில் சிக்கித் தவிக்கும் அனைத்திற்குமானது. தேவர்களும் அசுரர்களும் வாசுகிப் பாம்பின் உதவியோடு கடைந்தெடுத்த அமுதம் போல இறையான ஆன்மாவுக்கும் அசுரத்தனமான மனசுக்கும் மத்தியில் முருகனின் கண்ணசைவுக்காக மந்திர வார்த்தைகள் காத்திருந்தன.
அப்பாவு சுவாமிகளின் விழியோரம் ஈரமானது. வழியும் கண்ணீரோடு மந்திரத் தமிழும் உதயமானது.

‘அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க...’
என ஆரம்பித்தார்.

முப்பது பாடல்கள். ஒவ்வொரு எழுத்தும் மந்திரம்... ஒவ்வொரு வரியும் செறிவூட்டப்பட்ட அணுவைப் போல குமரனின் சக்தியைத் தாங்கி நின்றது. உலக எதிரிகளை எதிர்கொள்ள கவசம் தாங்கிய வீரர்கள் நிற்பது போல, இந்த மந்திர வார்த்தைகள் கண்ணுக்குத் தெரிந்த பிரச்னைகளையும் கண்ணுக்குத் தெரியாத மாயத் துயரங்களையும் கையில் வேல் தாங்கித் துரத்தும். பாராயணம் செய்த ஜீவனைக் காத்து நிற்கும் அரண் இது என்பதை அகக் கண்ணால் கண்டு சிலிர்த்தார், அப்பாவு.

நிச்சயம் அன்றைய அதிகாலை அமிர்த யோகத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை அமுதமயமான பிறவிப் பிணி அறுக்கும் மந்திரம் கிடைத்திருக்குமா?

கர வருடம், 1891ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 8ம் நாள் உதயத்தில் பூத்த இந்த மந்திர மலரை முருகனுக்குச் சூட்டி அழகு பார்த்தார் அப்பாவு சுவாமிகள். அன்று முதல் சண்முகக் கவசம் முருக பக்தர்கள் மத்தியில் மயிலாகப் பறந்தது. நதியாய் பிரவாகம் எடுத்தது. சிரத்தையுடன் பாடினார்கள். நோய் நீங்கியது. கடன் தீர்ந்தது.

 கவலை காணாமல் போனது. ‘இந்த உலகமே எனக்கு வேதனையாய் இருக்கிறது. ஆண்டவனை உணர வேண்டும். தியானம் சித்திக்க வேண்டும்’ என்பவருக்கு ராஜபாட்டையை காட்டியது. அப்பாவு சுவாமிகளின் மனத்துயரும் கதிரொளி கண்ட துளிப் பனியாய் மறைந்தது.

‘‘சரி, சண்முக கவசத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும்?’’- சிலர் கேள்வி கேட்டுக்கொண்டார்கள்.‘‘12 முறை, இல்லை... இல்லை... 36 முறை... கந்த சஷ்டி கவசம் அப்படித்தானே படிக்கிறோம்’’ - பலர் இப்படி பேசிக் களைத்தார்கள். ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லும் நுண்ணிய விஷயங்கள் இப்படித்தானே திசைமாறிப் போகிறது? எத்தனை தடவை என்பது முக்கியமல்ல. மனம் குவித்துச் சொல்வதுதான் முக்கியம். எண்ணிக்கை என்பது மனதை பழக்கத்திற்கு கொண்டு வரத்தான்.

 ‘ஒருமுறை சொன்னால் போதும்’ என்றால் சோம்பேறித்தனத்தில் சிலரது மனசு சிக்கிக் கொள்ளும். 36 தடவை சொல்லும்போது தானே ஒரு லயம் உருவாகி மந்திரத்தை மனம் இயல்பாகப் பிடித்துக்கொள்ளும். உள்ளே மந்திரம் தானாக மனனம் ஆகும். விளைவு... முருக சக்தி எந்நேரமும் உடனிருந்து காக்கும் என அப்பாவு சுவாமிகள் பலவாறு உணர்த்தினார்.

இப்படி சுவாமிகளின் ஞானத்தால் கவரப்பட்ட சின்னசாமிப் பிள்ளை, முத்தையாப் பிள்ளை, முத்துக்கருப்பப் பிள்ளை, சண்முகம் பிள்ளை என பல தமிழ் ஆர்வலர்களும் சான்றோர்களும் அப்பாவுவை குருவாகக் கொண்டார்கள். அப்பாவு சுவாமிகளின் வார்த்தையை வேதமாகக் கொண்டு தொழுதார்கள்.குகன் காட்டிய பாதையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார் அப்பாவு சுவாமிகள். சுவாமிகளுக்குக் கிடைக்கும் புகழ், மரியாதை சிலரது கண்களை உறுத்தியது. ‘என் கூட படித்தான். என்னோட வளர்ந்தான்.

நம்மூரில் வியாபாரம் செய்யறான். இதில் இவன் என்ன உசத்தி? நம்மள மாதிரிதானே கல்யாணம் செஞ்சி புள்ள, குட்டியோட இருக்கான்... அப்புறம் என்ன சுவாமி..? ‘முருகா... முருகா...’ன்னு நாலு வார்த்தை எழுதிட்டா, பெரிய இவரா? இவர் சொன்னா முருகன் ஓடி வராரா? இரு, நான் உன்னை ரோட்டுக்கு இழுக்கறேன்... வேலோட வந்து உன் முருகன் காப்பாத்தட்டும்’ - கொக்கரித்தார்கள்.

கொசுவும் பறக்கும். சக்கரவாஹமும் பறவைதான். சாக்கடை வாசம் செய்யும் கொசுவுக்கும் காற்றைக் கிழித்துக் கொண்டு ஆகாசத்தின் உச்சியில் திரியும் சக்கரவாஹத்திற்கும் வித்தியாசம் இல்லையா? கல்லடிகளையும் சொல் அம்புகளையும் அமைதியாய் எதிர்கொண்டார். இந்நிலையில் காட்டில் மரங்களை வெட்டி விறகாக விற்க ராமநாதபுரம் ஜமீனிடம் வியாபார ஒப்பந்தம் போட்டிருந்தார் அப்பாவு சுவாமிகள். சுவாமிகளின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், வேறு சிலரைத் தூண்டி விட்டு போட்டி வியாபாரம் நடத்தினார்கள். சுவாமிகள் எவ்வளவோ ஒதுங்கிப் போனாலும் பிரச்னை துரத்திக்கொண்டே இருந்தது.

ஒருநாள் போட்டியாளர்கள் புளிய மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டுவந்து, அப்பாவு சுவாமிகள் வியாபாரம் செய்யும் இடத்தில் கடை போட்டு வீண்வம்பு இழுத்தார்கள். சுவாமிகளின் நலன் விரும்பிகள் அவர்களுடன் மல்லுக்கட்ட... பிரச்னை பெரிதாகி வழக்கானது. அப்பாவு சுவாமிகள் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னார். காலத்தின் கோலம்... உண்மை எடுபடாமல் போனது. சில அதிகாரிகள், ‘‘அப்பாவு சுவாமிகளை சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டினார்கள். பணமும் அதிகாரத் திமிரும் விளையாடியது.

இதே நேரத்தில் குத்தகை பாக்கி செலுத்தவில்லை என நீதிமன்றத்தில் ஜமீன் நிர்வாகி வழக்கு தொடர்ந்தார். கீழ் கோர்ட்டில் சுவாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர, ஜமீன்தாரர் கோடசாமித் தேவர் வழக்கை அப்பீல் செய்தார். அப்பாவு சுவாமிகள் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவானது. அப்பாவு சுவாமிகளின் தரப்பு வக்கீல் மலாக்கா துரை எவ்வளவோ வாதாடியும் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்டார். ‘300 ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். சிறை வாசம் உறுதி’ என்ற நிலையில் கந்தனின் காலை கெட்டியாகப் பற்றிக் கொண்டார் அப்பாவு சுவாமிகள். ‘என்ன சோதனை முருகா..?’ எனக் கலங்கி நின்றார்.

அப்போது குறி சொல்லும் பெண்ணொருத்தி வந்தாள். ‘‘கலங்காதே அப்பாவு. உன் உயிர்த் துணை முருகனே. ஆண்டியே உன்னை என்றென்றும் காத்து நிற்பான். எல்லா வழக்கும் உனக்கு சாதகமாகவே முடியும். தங்கத்தைத்தான் அனலில் இட்டுக் காய்ச்சுவார்கள்... உரசிப் பார்ப்பார்கள்...

நீ தங்கம்’’ என்று வாக்கு உதிர்த்தாள். வந்தது வள்ளியாக இருக்குமோ என்னவோ... நிம்மதியாக உறங்கினார். இரவு கனவு. ‘கவலை தீர நவபாஷாண லிங்கங்கள் இருக்கும் தேவிப்பட்டினம் சென்று கடலில் நீராடி இறைவனை தரிசித்து வா...’ எனக் கட்டளையாய் மனதில் உதயமாக... அப்படியே செய்தார். வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களெல்லாம் அப்பாவு சுவாமிகள் தம் தரப்பினரோடு நீதிமன்றம் சென்றார். வழக்கு அடுத்தடுத்த நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. மூன்றாவது நாள் நீதிபதி வழக்கை விசாரிக்க அழைத்தபோது அப்பாவு சுவாமிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி நின்றார். எதிர்த் தரப்பில் அலட்சியத்தால் யாரும் வரவில்லை. உண்மையை உணர்ந்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். அப்பாவு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

முருகனின் அருள் முன்பு எந்த தீதும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற திடமான நம்பிக்கை அப்பாவு சார்ந்த அனைவருக்கும் தீவிரமாய் பற்றிக் கொண்டது. இந்நிலையில் முருகன் தங்கத்தை இன்னும் காய்ச்சி புடம் போட விரும்பினார். அப்பாவு சுவாமிகளுக்குத் அந்த விடியல் சுகமாய் இல்லை. வயிறு ஏதோ செய்தது. மெல்ல தொடங்கிய வலி, சற்று நேரத்தில் தீவிரமானது. வலியால் துடிதுடித்தார் அப்பாவு.

சகலமும் தரும் சதுரங்க பந்தம்!

‘‘என் மகளுக்கு அடிக்கடி வயிறு எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டாள். என்ன பிரச்னை எனக் கண்டே பிடிக்க முடியவில்லை. சிதம்பரத்தில் உள்ள பாம்பன் சுவாமிகள் மடத்தில் தரும் பௌர்ணமி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்று சொன்னார்கள். நம்பிக்கையுடன் அதைச் செய்தோம். பாம்பன் சுவாமிகள் அருளால் அவள் குணமாகி இன்று நன்றாக இருக்கிறாள். கடந்த ஆண்டு விபத்துக்குள்ளாகி என் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைத்த டாக்டர்கள், ‘இனி நடக்கவே முடியாது’ என்றார்கள். பாம்பன் சுவாமிகளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவர் அருளிய அசோக சால வாசத்தையும் சதுரங்க பந்தத்தையும் படித்தேன். இப்போது நடக்கிறேன். எங்கள் குடும்பத்தைக் காக்கும் கடவுள் பாம்பன் சுவாமிகள்’’ என்று சொல்லும் டி.உஷாராணி, குடும்பத்
தலைவி. விருத்தாசலத்தை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டு களாக பாம்பன் சுவாமிகளின் தீவிர பக்தை.சதுரங்க பந்தம்
வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

(இதை தினமும் பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு முன் தீபமேற்றி வைத்து பாராயணம் செய்ய, எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்ல முடியும். மனக்கவலை நீங்கும். இழந்த செல்வம் மீளும்)

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்