இன்டர்வியூ 3



‘‘சில்லமரத்துப்பட்டி மாடசாமி பையனா நீ! உங்கப்பா எவ்வளவு பெரிய ஆசிரியர். நேர்மையான மனுஷன். அவர்கிட்ட படிச்சவன்தான் நான். இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இந்த கேஷியர் வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை உனக்கு தபாலிலேயே அனுப்பியிருப்பேன்’’ - ஆர்.எம். எக்ஸ்போர்ட்ஸ் சேர்மன் ரகுநாதன் உற்சாகமாகப் பேசினார்.
எதிரில் அமர்ந்திருந்த முகுந்த் முகத்தில் ஏமாற்றம்.

‘‘சார், தப்பா நினைக்காதீங்க. இந்த வேலைக்கு நான் தகுதியானவனா இருந்தா எனக்கு வேலை கொடுங்க. என் அப்பா பேரை உபயோகப்படுத்தி வேலை வாங்குறது எனக்குப் பிடிக்காது’’ - நினைத்ததை பொசுக்கென்று சொல்லிவிட்டான். சில விநாடிகள் பேசாமலிருந்த சேர்மன் ரகுநாதன், தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

‘‘தம்பி, இந்த வேலைக்கு உன்னையும், இன்னொருத்தரையும் தேர்ந்தெடுத்து அதில் யாராவது ஒருத்தரை ஃபைனல் பண்ணச் சொல்லியிருந்தாங்க. உன்னை விட அந்த இன்னொரு ஆள் இந்த வேலைக்குப் பொருத்தமா இருப்பார்னுதான் எனக்குத் தோணிச்சு. உங்க அப்பா பழக்கத்துக்காக உன் கிட்ட வேலை நிச்சயம்னு சொல்லி அனுப்பிட்டு, பின்னாடி ஏதாச்சும் சாக்குப் போக்கு சொல்லி தவிர்த்துடலாம்னு நினைச்சேன். ஆனா, இந்த கேஷியர் வேலைக்கு திறமையைவிட நேர்மை, நாணயம்தான் முக்கியம். அது உன்கிட்ட இருக்கு. யு ஆர் அப்பாயின்டட்!’’     

ஜெ.கண்ணன்