புதுமை செய்தால் எந்தக் காலத்திலும் ரசிப்பார்கள்!



டி.வி.கோபாலகிருஷ்ணன்

கர்நாடக இசை உலகில் பெரிதாக மதிக்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை மியூஸிக் அகாடமி இந்த வருடம் வழங்கப்போவது இசை உலக ஜாம்பவான் குருஜி டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு! வரும் டிசம்பர் இசை விழாவில் இந்த கௌரவம் அவரைத் தேடி வரவிருக்கும் அறிவிப்பு இப்போதே வெளியாகிட்டது.

மூத்த கலைஞரும், பிரபல மிருதங்க வித்தகருமான குருஜி டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு இந்தப் பெருமை வழங்கப்படுவதில் இசை உலகுக்கே பெருமிதம். அவரை வாழ்த்துவதில் எல்லோருக்குமே தனி சந்தோஷம். நாமும் வாழ்த்துப் பூங்கொத்தோடு அவரைச் சந்தித்தோம்...

‘‘என்னுடைய தாத்தா திருப்பணிதுறா கோபாலகிருஷ்ண பாகவதர் சிறந்த வயலின் வித்துவான். என் தந்தை விச்வநாத பாகவதர் எனக்கு முதல் இசை குரு. எனக்கு சின்ன வயதில் பேச்சு வருவதற்கு முன்பே மிருதங்கம் வாசிக்க வந்தது. ஆறு வயதில் மிருதங்க அரங்கேற்றம்.

சித்தப்பா நாராயணசுவாமி ஐயர்தான் மிருதங்க குரு. எட்டு வயதில் செம்பை வைத்திய நாத பாகவதர் கச்சேரிக்கு நாலுகளை பல்லவிக்கு தனியாக வாசித்தேன். செம்பைதான் எனக்கு பாட்டுச் சொல்லி கொடுத்தார். குருவுக்கே மிருதங்கம் தொடர்ந்து வாசித்த பெருமை எனக்கு உண்டு. தண்டபாணி தேசிகர், துவாரம் வெங்கடசாமி நாயுடு போன்றவர்களுக்கு சிறு வயதிலே மிருதங்கம் வாசித்தேன்.’’
‘‘தங்களின் சிஷ்யர்கள் பற்றி..?’’

‘‘நான் திருப்பணிதுறாவிலிருந்து சென்னை வந்து பிரபலமாக வாசித்துக் கொண்டிருக்கும்போது, எல்.வைத்தியநாதன், ஜி.கே.வெங்கடேஷ், வி.ஏ.சேகர் (ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா) போன்றவர்கள், சினிமா உலகிலிருந்து வந்து என்னிடம் பேசி நிறைய கற்றுக் கொண்டு போவார்கள்.

இளையராஜா காலை நாலு மணிக்கு வந்து, பாட்டு கற்றுக்கொண்டு ஸ்டூடியோ ரெக்கார்டிங்குக்கு எங்கள் வீட்டிலிருந்தே போவார்...’’‘‘தங்களின் புரட்சியான ‘FUSION’ நிகழ்ச்சி பற்றி..?’’‘‘70ம் ஆண்டிலேயே முதன் முதலாக திலீப், சிவமணி, கதிரி, வீணை காயத்ரி, மகேஷ், கிடார் என்று பல பிரபலங்களுடன் ‘ஜாஸ்’ நிகழ்த்தினேன். அதற்கு பல எதிர்ப்புகள். புதுமைகள் பூக்கும்போது எதிர்ப்புகள் இருப்பது சகஜம்தான்.

அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சமீபத்தில் கூட, மிகப் பிரபலமான கிளீவ்லாண்ட் தியாகராஜ உற்சவத்திற்கு அழைக்கப்பட்டேன். வி.வி.சுந்தரம், பாலு போன்றவர்களின் பெரு முயற்சியால் நடத்தப்படும் இந்த வைபவத்தில், சங்கீத ரத்னாகர விருதை கதக் கலைஞர் பிருஜி மஹராஜோடு பெற்றது மிகவும் பெருமை. என்னுடைய இசை நிகழ்ச்சி அங்கு பெரிதும் வரவேற்கப்பட்டது. எந்தக் காலத்திலும் ரசிக்கப்பட வேண்டும் என்றால் நாம் வாழும் காலத்தில் நாம் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்!’’

படங்கள்: புதூர் சரவணன்

பாபநாசம் அசோக்ரமணி