சினிமா திடீர் விபத்து...விவசாயம் என் ஆசை!



சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத்

‘‘இந்தா வந்துட்டார்ல இன்னொரு மணிவண்ணன்...’’ என படம் பார்த்தவர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத். நையாண்டி கலந்த நாட்டுக்குத் தேவையான வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர். பேட்டி என்றதுதான் தாமதம்...

‘‘அண்ணே, எப்ப, எங்கன்னு மட்டும் சொல்லுங்க’’ என்று அடக்கம் காட்டுகிறார்.
‘‘வேலூர் பக்கத்தில் சின்ன பள்ளிக்குப்பம்தான் என்னோட ஊரு. சென்னை தரமணி பாலிடெக்னிக்கில் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிச்சேன்.

‘சினிமா என்னோட சின்ன வயசு கனவு’ன்னு எத்தனையோ பேர் பேட்டியில் சொல்லியிருப்பாங்க. நமக்கு அப்படி இல்லை. விவசாயம்தான் என் ஆசை. இதுக்காகவே அப்பாகிட்ட அடிக்கடி திட்டு வாங்குவேன். எந்த வேலைக்குப் போனாலும் ஆரம்பத்தில் ஆர்வமா இருக்கும்... அப்புறம் அலுத்துடும்! சவாலான வேலையாவும் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தும் வேலையாகவும் செய்யணும்னு மைண்ட்ல ஒரு யோசனை ஓடிக்கிட்டே இருந்தது. திடீர்னு சினிமாவுக்கு போகணும்னு தோணிச்சு. முயற்சி எடுத்த மூணு மாசத்திலேயே உதவி இயக்குனராகிட்டேன்.’’
‘‘உங்களுக்குள்ள சினிமா தாக்கமே இருந்ததில்லையா?’’

‘‘எதுவுமில்லை. கொஞ்சம் படிப்பேன்... அவ்வளவுதான். திடீர்னு கடவுளோட அசரீரி மாதிரி தோன்றியதுதான், என்னை சினிமாவுக்குள்ள கொண்டு வந்தது. பார்த்திபன் சார்கிட்டதான் முதல்ல வேலை செய்தேன். ‘சினிமாவில் ஜெயிக்க வெறும் கனவும் ஆசையும் மட்டும் போதாது. நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்’னு பின்னாடி உணர்ந்தேன். பிறகு இயக்குனர் ராஜு முருகன்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்தேன். அவர்தான் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கணும் அதை எப்படி சினிமாவாக்கணும்னு சொல்லிக் கொடுத்தார்.

விஜய்மில்டன் கிட்ட ‘கோலி சோடா’ படத்தில் வேலை செய்யும்போதுதான் ‘சதுரங்க வேட்டை’ கதையை எழுதினேன். இயக்குனர் நலன்குமாரசாமி மூலமா மனோபாலாகிட்ட இந்த கதையை சொன்னேன். குறும்பட இயக்குனர்கள் நிறைய பேர் பெரிய திரைக்கு வந்துக்கிட்டிருக்குற காலம் இது. ‘குறைந்த பட்ஜெட் படமா இருக்கணும்... அதே சமயம் வெரைட்டியான கதையா இருக்கணும்’னு நினைச்சேன். ஏமாத்து வேலைகள் பத்தி என் மைண்ட்ல நிறைய சம்பவங்கள் இருந்துச்சு. அந்த சம்பவங்களைத் தோண்டினா அரசியல், மக்களின் மனநிலை, பணம்னு எடுக்க எடுக்க சுரங்கம் மாதிரி வந்துக்கிட்டே இருந்தது. அதையெல்லாம் ஒண்ணா கோர்த்துத்தான் இந்தக் கதையைப் பண்ணினேன்!’’

‘‘வெற்றிக்குப் பிறகு மனநிலை எப்படி இருக்கு?’’

‘‘ஹேப்பியா இருக்கேன். சினிமாக்காரர்கள், ரசிகர்களிடமிருந்து மரியாதை கிடைச்சிருக்கு. இப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் படம் வந்து ரொம்ப நாளாச்சுன்னு பாராட்டுறாங்க. மக்கள் கைதட்டி ரசிக்கிறாங்கன்னு தியேட்டர்ல ரிப்போர்ட் சொல்றாங்க. 85 இடங்களில் ஆடியன்ஸ் கை தட்டுறாங்கன்னு அசிஸ்டென்ட்ஸ் வந்து சொன்னாங்க. எடுத்த விஷயத்தை சரியா செய்துவிட்டோம்ங்கிற திருப்தி கிடைச்சிருக்கு.’’

‘‘மணிவண்ணனோட உங்களை ஒப்பிட்டு பேசுறாங்களே?’’

‘‘அதுக்குக் காரணம் அரசியல் வசனம்தான். அவரோட ஒப்பிட்டுப் பேசுறது ஒரு வகையில் சந்தோஷம்னாலும், கொஞ்சம் அதிகமாவும் தெரியுது. அவருக்கு இருந்த அறிவு, படிப்பு எனக்கில்லை. நான் ஒரு குழப்பமான குழந்தை. எனக்குள் நிறைய கேள்விகளும் குழப்பங்களும் இருக்கு. அதைத்தான் படத்துல பிரதிபலிச்சிருக்கேன். அரசியல் வசனம் எழுத இங்கே சில பேர்தான் இருக்காங்க. சிலருக்கு பயம் இருக்கு. நான் பயப்படுவதற்கு ஒண்ணுமில்லை. இழப்பதற்கும் எதுவுமில்லை. மக்களுக்கான கதையை மக்களிடமிருந்துதான் எடுக்கணும்.’’
‘‘அடுத்து?’’

‘‘இந்தப் படத்தின் வெற்றி எவ்வளவு தூரம் போகுது என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த கதை. கண்டிப்பா இம்முறை ஆக்ஷன்தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்குது. ‘சதுரங்க வேட்டை’யில் மாஸ் ஹீரோ இல்லை. பெரும்பாலும் புதுமுகங்கள்தான். நல்ல படம்னாலும் மக்களை தியேட்டருக்கு வரவழைச்ச திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கிறேன். விவசாயத்தை மையமா வச்சி அதில் இருக்கும் அரசியல், எதிர்கால ஆபத்தைக் கலந்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கு. எந்தக் கதையா இருந்தாலும் அதில் சினிமா மொழி இருந்தால்தான் ஜெயிக்கும். வெகுஜன மக்களைப் போய் சேராத படம் எதுக்கும் பயனில்லை என்பதில் தீர்க்கமா இருக்கேன்.’’

 அமலன்
படங்கள்: புதூர் சரவணன்