அவன் அவள் unlimited



கறுப்பு யாருக்கு பிடிச்ச கலரு?

அழகென்பதுநமது சொந்த தோலுக்குள் மகிழ்ச்சியாக வாழ்வதே!

வெய்ன் பால்ட்ரோ

நிறம்... உலகின் பழம்பெரும் அரசியல். தமிழ்நாட்டில் ஜாதி சென்ஸிடிவ்... இந்தியாவில் மதம் சென்ஸிடிவ்... உலகம் முழுமைக்கும் நிரந்தரமான சென்ஸிடிவ், மனிதர்களின் தோல் நிறம். தள்ளிவிடப்படுவது காந்தியாக இருந்தாலும் ரவீந்திர ஜடேஜாவாக இருந்தாலும் அதன் பின்னணியில் இருப்பது நிறவெறியே. ஐரோப்பியர்களுக்கு ஆப்ரிக்கர்கள் மீதும் ஆசியர்கள் மீதும் இருப்பதுதான் நிறவெறியா என்ன? ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே ஒரு நிறவெறி உண்டு. ‘நாங்கதான்யா சரியான கலர்’ என்ற திமிர் உண்டு. தங்களைப் போல் இல்லாதவர்களை பழிப்பதும் கிண்டலடிப்பதும் எல்லா இனக்குழுக்களிடமும் சகஜம்.

சீனாவில் ஒரு கர்ண பரம்பரைக் கதை...

நூவா என்ற பெண் தெய்வம் களிமண் பொம்மைகளாகத்தான் மனிதர்களை உருவாக்கியதாம். முதலில் அது உருவாக்கிய பொம்மைகள் அனலில் அதிகம் வெந்துவிட்டனவாம். எனவே,
அவற்றை ஆப்ரிக்காவுக்கு அனுப்பிவிட்டது. அடுத்து செய்த பொம்மைகள் சரியாக வேகாமல் அரைகுறையாய்ப் போய்விட, தெய்வம் அவற்றை ஐரோப்பாவில் போட்டுவிட்டதாம். அடுத்ததாக சரியான விகிதத்தில் சரியான அளவில் வார்த்து எடுத்த மனிதர்கள்தான் சீனர்களாம்.

இதைக் கேட்கும் மற்ற இனத்தவர்களுக்கு சிரிப்பு அல்லது கோபம் வரும். சீனர்களின் பர்சனாலிட்டி உலக அளவில் பெற்ற பெயர் அப்படி. அவர்களிடமும் நிறவெறி... நிறத்திமிர் இருப்பதற்கு இந்தக் கதை சிறந்த சான்று. இதே மாதிரியான நிறவெறி எல்லா இனங்களுக்கும் உண்டு... நமக்குள்ளும் உண்டு. விடுதலைப் போராட்டத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற நம் தமிழ் மொழிபெயர்ப்பு கோஷம் கூட நூறு சதவீதம் சரியானதா என்ன? ‘க்விட் இண்டியா’ என்ற வார்த்தைகளில் நிறபேதமே இல்லையே!

வெளிநாட்டில் பணியாற்றும் நண்பர் ஒருவர், தன் ஐரோப்பிய நண்பரிடம் காமராஜர் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தபோது ‘கறுப்பு காந்தி’ என்று காமராஜரை வர்ணித்திருக்கிறார். குழம்பிப் போன ஐரோப்பிய நண்பர் கேட்ட ஒரே கேள்வி... ‘‘காந்தியே கறுப்புதானே!’’அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் இண்டியன் கலர். அதில் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருப்பது அவர்கள் கண்ணுக்குத் தெரியாது. நாமும் வெள்ளைக்காரர்கள், கறுப்பர்கள் எனப் பொத்தாம் பொதுவாக சில இனக்குழுக்களை அழைப்போம். அந்த வெள்ளையில் பல ஷேடுகள் இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாது. ஆப்ரிக்க கறுப்பர் இனத்திலும் ‘எனக்கு சிவப்பாகப் பெண் வேண்டும்’ என தரகரிடம் தகராறு செய்யும் மாப்பிள்ளை நிச்சயம் இருப்பான்.

இனங்களுக்கு மத்தியில் நிற வேறுபாடு என்றால் அது அரசியல் பிரச்னை. ஒரே சமூகத்துக்குள் இருக்கும் நிற பேதம் பெரும்பாலும் பெண்ணியப் பிரச்னை. காரணம், காதல், கல்யாணம் போன்ற இணைத் தேடல்களில் ‘தோல் நிறம்’ முக்கியமான தகுதியாக பெண்கள் மீது சுமத்தப்படுகிறது. ‘‘ஐரோப்பிய கலாசாரமே உட்புகாத சமூகத்தில் கூட, தன்னை விட வெளுத்த நிறத்தில் இருக்கும் பெண்ணைத்தான் ஆண் விரும்புகிறான்’’ என ஆய்வு செய்து அறிவிக்கிறார் பீட்டர் ஃப்ராஸ்ட் எனும் மானுடவியலாளர்.

 ‘‘கறுப்பு என்றாலே இருட்டு, எதிர்ப்பு, மறுப்பு, ஆபத்து, சோகம் எனப் பார்ப்பதும் வெள்ளை என்றாலே வெளிச்சம், அமைதி, சமாதானம், சந்தோஷம் எனப் பார்ப்பதும் மனிதனின் அடிப்படை உள்ளுணர்வு’’ என இதற்கு காரணம் சொல்கிறார் உளவியலாளர் பியர்ரி பெர்கே. உள்ளுணர்வு தவிர, இதற்கு இன்னொரு சமூகக் காரணமும் உண்டு. வெயிலில் காய்ந்து வேலை செய்யும்போது தோல் கறுப்பாகும். ஆக, ‘‘கறுப்பாக இருக்கும் பெண் பொருளாதாரத்தில் குன்றியவள், வறட்சியின் குறியீடு என ஆண் முடிவு கட்டி விடுகிறான்’’ என்கிறார் பியர்ரி.

நம்மூரில் கல்யாணப் பேச்சு என்றாலே மாப்பிள்ளை வீடுகளில் ‘பொண்ணு அழகா இருக்கணும்’ என்பார்கள். ‘அழகா இருக்கணும்’ எனும் இந்த வாக்கியத்தில் ‘சிவப்பா இருக்கணும்’ என்ற அர்த்தம் எத்தனை சதவீதம் கலந்திருக்கிறது? நம்மூர் தரகர் ஒருவரிடம் இதற்கு மார்க் போடச் சொன்னோம். ‘‘கிட்டத்தட்ட 80 சதவீதம் அழகுன்னா கலருன்னுதான் சார் அர்த்தம்’’ - யோசிக்காமல் சொன்னார் அவர். இன்னொருவர், இன்னொருவர் என 10 தரகர்களிடம் இதே மார்க்கைக் கேட்டோம். சராசரியாக அனைவரும் தந்த சதவீதம் 86. பெண் வீட்டார் இதே மாதிரி ஒரு ‘அழகை’ மாப்பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதில்லையா?

‘‘ரொம்ப கறுப்புன்னா ரிஜெக்ட் பண்ணுவாங்க. ஆனா, கலருக்கு கண்டிஷன் எல்லாம் போடுறதில்லை’’ - அந்தப் பத்துப் பேருமே ஒப்புக் கொண்ட கருத்து இது.
அப்போ, கறுப்பாய்ப் பிறந்த பெண்களுக்கு கல்யாணமே ஆகாதா? ஆகும். அது அந்த மாப்பிள்ளை என்ன கலர், அவர் கண்ணுக்கு எது சிவப்பு, அவருக்கு எவ்வளவு நாளாய் பெண் கிடைக்கவில்லை, இந்தப் பெண் வீட்டில் எவ்வளவு டௌரி கொடுக்க ரெடி என்பதையெல்லாம் பொறுத்தது.

‘‘பார்த்தீங்களா? இதான் நம்ம ஊர் நிலைமை!’’ எனத் துவங்குகிறார் ‘வொர்த் ஆஃப் வுமன்’ என்ற பெண்கள் அமைப்பின் நிறுவனரான கவிதா இம்மானுவேல். இந்த அமைப்பு நடத்தும் ‘கறுப்பு அழகானது’ (ஞிணீக்ஷீளீ வீs ஙிமீணீutவீயீuறீ) என்ற பிரசாரம் தேசிய அளவில் பெரிய ஹிட். நடிகைகள் நந்திதா தாஸ், விசாகா சிங் போன்றவர்கள் கூட இந்த பிரசாரத்தில் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘சிவப்பா இல்லாட்டி அவளுக்குத் தன்னம்பிக்கையே இருக்காதுன்னு டி.வி விளம்பரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லுது. சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னும் கறுப்பா இருக்கவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னும் நம்ம சமூகத்தில நிறைய மூட நம்பிக்கைகள். இதுக்கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்க இந்த பிரசாரத்தை ஆரம்பிச்சோம். கல்லூரியிலும் கல்யாண மார்க்கெட்டிலும்தான் பெண்கள் நிற பேதத்தால் பாதிக்கப்படுறாங்கன்னு நினைச்சோம்.

ஆனா, பள்ளிக் குழந்தைகள்கிட்ட நாங்க பண்ணின ஆய்வில், அந்தச் சின்ன வயசிலேயே அவங்ககிட்ட நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை உருவாகிடுறது தெரிஞ்சுது. இதுக்கு சமூகமும் ஆசிரியர்களும் மட்டும் காரணமில்லை. சொந்த அப்பா, அம்மாவே சிவப்பா இருக்குற சகோதரியை வேற மாதிரி நடத்துறதா நிறைய குழந்தைகள் சொன்னாங்க. கறுப்பும் ஒரு அழகுதான்... ஒவ்வொரு மனுஷங்ககிட்டயும் தனித்தனியா ஒரு அழகு இருக்குன்னு எல்லாருக்கும் புரிய வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்!’’ என்கிறார் அவர்.

சமூகம்தான் ‘அழகா இரு... கலரா இரு’ எனப் பெண்கள் மீது பிரஷர் ஏற்றுகிறது. பின்பு அதே சமூகம் பெண்களை அலங்காரப் பைத்தியம் என்றும் கலாய்க்கிறது. நிஜமாகவே பெண்கள் அலங்காரப் பைத்தியங்களா? ஷாப்பிங் சுனாமிகளா?

பொண்ணு லேசா
மாநிறம் போலிருக்கே...
நமக்கு இன்னும் சிவப்பா பாருங்க தரகரே!

இவன் கலரை கண்ணாடியில பார்த்ததே இல்லையா?

நீங்கள் யார்?

இதை ஒரு பூஜ்ஜியம், ஆங்கில ‘ஓ’, அல்லது ‘வட்டம்’ என எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு தனி பேப்பரில் இதை வரையுங்கள் பார்க்கலாம்.
ஓகே... நீங்கள் இந்த வட்டத்தை கடிகார சுழற்சிப்படி வரைந்தீர்களா? அல்லது அதற்கு எதிர் கோணத்தில் வரைந்தீர்களா? அதற்கேற்ற உங்கள் கேரக்டர் தலைகீழாக...

நீங்கள் வலது கை பழக்கமுள்ளவர் என்றால் கடிகார சுழற்சிக்கு எதிர்ப்புறமாகவும், இடது கை பழக்கம் உள்ளவர் என்றால் கடிகார சுழற்சிப்படியும் வட்டம் வரைய வேண்டும். அதுதான் நார்மல். இதிலிருந்து சுழற்சி மாறுபட்டிருந்தால், உங்களுக்குள் ஒரு புரட்சிக்காரர் இருக்கிறார் என்று அர்த்தம். வளரும் குழந்தைகளிடம் இப்படி மாறுபட்ட சுழற்சி மன அழுத்தத்தின் குறியீடு என்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம் அது!

- தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்