மொட்டை மாடி காய்கறிக் கடை!



விலைவாசியை சமாளிக்கும வழி

கர்நாடகாவில் கொஞ்சம் கூடுதலாக வெயிலடித்தால் நமக்குத் தக்காளி கிடைக்காது. மகாராஷ்டிராவில் அடைமழை பெய்தால் வெங்காயம் தட்டுப்பாடாகி விடும். ஆந்திராவில் பனி கூடுதலானால் பீன்ஸ் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் தட்பவெப்பம் மாறினால் நாம் உருளைக்கிழங்கு சாப்பிட முடியாது. காய்கறிகளின் விலை விண்ணுக்குப் பறக்கிறது. தக்காளி சட்னி கேட்டால் நிஜமாகவே ரத்தக்களறி ஆகிவிடும் போல! பீன்ஸ், முருங்கைக்காய் என சாதாரண காய்கள்கூட செஞ்சுரி போட்டு விட்டன.

ஒரு ரசம் வைத்து சாப்பிடுவதுகூட பணக்காரத்தனமான செய்கை ஆகிவிடும் போல! தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது; எல்லா காய்கறிகளுக்குமே வெளி மாநிலங்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை. இனி விலை ஏறுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை என்று வயிற்றில் புளி கரைக்கிறார்கள் கோயம்பேடு வியாபாரிகள்.

இந்தக் கொடுமைக்கு என்ன தீர்வு?

‘‘தீர்வு நம் வீடுகளிலேயே இருக்கிறது...’’ என்கிறார் சுங்கத்துறை யில் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், ‘குட் கவர்னன்ஸ் கார்ட்ஸ்’ (நிஷீஷீபீ நிஷீஸ்மீக்ஷீஸீணீஸீநீமீ நிuணீக்ஷீபீs)   அமைப்பின் தலைவருமான எஸ்.எஸ்.ராதா
கிருஷ்ணன். அவர் முன்வைக்கும் தீர்வு, ‘கிச்சன் கார்டன்’!

அதென்ன கிச்சன் கார்டன்?

‘‘சென்னையில் நில விவசாயம் பெருமளவு குறைந்து விட்டது. வீடுகளில் தோட்டம் போடக்கூட மண் தரை இல்லை. நீலாங்கரையில் இருந்து ஆவடி வரை சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கிறது சென்னை. சுமார் 1 கோடி பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 95% பேருக்கு விவசாயத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களுக்கான உணவை கிராமத்தில் உள்ளவர்தான் உற்பத்தி செய்யணும்.

அண்மையில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் நகரத்தில் வசிக்கிறார்கள். கிராமத்து மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு நகரத்தை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இந்த சூழலில், கூடுதல் விலை கொடுத்து வாங்கினாலும் காய்கறியின் தரம் கேள்விக்குறிதான்! அவ்வளவு பூச்சி மருந்து தெளிக்கிறார்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் இணைத்து தீர்வைத் தேடியபோது கிடைத்ததுதான் கிச்சன் கார்டன். ஒவ்வொரு வீட்டிலும் மாடித்தோட்டம் போடுவதன் மூலம் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான சத்தான, விஷமற்ற காய்கறிகளை தாங்களே விளைவித்துக் கொள்ள முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று கேள்வி எழும். கொஞ்சம் உழைப்பும், ஆர்வமும் இருந்தால் நிச்சயம் இது சாத்தியம்’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இவர் தன் வீட்டு மாடியில் 41 வகையான காய்கறிகளையும், பழங்களையும் விளைவித்துக் காட்டுகிறார். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி கொடுத்து மாடித் தோட்டம் போட்டும் கொடுத்திருக்கிறார். தோட்டம் போடுவதில் உள்ள சிக்கலே மண்தான். நகரத்தில் மண்ணுக்கு எங்கே போவது?

‘‘கிச்சன் கார்டனுக்கு மண்ணே தேவையில்லை. தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கப்படும் பஞ்சு கயிறு திரிக்கவும், கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. அதில் கிடைக்கும் கழிவுகளே போதும். அந்தக் கழிவில் ஆர்கானிக் உரங்களை கலந்து மெஷின் மூலம் பேக் செய்து விற்பனைக்கு வருகிறது. மண்ணை விட அதிவேகத்தில் அதில் செடிகள் வளரும். பாலி எத்திலீன் மெட்டீரியலில் தடுக்கு மாதிரியான ஷீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அதை தேவையான அளவுக்கு வெட்டி 4 பக்கமும் மடக்கினால் தொட்டி ரெடி. அந்தத் தொட்டியில் தேங்காய் பஞ்சுக்கழிவைக் கொட்டி சமப்படுத்தி விதைகளைப் போட்டு வளர்க்கலாம். உரம் தேவையில்லை. களை வராது. வாரத்துக்கு 2 நாள் தண்ணீர் விட்டால் போதும். கீரைகள், சுரை, பாகற்காய், வெள்ளரி, முள்ளங்கி, கத்தரி, வெண்டை, தக்காளி என 50க்கும் மேற்பட்ட காய்கறிகளை விதைக்கலாம். தேவைப்பட்டால் மேலே பசுமை வலை போடலாம். கீழே தண்ணீர் கசியும் என்று கவலைப்பட்டால் அதற்கும் ஒரு தடுக்கு உள்ளது. அதை தொட்டிக்குக் கீழே போட்டுவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. சாதாரணமாக கீரைகளை தரையில் விதைத்தால் 30 நாளில் அறுவடை செய்யலாம். இதில் 20 நாளிலேயே அறுக்கலாம். 

சென்னையில் சராசரியாக ஒரு வீட்டில் 300 முதல் 500 சதுர அடி மொட்டை மாடி உள்ளது. இதில் தோட்டம் போட்டால் தினமும் ஒன்றேகால் கிலோ காய்கறி எடுத்து விடலாம். தினமும் 1 மணி நேரம் ஒதுக்கினால் போதும். இல்லத்தரசிகள், பெரியவர்கள் இதை பொழுதுபோக்காக செய்யலாம். 10 மாதத்தில் தோட்டத்துக்குச் செய்த செலவை எடுத்துவிடலாம். இடத்துக்கும், தேவைக்கும் தகுந்தமாதிரி குறைந்த செலவிலேயே இந்த தோட்டத்தைப் போட முடியும். இதன் மூலம் மார்க்கெட் தேவையைக் குறைக்கலாம். தேவை குறையும்போது பொருளின் விலையும் குறையும்...’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்த கிச்சன் கார்டன் மூலம் வீட்டுக்குள் இறங்கும் வெப்பத்தை 50% கட்டுப்படுத்த முடியும் என்கிறார் இவர். ‘‘தோட்டத்திற்குப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 5 வருடங்களுக்கு அப்படியே இருக்கும். உரம், பூச்சிமருந்து இல்லாமல் விளையும் இந்தக் காய்கறிகள் 60% கூடுதல் சுவையோடும் சத்தோடும் இருக்கும்...’’ என்கிறார். 

இவர் வீட்டு மொட்டைமாடியின் ஒரு பகுதியில் சோலார் பேனல் மூலம் மின்சாரமும் எடுக்கிறார். வீட்டின் பின்புறத்தில் பயோகேஸ் தயாரிக்கிறார். மாடித்தோட்டம் போடுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ராதா கிருஷ்ணன், பள்ளி பள்ளியாகப் போய் மாடித்தோட்டம் பற்றி வகுப்பெடுகிறார். (தொடர்பு கொள்ள: 9841023448)

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்