இனி நகைச் சீட்டு கட்ட முடியாது!



கிடுக்கிப்பிடி போட்ட கம்பெனி சட்டம்

திருமணம் என்றால் நம்மூரில் தங்க நகை கட்டாயம். ‘இழுத்துப் பிடிக்கும் மாத பட்ஜெட்டில் தங்கமெல்லாம் எங்கே..!’ என புலம்பும் மிடில்கிளா ஸுக்கு இதுவரை வரப்பிரசாதமாக இருந்தன மாதாந்திர நகை சேமிப்புத் திட்டங்கள். இந்த திட்டத்துக்குத்தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆப்பு வைத்திருக்கிறது மத்திய அரசு.

தற்போதைய கம்பெனி சட்டத்தின்படி, இனி இப்படிப்பட்ட திட்டங்களை நான்கு வருடம், ஐந்து வருடம் என நீண்ட திட்டங்களாக நடத்த முடியாது. திட்டத்தின் கால அவகாசம் 11 மாதங்களைத் தாண்டக் கூடாது. 12 சதவீதத்துக்கு மேற்பட்ட லாபத்தை சீட்டு கட்டுபவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. பொதுமக்களிடம் பெறப்படும் மொத்த டெபாசிட் தொகை, நகைக்கடையின் மதிப்பீட்டுத் தொகையில் 25 சதவீதத்தை தாண்டக் கூடாது எனக் கண்டபடி கடுமையாகியிருக்கிறது கம்பெனி சட்டம்.

இது நல்லதா? கெட்டதா? துறை வல்லுநர்கள் சிலரைத் துருவினோம்...‘‘வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தவிர்த்து மற்றவர்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெறுவதற்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது கடுமையாக்கப்பட்டிருப்பதுதான் பிரச்னை’’ எனத் துவங்கினார் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்தி லால் சல்லானி.

 ‘‘அங்கீகரிக்கப்படாத சில நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஏராளமான பணத்தை டெபாசிட்டாகப் பெற்று சில சமயம் ஏமாற்றி விடுகின்றன. இதனால்தான் கம்பெனி சட்டம் இப்படிக் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் நகைக்கடைகளும் வருவதுதான் நகை சேமிப்புத் திட்டத்துக்கு ஆபத்தாகப் போய்விட்டது. இது நகை சேமிப்பு திட்டத்தில் இதுவரை பலன் பெற்ற ஏராளமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைத்தான் பாதிக்கும்.

இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டிருக்கிறோம். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம். புதிய விதிகளில் எல்லாவற்றையும் எதிர்க்கிறோம் என்று நகைக்கடைக்காரர்கள் சொல்லவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டது எனும் வகையில் இந்த சட்டத்தின் சில விதிகளை நாங்கள் வரவேற்கத்தான் செய்கிறோம். ஆனால், வெறும் 11 மாதத்துக்குள் நகை சேமிப்புத் திட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. குறைந்தபட்சமாக 15 மாதமாவது இருந்தால்தான் தங்கத்தின் ஏற்ற இறக்கத்தின் மூலம் குறைந்தபட்ச லாபத்தையாவது பார்க்க முடியும். அந்த லாபத்திலிருந்து 14 சதவீதம் வரை வாடிக்கையாளர்களுக்கு லாபம் கொடுக்க முடியும்.

ஆனால், வெறும் 11 மாதம்தான் அவகாசம் என்றால் அரசு நிர்ணயித்துள்ள 12 சதவீத லாபத்தைக் கூட மக்களுக்கு வழங்க முடியாது. தங்க முதலீட்டின் பலன்களை அதற்கும் கீழ் குறைக்கவும் முடியாது. வங்கி வட்டியே 9 சதவீதம் வரும்போது இதில் ஏன் பணம் போட வேண்டும் என்ற கேள்வி வரும். மற்றபடி, நார்மலாகவே கடை முதலீட்டில் 25 சதவீதத்துக்கு குறைவாகத்தான் மக்கள் டெபாசிட்டுகளை பெறுகிறார்கள் நகைக்கடைக்காரர்கள். அதற்கு மேல் டெபாசிட் பெறச் சொல்லி அரசே சொன்னாலும் செய்ய மாட்டார்கள். அது அவர்களுக்கே ரிஸ்க்தான்’’ என்றார் அவர் தெள்ளத் தெளிவாக!

கம்பெனி சட்டம் இப்படி கெடுபிடியாகியிருப்பது தெரிந்ததுமே சில கடைக்காரர்கள் தங்கள் தங்க நகை சேமிப்புத் திட்டத்தை பாதியிலேயே நிறுத்தி, செலுத்திய தொகையை மக்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் விதிகளுக்கு ஏற்ப திட்டத்தை சுருக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களும், ‘‘இந்தப் புதிய விதிகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டால் நகைக்கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தத் திட்டத்தான் எந்த விதமான லாபமும் நிச்சயம் கிடையாது’’ என்கிறார்கள் வருத்தமாக. குறைந்தபட்சமாக மாதம் ரூ.500, ரூ.1000 என சீட்டு கட்டுபவர்கள் உண்டு. 11 மாதங்கள் மட்டுமே கட்ட முடியும் என்றால், அவர்களால் முழுசாக மூன்று கிராம் தங்க நகை கூட வாங்க முடியாது.

பங்குச் சந்தை நிபுணர் நாகப்பனிடம் இந்தப் பிரச்னை பற்றி உரையாடினோம். ‘‘நிச்சயம் இந்தப் புதிய விதிகள் விவாதத்துக்குரியவைதான். முதலில் ஒரு வர்த்தக நிறுவனம் அதிக லாபம் கொடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கான விதிகளைப் போடுவது சரியல்ல. நகைக் கடைக்காரர்கள் சம்பாதிக்கிறார்கள்... கொடுக்கிறார்கள்.

நிதி நிறுவனங்களைப் போல் பெரும் பணக்காரர்கள் எல்லாம் முதலீடு செய்யும் திட்டமாக இந்த நகை சேமிப்பு மாறிவிடும் என்ற பயத்தால் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டிருக்காது. காரணம், பணம் இருப்பவர்கள் நகை சேமிப்பு திட்டத்தில் போய்ச் சேர மாட்டார்கள். நேரடியாகக் கடைக்குப் போய் தங்கத்தை வாங்கி லாக்கரில் வைப்பார்கள். தங்கத் திட்டத்தில் சேருவது ஏழைகளும், நடுத்தரக் குடும்பத்தினரும்தான். சிறுகச் சிறுக சேமித்து இப்படித்தான் தங்கம் வாங்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் இனி சிரமப்படுவார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் தங்கத்தின் மீதான மோகம் சமூகத்தில் குறைந்தால், அது நல்ல விஷயம்தான்! தமிழ் சினிமா ஒன்றில் ‘போய்யா... போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கய்யா’ என்று டயலாக் வரும். அப்படித்தான் தங்கம் விஷயத்திலும் பொது மக்கள் விரக்தி கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம், தங்கம் ஒன்றும் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போவதில்லை. தங்கத்துக்கு ஒரு நிலையான மதிப்பும் கிடையாது.

ஒருவேளை, லாட்டரி மாதிரி நம் நாட்டு மக்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இந்த தங்க நகை திட்டங்களில் போட்டு விட்டு தங்கள் குடும்பத்தின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் போய்விடுகிறார்கள் என்று அரசு நினைத்துவிட்டதோ என்னவோ! இனிமேலாவது நம் மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்து, குடும்பத்தின் மற்ற தேவைகளான படிப்பு, சுகாதாரம், உணவு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம்’’ என்றார் அவர்.இன்னும் கொஞ்ச நாளில் தக்காளி வாங்கவே சேமிப்புத் திட்டம் வேணும் போல... இதில் இனி எங்கே தங்கம்?

ரூ.500, ரூ.1000 என நகைச் சீட்டு கட்டுபவர்கள் உண்டு. 11 மாதங்கள் மட்டுமே கட்ட முடியும் என்றால், அவர்களால் மூன்று கிராம் தங்கம் கூட வாங்க முடியாது.

டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
ஆர்.சந்திரசேகரன்