கடைசி பக்கம்



அப்பாவை இழந்த அவனுக்கு அம்மா என்றாலும் வெறுப்பு! அவளுக்கு ஒரு கண்தான் இருக்கும்; இன்னொரு கண் இருந்த இடம் வெற்றிடமாக - கோரமாக இருக்கும். அம்மா முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். பள்ளியில், நண்பர்கள் வட்டத்தில் அம்மா பற்றி ஏதும் சொன்னதில்லை.

ஒருநாள் அவனது பள்ளிக்கு அருகே கூலி வேலை செய்ய வந்த அம்மா, ஆசையாக அவனைப் பார்க்க வந்தாள். அவன் கோபமாகத் திட்டி விரட்டினான். ஆனாலும் சிலர் பார்த்து விட்டனர். ‘‘டேய், சுரேஷோட அம்மாவுக்கு ஒரே ஒரு கண்ணுதான்டா!’’ என பையன்கள் கிண்டல் செய்ய, அவமானத்தில் ஊரை விட்டே ஓடினான்.

தூரத்து நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப் படித்து, வாழ்வில் முன்னேறி, ஒரு நிறுவனத்தின் நிர்வாகி ஆகி, தனக்கு யாருமே உறவுகள் இல்லை என பொய் சொல்லி, ஒரு வசதியான குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கும் அப்பா ஆகிவிட்டான். கிராமத்தில் ஒரு நண்பன் இதைக் கேள்விப்பட்டு அவன் அம்மாவிடம் சொல்ல, மகனையும் பேரக் குழந்தைகளையும் பார்க்கும் ஆவலில் போனாள். ‘‘இங்கேயும் வந்து தொலைச்சிட்டியா?’’ என இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாசலிலேயே திட்டி விரட்டினான். மருமகளையும் பேரக் குழந்தை களையும் தூர இருந்தே பார்த்துவிட்டு நிறைவோடு அகன்றாள் அம்மா.

சில மாதங்கள் கழித்து அவன் அம்மா இறந்துவிட்ட தகவலைத் தெரிவித்த நண்பர்கள், அவள் கடைசியாக எழுதிய ஒரு கடிதத்தை அவனுக்கு அனுப்பியிருந்தனர். ‘மகனே! சின்ன வயதில் விபத்தில் நீ ஒரு கண்ணை இழந்தபோது, என் கண்ணை முழுமனதோடு கொடுத்தேன். என் கண்களால் நீ உலகைப் பார்க்கிறாய் என்ற பெருமிதத்தோடு நான் போகிறேன்’ என்றிருந்தது அதில்...அன்பிருக்கும் இடத்தில் குறைகள் தெரிவதில்லை!       

நிதர்ஸனா