நியுஸ் வே



*‘மெட்ராஸ்’ படம் ஆகஸ்ட் ஆரம்பத்தில் வந்திருக்க வேண்டியது. அண்ணன் படத்திற்கு இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதால் தள்ளி வைத்து விட்டார்கள். ஒரு மாதமாக வீட்டுப் பக்கமே வராமல் தனி வீடு எடுத்து பரமக்குடியில் தங்கி ‘கொம்பனில்’ மூழ்கியிருக்கிறார் கார்த்தி.

*‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியுடன் ஜோடி போடும் கேத்ரின் தெரசா
ஏற்கனவே கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்தவர். தற்போது ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்து வருபவர் மேக்கப் போடுவதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்வது தான் இயக்குனர்களின் எரிச்சலாம்.

*தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘அத்தரிண்டிக்கி தாரேதி’ படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் ‘நான் ஈ’ சுதீப் ஜோடியாக நடிக்கக் கேட்டபோது, கால்ஷீட் இல்லை என நாசூக்காக மறுத்து விட்டார். தமிழும் தெலுங்குமே அவரது கவனப் பட்டியலில் இருக்கிறது.

*சிம்பு திடீரென்று ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டுவிட்டார். இன்னும் ‘இது நம்ம ஆளு’ ஷூட்டிங் பாக்கியிருக்கிறது. டைரக்டர் பாண்டிராஜ் வெறுத்துப் போய் விட்டாராம். ‘‘முடி வளர்ந்ததும் ஷூட்டிங் வச்சுக்கலாம் பாஸ்’’ என சொல்லியிருக்கிறாராம். சொந்தப் படம்னாலும் இவ்வளவு லொள்ளு கூடாதுங்கோ!

*‘குக்கூ’ எடுத்த ராஜு முருகன் அடுத்த ஸ்கிரிப்ட்டை எழுதிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட். தனுஷ்தான் ஹீரோ. கதை நிமித்தமாக ஊர் ஊராகப் போய் நிறைய மனிதர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

*கொஞ்சம் மனக்கஷ்டத்தில் இருக்கிறார் ஜீவா, நன்றாக வந்து கொண்டிருந்த கேரியர் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. பெரும் ஈடுபாட்டோடு நடித்த ‘யான்’, இன்னும் திரைக்கு வரவில்லை. ‘புறம்போக்கை’ மறுத்து, அந்தப் படமும் ரிலீசுக்கு நெருங்கிவிட்டது. கொஞ்சம் நிதானமாக படங்களை இனி தேர்வு செய்யப் போகிறாராம்.

*சத்தம் காட்டாமல் இன்னொரு ஸ்டார் கூட்டணி உருவாகிவிட்டது. விஜய்யும், சசிகுமாரும் கூடிப் பேசியிருக்கிறார்கள். பாலா படம் முடித்து விட்டு சசி வரவும், சிம்புதேவனை முடித்துவிட்டு விஜய் திரும்பவும், இனி அடுத்த சசிகுமார் டைரக்ஷனில் விஜய்தான் ஹீரோ. பரபரக்கிற
ஆக்ஷனாம்.

*ஆகஸ்டில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கிற்கு ரெடியாக இருந்தார் கமல். கோர்ட் ஆணை வந்து அவரை ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தமவில்லன்’ ஃபைனல் வேலைகளில் ஈடுபடச் செய்துவிட்டது. அடுத்த புரட்சி என்ன சார்?

*வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் ‘மாஸ்’ ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் சூர்யாவுக்கு நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள். நயனைவிட படத்தில் தனக்கு முக்கியத்துவம் குறைவு என்றாலும் கிளாமர் ஏரியாவில் அவரை முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் எமி. சமீபத்தில் ஒரு விளம்பர நிறுவனத்துக்காக இவர் கொடுத்த மேலாடையற்ற போஸ் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

*‘அரிமா நம்பி’ வெற்றிக்காக அஜித் பாராட்டும் வாழ்த்தும் சொன்னதே விக்ரம்பிரபுவின் சமீபத்திய சந்தோஷம். தனக்குள் இயக்குனர் ஆசையும் ஒளிந்திருப்பதாக சொல்லும் விக்ரம்பிரபு காஜோல், மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் தீவிர
ரசிகராம்!

*இது ஒரு நெகிழ வைக்கும் ஆன்லைன் சம்பவம். அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்தாள், சோஃபியா ஸ்டெஃபெல் என்கிற இந்தக் குழந்தை. பிறக்கும்போதே கல்லீரலில் ஒரு கட்டி. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களில் இறந்து விட்டாள். உடலெங்கும் குழாய்கள் பின்னியிருக்க, மருத்துவமனையில் எடுத்த இந்த ஒரே படம்தான் அவள் நினைவாக இருந்தது. ‘‘வீட்டுக்கு வராமலே என் மகள் இறந்துவிட்டாள்.

அவள் நினைவாக இந்தப் படத்தை மட்டும் வீட்டுக்கு எடுத்துப் போகிறேன். இத்தனை குழாய்களோடு அவளைப் பார்க்க மனம் பதறுகிறது. யாராவது போட்டோஷாப்பில் என் மகளை மீட்டுத் தாருங்களேன்’’ என சோஃபியாவின் அப்பா நாதென் ஸ்டெஃபெல் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். நூற்றுக்கணக்கான கணினி நிபுணர்கள் அவர் மகளின் புகைப்படத்தை மறு உருவாக்கம் செய்து தந்தார்கள். அதில் ஒன்றுதான் இது!

*‘யாவரும் நலம்’ எடுத்த விக்ரம் குமார் சத்தம் காட்டாமல் சூர்யாவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். நாகேஸ்வர ராவ் இறுதியாக நடித்த ‘மனம்’ பார்த்து நெகிழ்ந்து விட்டார் சூர்யா. அதற்குப் பிறகு தான் விக்ரம் குமாருக்கு இந்த வாய்ப்பு. சூர்யா பற்றி இன்னொரு நியூஸ்... எப்போதும் பிறந்த நாளை அமைதியாகக் கொண்டாடுகிற சூர்யா இந்தத் தடவை அதிரடி செய்துவிட்டார். நண்பர்கள் ஏற்பாடு செய்த விழாவில் சூர்யாவின் நண்பர்களோடு, விஜய்சேதுபதி, பார்த்திபன், விக்ரமன், பாண்டிராஜ் என நிறையக் கூட்டம். அடுத்த வருடம் நாற்பதைத் தொடுகிறார் சூர்யா.

*முன்பெல்லாம் குழந்தையை வெளியில் காட்ட மாட்டார் பாலா. இப்போது ஃப்ரீயாக இருந்தால் எல்லா விழாக்களுக்கும் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார். ஹீரோக்களுக்கு அவர் மகள்தான் லேட்டஸ்ட் செல்லம்.