பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 21 அருண்

விடையில்லாத வினா

கலை மீது செலுத்தப்படும் வன்முறையும், கலைக்கு விதிக்கப்படும் தடையும், அந்தக் கலையை மேலும் செழுமைப்படுத்தி இன்னமும் காத்திரமாகவே வெளிக்கொண்டு வருகின்றன. ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால், பல்வேறு தடைகளைத் தாண்டியாக வேண்டும்;

அரசின் மூர்க்கத்தனமான பிடிவாதங்களை அனுசரித்துப் போக வேண்டிய அவசியம் நேரும். இருந்தாலும், இன்றுவரை ஈரானில் வெளியாகும் திரைப்படங்கள் உலக அளவில் பெரிய கவனத்தைப் பெறுகின்றன. அரசின் எல்லா கட்டுப்பாடுகளையும் நிறைவு செய்து, அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கும் இந்தக் கலை வெளிப்பாடு மிக முக்கியமானது.

சிறுவர்களை மையமாகக் கொண்டு, சிறுவர்களின் அக உலகை வெளிப்படுத்துவதும், சிறுவர்களை வைத்து சிறுவர்களுக்காக படமெடுப்பதும், சிறுவர்கள் மூலம் பெரியவர்களின் வாழ்வை அலசுவதும், சமூக மூடப் பழக்க வழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துவதும் என கலை அதன் சகல பரிமாணங்களையும் எட்டுகிறது.

திரைப்படங்களில் வணிகத்திற்கான கூறுகளை அமெரிக்கத் திரைப்படங்கள் ஆராய்ந்துகொண்டிருந்த வேளையில், திரைப்படங்களில் இருக்கும் கலைக்கான கூறுகளை பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆராயத் தொடங்கின.

தமிழ் சினிமா அமெரிக்க திரைப்படங்களின் ஆதார ஸ்ருதியை அடையாளம் கண்டு, திரைப்படங்களை நல்ல வணிகமாக மாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், சினிமாவின் கலைத் தன்மையை மீட்டெடுக்கத் தொடங்கியிருக்கின்றன தமிழ் குறும்படங்கள். ஈரானில் திரைப்படங்கள் நிகழ்த்திய அற்புதங்கள், இங்கே குறும்படங்கள் வாயிலாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரைப்பட உருவாக்கத்தில் போதுமான பயிற்சி இல்லை

என்றாலும், தேர்ந்தெடுக்கும் கதைக் களத்தில் தங்களின் ஆளுமையை தமிழ் குறும்பட இயக்குனர்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சிறுவர்களின் அக உலகை பல தமிழ் குறும்படங்கள் சன்னமாகத் தொட்டுப் பேசி அலசியிருக்கின்றன. சிறுவர்கள் வாயிலாக தத்துவ விசாரணைகள் மேற்கொள்வதும், சமூகக் கட்டமைப்புகளைத் தகர்த்துப் பார்ப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த வகையில் ‘வினா’ என்கிற குறும்படம் முக்கியமானது.

தந்தையை இழந்த சிறுவன் கவின். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த தாய். எப்போதும் எதையாவது கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருக்கும் கவினுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாள் அவனது தாய். மாங்கன்று ஒன்றைக் காட்டி அவன் எழுப்பும் அறிவியல் ரீதியான கேள்விக்கு, ‘‘எனக்கு விடை தெரியாது’’ என்று சொல்லும் தாய், அதே சமயம் அவனை மெச்சிக்கொள்ளவும் செய்கிறாள்.

ஆனால் தொடர்ந்து பள்ளியில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஒருநாள் கவினின் தாயை அழைத்து, வகுப்பு ஆசிரியை புகார் செய்கிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனது தாயிடம், ‘‘இவனை வச்சிக்கிட்டு எப்படித்தான் பொறுத்துப் போறீங் களோ... ஒரு நாள் சமாளிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது’’ என்று கேலியாகப் பேசுகிறார்கள்.

 தொடர்ந்து அவன் எழுப்பும் கேள்விகளாலும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களின் கேலியாலும் எரிச்சல் கொள்ளும் தாய், அவனைக் கண்டிக்கிறாள். பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் தோழர் அவளைத் தடுத்து, ‘‘இனி நீ அம்மாவிடமும், என்னிடமும் நிறைய கேள்விகளைக் கேள், மற்றவர்களிடம் கேட்காதே’’ என்று சொல்லி அவனைத் தேற்றுகிறார்.

ஒருநாள் கவின் பள்ளிக்குச் சென்று திரும்பும்போது, கதவு உள் தாழ் இடப்பட்டிருக்கிறது. வெளியில் இருந்து எவ்வளவு தட்டியும் திறக்காததால், ஜன்னல் பக்கம் போய் எட்டிப் பார்க்கிறான் சிறுவன் கவின். சிரித்த அவன் முகம், சோகமாக மாறுகிறது. மீண்டும் வாசல் அருகே வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

சற்று நேரத்தில் ஒரு ஆண் உள்ளிருந்து வெளியே வந்து, தன்னுடைய காலணியை அணிந்துகொண்டு வெளியேறுகிறார். சோகத்துடன் கவின் எழுந்து தெருவில் நடக்கிறான். கவினைத் தேடி அலைகிறாள் அவனது தாய். அடுத்து என்ன நடந்தது என்பதை தெளிந்த நீரோடையைப் போல மிக அமைதியான திரைக்கதையின் மூலம் இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோயிலில் மகனுக்கு திருநீறும் குங்குமமும் இடும் தாய், தன்னுடைய நெற்றியில் திருநீறை மட்டுமே இட்டுக்கொள்கிறாள். ‘‘ஏம்மா நீங்க குங்குமம் வைக்காம, திருநீற மட்டும் வச்சிக்கிறீங்க’’ என்கிறான் கவின். ‘‘அப்பா இல்லை இல்ல, அதனால அம்மா நெத்தியில குங்குமம் வச்சிக்கக் கூடாது’’ என்கிறாள் அவனது தாய். இறுதிக் காட்சியில் இன்னொரு ஆணுடன் உறவு ஏற்படுத்திக் கொள்கிறாள்.

கோயிலில் சமூகம் உருவாக்கி வைத்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும் அவள், தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுப்பதில் சமூகத்தின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறுகிறாள். புறத் தோற்றம் சார்ந்த கட்டுப்பாடுகளை மனித மனம் பொறுத்துக் கொள்கிறது; ஆனால் அகம் சார்ந்த, உடல் இயக்கம் சார்ந்த எந்தக் கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த உளவியலை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத சமூகம்தான் இன்று வரையிலும் பல மூடப் பழக்கவழக்கங்களை பெண்கள் மீது திணித்து, அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

குறும்படம் தொடங்கும்போதே, சிறுவன் மாடிப்படிகளில் ஏறி வருவதை, அவனது ‘பாயின்ட் ஆஃப் வியூ’வில் காட்டியிருப்பார்கள். ‘இந்தப் படம் முழுவதையுமே, சிறுவனின் பார்வையில் பார்க்க வேண்டும்’ என்கிற குறிப்புதான் அது. இறுதிக் காட்சியில், தன்னுடைய தாய் இன்னொருவனுடன் உறவு கொள்வதால் சிறுவன் அவள் மீது கோபம் கொள்ளவில்லை.

தன்னுடைய தாயின் அன்பு இன்னொருவருக்கு பகிரப்படுகிறது என்கிற சிறுவர்களுக்கே உரித்தான உளவியலால்தான், அவனது முகம் சோகமாகிறது. இந்த அர்த்தம் தொனிக்கும் வகையில்தான், தன்னுடைய தாயின் செருப்பு இருக்கும் இடத்தில் இருந்த தன்னுடைய செருப்பை சிறுவன் நினைவு கூறும் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

கவின், ‘‘அம்மா! நான் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன்’’ என்று சொல்லும்போது, தன்னுடைய காதலன் வீட்டிற்கு வருவதைத்தான் மகன் கண்டுபிடித்திருப்பானோ என்கிற அச்சத்தில், ‘‘என்ன... என்ன கண்டுபிடிச்ச?’’ என்று அவனது தாய் பேசும் வசனமும், தாயாக நடித்த பெண் ணின் உடலசைவுகளும், குரலின் ஏற்ற இறக்கங்களும் அப்படியே நாடகத்தனமாக இருக்கிறது.

 கவின் பாத்ரூமில் நுழையும்போது, சமையல் அறையில் தோசை வார்க்கப்படுவது நல்ல நையாண்டி என்றால், தெருவில் நடந்து வரும்போது, ‘‘ஏம்மா இந்தக் கன்னுக்குட்டி, மாட்டோட மடிய சாப்பிடுது’’ என்று கேள்வி கேட்பது, சிறுவர்களின் மனதில் எழும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் காட்டும் காட்சியாகவே இருக்கிறது. தன்னுடைய தாயின் அன்பு இன்னொருவருக்கு பகிரப்படுகிறது என்கிற சிறுவர்களுக்கே உரித்தான உளவியலால், அவனது முகம் சோகமாகிறது.

படம்: வினா
இயக்கம்: கு.கி.பத்மநாபன்
நேரம்: 14.45 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: ம.முருகன்
இசை: மோகன் ராம்
படத்தொகுப்பு: முகேஷ் நந்தகோபால்
பார்க்க: www.youtube.com/watch?v=bDUr7kG_UcM

தொடர்ந்து நிறைய குறும்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த கு.கி.பத்மநாபன், சிறுவர்களின் அக உலகை மையமாக வைத்து, பெற்றோர்களின் உறவுமுறையை அலச விரும்பும் கதையைத் தெரிவு செய்து குறும்படம் ஆக்கியிருக்கிறார். படம் எடுக்கும்போது நிறைய பிரச்னைகளை சந்தித்தாலும், தன்னுடைய சொந்தப் பணம் நாற்பதாயிரம் ரூபாயை செலவு செய்து படத்தை முடித்திருக்கிறார். தமிழில் குறும்படங்கள் தோன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட குறும்படம்.

எனவே பெரிய சந்தைப்படுத்தல் இல்லாமல், முதலீடு செய்த பணம் அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. எனினும் ‘வினா’ குறும்படம் நிறைய விருதுகளையும், பாராட்டுகளையும் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. முதலீடு, நஷ்டம் என்று வியாபாரக் கூறுகளைத் தாண்டி,  அங்கீகாரம், திருப்தி என்கிற கலைக்கான கூறுகளை அடையா ளம் கண்டுகொள்ளத் தொடங்கியிருக்கும் பத்மநாபன், பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய படைப்பாளிதான்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி