தேசிய விருது வாழ்நாள் சாதனை கிடையாது!



இயக்குநர் புத்ததேவ் தாஸ் குப்தா

ஒவ்வொரு தடவையும் இந்த ஊர் எனக்கு பல மாற்றங்களைத் தந்துக்கிட்டே இருக்கு. சென்னையின் பண்பாடு, கலாசாரம், சினிமா, அரசியல்னு கவனிச்சுக்கிட்டே இருக்கேன். எத்தனையோ வருஷங்களாக வந்துகொண்டே இருந்தாலும் இந்த ஊர் எனக்குப் பிடிக்கிறது. என்னோட சினிமா எனக்கு முக்கியம். எதிலும் சமாதானம் அடையாதது என் பாணி’’ - எந்த இறுமாப்பும், பெரிய இயக்குநர் என்ற தோரணையும் இல்லாமல் பேசுகிறார் இயக்குநர் புத்ததேவ் தாஸ் குப்தா. இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை.

இவரது ஐந்து படங்கள் தேசிய விருது வென்றன; இரண்டு முறை ‘சிறந்த இயக்குனர்’ விருது பெற்றார். இன்னும் எத்தனையோ விருதுகள். ‘பேரா’ முதற்கொண்டு ‘உத்தாரா’, ‘ஜனாலா’ உள்ளிட்ட படங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத வாழ்பனுபவம். ‘‘மிகவும் நிதானமான அனுபவ வரிசை உங்களுடையது. இந்த இடைவெளியும், நிதானமும் நீங்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டதா?’’

‘‘என் படங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என விரும்புகிறேன். வாழ்க்கை மிகவும் சிறியது. அதற்குள் அதை இந்தச் சமூகத்திற்கு பயனுடையதாக்க விரும்புகிறேன். அதற்கு என் வழி, சினிமா. என்னால் மக்களின் மூன்றாம்தர உணர்வுகளுக்குத் தீனி போட முடியாது. பலூனில் இருந்து கண்ணுக்குத் தெரியாத துளை வழியாக காற்று போவது மாதிரி வாழ்க்கை கசிகிறதோ என எனக்குத் தோணும்.

அப்படி வாழ்க்கை கழிவதற்குள் என் படங்கள் மக்கள் மனசில் நல்ல தாக்கத்தை முன்னிறுத்தினால் மகிழ்வேன். படங்களுக்கு நிறைய திட்டமிடுகிறேன். என் படங்களில் வேடிக்கைகளுக்கும், கேளிக்கைக்கும் இடமில்லை. என் வேலை, வெளிப்படையாக நீதி போதனை செய்வதல்ல.

நான் சந்திக்கிற மனிதர்கள், சூழல்கள் அவற்றின் அனுபவங்களிலிருந்து உருவாக்கிக் கொண்ட நியாயங்களை மட்டும் என் படங்களில் முன்வைக்கிறேன். எங்கும், யாரும் காணக்கூடிய, எளிதில் கைவரக்கூடிய மிக எளிய மனிதர்களையே நான் கையாளுகிறேன். என்னுடைய படங்கள் சிறியவை. நானும் பேராசை கொண்டவன் அல்ல.

 எனக்கான தேவைகள், ஆசைகள், அவசியங்கள் மிகவும் குறைவு. என்னால் எந்த ஒரு சூழ்நிலையிலும், மனிதர்களிடம் பொருந்திப் போக முடியும்.’’ ‘‘மிகவும் அர்த்தச் செறிவுள்ள மிடில் சினிமாக்கள், மக்களிட மிருந்து விலகி நிற்கிறதே... ஏன்?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. சினிமா மாறிவிட்டது. என் படங்களின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் எந்நாளும் என்னை ஒதுக்கி வைக்கவில்லை.

எனக்கு மக்கள் மீது புகார் கிடையாது. சினிமா என்கிற கலையின் அதிகபட்ச சாத்தியங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் எனக்குக் குறி. என் படத்தை பப்பி லஹரி கூட தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

ஆனால், யாருக்காகவும் என் பட பாணியை, தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டேன். என் வேலையில் தலையிட யாருக்கும் அனுமதியில்லை. மும்பை முதலான நகரங்களில், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் அர்த்தம் செறிந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சினிமா ரசனைக்கு மக்களை குறை சொல்ல முடியாது. அவர்கள் எங்கே நல்லது நடந்தாலும் ஆதரிக்கிறார்கள். நாம்தான் அவர்களைச் சென்றடைய வேண்டும்.’’

‘‘இங்கே சில பேர் தேசிய விருது பெற்றதையே கௌரவமாகக் கொண்டு திருப்தி அடைந்து விடுகிறார்கள்...’’ ‘‘எனக்கு இதுவரை 19 முறைக்கு மேல் தேசிய விருது கிடைத்திருக்கிறது. எனக்கு அதைப் பற்றி எந்த பெருமிதமும் கிடையாது.

நமக்கு தேசிய அங்கீகாரம் கிடைப்பது, இன்னும் நம் பங்கை ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான். தேசிய விருதுகள் எனது முகப்பு அறையின் எந்தப் பகுதியையும் அலங்கரிக்கவில்லை. எடுத்து உள்ளே வைத்துவிட்டேன். துக்கங்களின் வேர்களைச் சென்றடைகிற பயணத்தை நாம் இன்னும் மேற்கொள்ள வேண்டும். இங்கே பொதுவான சினிமாக்களில் மனிதர்களின் புறவுலகமும், மகிழ்ச்சியான கணங்களும்தான் சித்தரிக்கப்படுகின்றன.

அவர்களின் வேதனைகள், பாடுகள், மனத்தாங்கல்கள், உறவுச்சிக்கல்களை நாம்தான் கொண்டுவர வேண்டும். புது இயக்குநர்களுக்கு இந்தப் பொறுப்பு இருக்கிறது. அதை அவர்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

 ஒரு நடிகனுக்கோ, இயக்குநருக்கோ தேசிய விருது என்பது அந்த வருஷத்தின் நடிப்பு, இயக்கத்திற்குத்தானே தவிர மொத்த வாழ்க்கைக்கான கிரீடம் கிடையாது. அந்தக் கிரீடம் எத்தனையோ கலைஞர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. விருதுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பயணத்தை நிறுத்திவிடக் கூடாது!’’

ஒரு நடிகனுக்கோ, இயக்குநருக்கோ தேசிய விருது என்பது அந்த வருஷத்தின் நடிப்பு, இயக்கத்திற்குத்தானே தவிர மொத்த வாழ்க்கைக்கான கிரீடம் கிடையாது.

நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்