சென்னையில் கலக்கும் மீன் டாக்டர்!



கலர் கப்பீஸுக்கு காய்ச்சல்... கோல்டன் ஃபிஷ்ஷுக்கு ஹார்ட் அட்டாக்!

கலர் மீன் தொட்டிகளின் நடுவே அமர்ந்திருக்கிறார் அந்த ‘டாக்டர்’. பதற்றத்தோடு ஒருவர் ஓடி வருகிறார். ‘‘சார்... உடம்பு சரியில்ல... சரியா சாப்பிடல... வயிறு அப்படியே சுருங்கிப்போச்சு... என்ன செய்றதுன்னு தெரியல’’ என்கிறார்.

‘‘மோஷன், யூரின் எல்லாம் எப்படிப் போகுது?’’ என விசாரிக்கிறார் டாக்டர். கடைசியாக, ‘‘இந்த மருந்தைக் கொடுங்க... சரியாயிடும்’’ என்கிறார் கூலாக. வந்தவர் கையோடு ஒரு தண்ணீர்ப் பையில் போட்டுக் கொண்டு வந்திருந்த அந்த பேஷன்ட்... ஒரு கலர் கப்பீஸ் மீன்!

‘‘என்ன சார் ஆச்சரியப்படுறீங்க? மீன்களும் நம்மை மாதிரிதானே! அதுங்களுக்கும் காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு, தொற்று நோய், தோல் நோய்... ஏன் ஹார்ட் அட்டாக் கூட வரும்’’ என நம் பல்ஸை எகிற வைக்கும் ராஜாராமன், சென்னை கொளத்தூரில் ‘அக்வா கிளினிக்’ நடத்தி வருகிறார். அநேகமாக இந்தியாவிலேயே மீன்களுக்காக ஒரு மருத்துவமனை நடத்து வது இவர் ஒருவர் தான் என்கிறார்கள்.

‘‘நான் புதுக்கோட்டைக்காரன். எம்.எஃப்.எஸ்சினு சொல்ற மீன்வள அறிவியலில் மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டு இங்க வந்தேன். இந்த ஏரியா கலர் மீன்களுக்கும் அதுக்கான பண்ணைகளுக்கும் பேர் போனது. 2006ல இருந்து இந்த கிளினிக்கை நடத்திட்டு வர்றேன். வெளிநாடுகள்ல மீன்களுக்காக ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்காங்க.

மீன் வளர்க்கிறவங்களும் அந்த மீன்களைப் பற்றி அப்டேட்டா இருப்பாங்க. ஒரு நோய்ன்னா உடனே கன்சல்டன்ட் கிட்ட கொண்டு வந்துருவாங்க. அங்க மீன்களுக்கு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை எல்லாம் பண்றாங்க. அது மாதிரி இங்கே யும் ஆகணும்ங்கிறதுதான் என் கனவு. ஏதோ இப்ப நம்மூர்ல காஸ்ட்லியான வாஸ்து மீன்களை நிறைய பேர் வளர்க்க ஆரம்பிச்சிருக்கறதுனாலதான் மீன்களுக்கு வைத்தியம் பார்த்து அதோட உயிரைக் காப்பாத்தணும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு’’ என்கிறவர், மீன் வளர்ப்பவர்கள் தெரிந்து கொண்டே தீர வேண்டிய சில அடிப்படைகளைப் பகிர்கிறார்...

‘‘முதல்ல, நீங்க வாங்குகிற மீன் எந்த நிலையில இருக்குனு உங்களுக்குத் தெரியாது. ஒரு கடையில வாங்கினதும் முதல்ல அதுக்கு தடுப்பு மருந்து கொடுக்கணும். அப்ப தான், அது உங்க தொட்டிக்கு ஏற்ற நிலையில வளர ஆரம்பிக்கும். கழிவுகள் சேருறதால வாரம் ஒருமுறை கால் தொட்டி தண்ணீரை மாத்தணும்னு சொல்றோம். இல்லைன்னா, தொற்று நோய்கள் வந்துரும். பொதுவா, மீன்களுக்கு வயிறு, குடல் சம்பந்தமான நோய்கள்தான் அதிகம் வரும்.

கண்ணாடியில அடிக்கடி தேய்த்துக்கொண்டே நீந்தினாலோ, நூல் வெள்ளை நிறத்தில் கழிவு தொடர்ந்து வெளியேறினாலோ, உணவுகளைக் கடித்துத் துப்பினாலோ, தொட்டியின் அடிப்பகுதியில் நீண்ட நேரம் இருந்தாலோ, திடீரென உடல் கறுத்தாலோ, நெற்றியில் வெள்ளை நிறத்தில் பருக்கள் அல்லது ஓட்டை உருவானாலோ... அந்த மீன் நோயின் பிடியில் இருக்குன்னு அர்த்தம். உடனே, தடுப்பு மருந்தை தொட்டியில கலந்தாகணும்.

அப்புறம், உணவு கொடுக்கும்போது அவசரமா ஏதோ கடமைக்கு போட்டுட்டு போகாதீங்க. அதிக உணவு ஆபத்தானது. சாப்பிட்டு கொழுப்பு கூடி ஹார்ட் அட்டாக் வந்து மீன்கள் செத்துரும். இதைத் தடுக்க ஒரே வழி, மீன்களுக்கு உடற்பயிற்சி தர்றது தான். அதுக்காக கையோட மீன்களை வாக்கிங், ஜாக்கிங் அழைச்சுட்டுப் போக முடியாது.

தொட்டிக்குள்ளேயே உணவு போடும்போது இந்த மூலையில ஒரு பருக்கையையும் அடுத்த மூலையில இன்னொரு பருக்கையையும் போட்டு, மீனை அதிகம் நீந்த விட்டு ரசிக்கலாம். சும்மா இருக்கும்போது மீன்களை விரட்டி ஓட விட்டும் விளையாடலாம். இது உங்க டென்ஷனையும் தணிக்கும்; மீனுக்கும் உடற்பயிற்சி.

அதே மாதிரி, ஒரே உணவைப் போட்டு மீனை டயர்ட் ஆக்கக் கூடாது. பிடிச்ச குழம்புன்னாலும் தினமும் ஒரே குழம்பு வச்சா நீங்க சாப்பிடுவீங்களா? அப்படித்தான் மீனும்! விதவிதமான உணவை வாங்கி வச்சி, தினம் ஒரு வெரைட்டியை போட்டீங்கன்னா, மீன் ரொம்ப நாளைக்கு ஆரோக்கியமா இருக்கும்’’ என்கிற ராஜாராமனிடம் அடுத்தடுத்த அப்பாயின்ட்மென்ட்கள் நம் முதுகை உரசி நிற்கின்றன.

‘‘ஒரு நாளைக்கு சுமார் 50 முதல் 100 ‘பேஷன்ட்ஸ்’ வர்றாங்க. அதுமட்டுமில்ல... இந்தியா முழுக்க எனக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஸ்டமர்ஸ் இருக்காங்க. டில்லி, மும்பை, பூனா, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர்னு நிறைய இடங்கள்ல இருந்து பேசுறாங்க. ரொம்ப தூரத்துல இருக்கிறவங்க ‘வாட்ஸ் அப்’லயே டீலிங் பண்ணிடுவாங்க.

மீன் எப்படி இருக்குன்னு ஒரு வீடியோ எடுத்து அனுப்பினா போதும். அதைப் பார்த்திட்டு மருந்தைச் சொல்லிடுவேன். நானே தயார் பண்ற மருந்துன்னா, பார்சல்லகூட அனுப்பி வைப்பேன். மருந்து தேவையில்லைன்னா, டிப்ஸ் மட்டும் சொல்வேன். நான் டாக்டர் கிடையாது. ‘ஃபிஷ் ஹெல்த் கன்சல்டன்ட்’, அவ்வளவு தான்’’ என்கிறார் ராஜாராமன் தன்னடக்கத்தோடு! வெளிநாடுகள்ல மீன்களுக்கு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை எல்லாம் பண்றாங்க...

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்