மனக்குறை நீக்கும் மகான்கள்!



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
தனிமை என்பது என்ன?
யாரும் இல்லாத இடத்தில் இருப்பதா?
யாரும் இல்லாமல் தனித்திருப்பதா?
உண்மையில் யாரும் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் அகிலம் முழுக்க நிரம்பி இருக்கிறான் ஆண்டவன்.

யாரும் இல்லாமலும் யாரும் இல்லை. யார் நம்மோடு இருந்தாலும், பிரிந்தாலும்... கடவுள் எப்பொழுதும் நம்மோடே இருக்கிறார். அவருக்கு நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. கடவுள் காற்றைப் போன்றவர். உணர்வது நம் தேடலைப் பொறுத்தது.ஆனால், தனிமை என்றொன்று தேடல் உள்ள மனிதர்களுக்குத் தேவையாய் இருக்கிறதே... அந்தத் தனிமை என்பதன் அர்த்தம் என்ன?

நான் யார்? என் தன்மை என்ன? என்பதை விசாரிக்கும் உள்முகப் பயணத்திற்கான முஸ்தீபு. எது மனசுக்குத் தொந்தரவாய் இருக்கிறதோ, அதிலிருந்து விலகி இருப்பது என்றும் சொல்லலாம். பரபரப்பில்லாது தனித்துக் கிடக்கும் சூழல்தான் புதிய சிந்தனைகளுக்கு வாசல் திறக்கும். ஆன்மத் தேடலின் ராஜபாட்டை, தனிமை.

 குமரகுருதாசருக்கு வீடு, துறவுத் தடையை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதனால்தான் மனசு தனிமை தவத்திற்கு ஏங்கும்போதெல்லாம் தல யாத்திரை மேற்கொண்டார். இப்போது அவர் மனம் குவிக்க காலடி எடுத்து வைத்தது ஆதிசங்கரர் அவதரித்த கேரளத்தில். 

குமரகுருதாசருக்கு சுப்பிரமணிய பிள்ளை தன் வீட்டு மாடியில் ஒரு அறையைத் தயார் செய்து கொடுத்தார். விசாலமான அறை. ஜன்னல் காற்று. தூரத்து மலை. மனம் ஏகாந்தத்தில் திளைத்தது. குமரகுருதாசர் மந்திர ஜபம் செய்தார்.

தியானத்தில் மூழ்கினார். இதர பொழுதில் தமிழ் ஆராய்ச்சியில் இறங்கினார். மாலைப் பொழுதில், சுப்பிரமணிய பிள்ளையோடு பத்மநாபபுரம் கோயிலுக்குச் சென்றார். முருகனின் மாமனாகக் கருதி பத்மநாப சுவாமிகளை மனதார வழிபட்டார்.

 யாப்பு இலக்கணத்தின் கட்டுமானத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினார். அதற்காக ‘பல்சந்தப் பரிமளம்’ என்கிற இலக்கண நூலைச் சமைத்தார். தனிமையில் கழித்த 22 நாட்கள் முருக சிந்தனையிலும் இலக்கியப் பணியிலும் கழிய, சுப்பிரமணிய பிள்ளையுடன் புறப்பட்டு கன்னியாகுமரி வந்தார்.

பகவதி அம்மனின் பாதம் பணிந்தார். அங்கிருந்து சுசீந்திரம் நகர்ந்து தாணுமாலய சுவாமியைப் பணிந்து திருச்செந்தூர் மண்ணை மிதித்தார். அந்தக் கணமே உள்ளம் சிலிர்த்தார். சாதாரண இடமா இது. ஊமைச் சிறுவனை பேச வைத்து உலகம் போற்றும் ஞானியாய், குமரகுருபரனாய் ஆக்கிய செந்தில் ஆண்டவன் உறையும் தலம் அல்லவா!

தேவர் சிகாமணி சித்தர் சிகா மணி தெள்ளறிவுத்
தூவர் சிகாமணி யோகர் சிகாமணி தோமில்கவி
நாவர் சிகாமணி நாதர் சிகாமணி நண்ணுகென் னுள்
மேவு சிகாமணி செந்தியில் வாழ்வடி வேலவனே.

என்று பாமாலை சூட்டினார். அங்கிருந்து தல யாத்திரையைத் தொடர்ந்தவர் திருநெல்வேலி நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் வணங்கி மதுரை மீனாட்சியைக் கண் குளிர தரிசித்துவிட்டு ராமநாதபுரம் ஈசனைப் பணிந்தார். அங்கிருந்து சொந்த ஊர் திரும்பியவர், வழக்கமான வேலைகளில் ஈடுபடலானார்.

நடுவே ‘திருத்தொடையல்’, ‘திருவலங்கற்றிரட்டு முதற்கண்டம்’ என நூல்கள் எழுதினார். தமிழ்த்தாய் குளிர்ந்தாள். ஆனாலும் குமரகுரு தாசரின் மனசு துறவு பின்னாலேயே சுற்றியது. முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற வேண்டும் என்கிற தீவிரம் தீயாய் தகித்த வேளையில், பிரப்பன் வலசை போக வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது!

பிரப்பன் வலசை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமம். சின்ன ஊர்தான். ஆனால் காலம், அந்த பூமியை காலாகாலத்துக்கும் வணங்கத்தக்க இடமாய் மாற்ற முடிவு செய்திருந்தது. குமரகுருதாசர் அந்த ஊர் மயானத்தில் தவம் செய்ய விரும்பினார். ‘ஒரு சாமியார் நம்ம ஊர் சுடுகாட்டில் தவம் செய்யப் போறாராம்’ எனக் காற்றுவாக்கில் சேதி கேட்ட மக்கள், மந்திரவாதியோ என நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கத் திரண்டார்கள்.

ஆனால், குமரகுருதாசரைப் பார்த்தவுடன், அவரைப் பற்றி அறிந்தவர்கள் சொல்லக் கேட்டவுடன், ‘‘நாங்க என்ன செய்யணும் சாமி’’ எனக் கைகட்டி நின்றார்கள். குமரகுருதாசரின் சீடரும் உள்ளூர்க்காரருமான உடையநாயகம் பிள்ளை, பாம்பன் மு. சின்னசாமி பிள்ளை, பிரப்பை நமச்சிவாயம் பிள்ளை, கிராம மணியம் சின்னசாமி பிள்ளை ஆகியோர் சுவாமிகள் மயானத்தில் தவம் செய்ய அரசாங்க அனுமதியை வாங்கி வைத்திருந்தார்கள்.

மயானத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்றடி நீளமும் மூன்றடி அகலமும் மூன்றடி ஆழமும் கொண்ட குழியைத் தோண்டச் சொன்னார். அதன் மீது கூரை வேய்ந்து சுற்றி முள்வேலி அமைக்கச் சொன்னார். குழிக்கு கதவும் பொருத்தப்பட்டது. எட்டி மரத்தில் ஒரு யோக தண்டம் செய்யச் சொன்னார். ஒரு மண் விளக்கு செய்தார். அது இரண்டு அடுக்கு கொண்டது. மேல் அடுக்கில் எண்ணெய் தீபம் எரியும். கீழ் அடுக்கில் தண்ணீர் இருக்கும்.

குழிக்குள் தீபம் எரியும்போது இடம் சூடாகாதவாறு தண்ணீர் தடுக்கும். தனக்கு மதியம் மட்டும் கொஞ்சம் சாப்பாடு வைக்கும் படியும், எப்போது தான் அதை எடுக்கவில்லையோ, அன்றிலிருந்து உணவு வைக்க வேண்டாம் என்றும் குறிப்பு கொடுத்தார். எல்லாம் தயாரானதும் சுற்றி இருந்தவர்களைப் பார்த்த குமரகுருதாசர், ‘‘கடவுளை மறவாது இருங்கள்’’ என்று உபதேசம் செய்து விடை கொடுத்தார்.

மயானத்தில் குருரகுருதாசரோடு மௌனம் மட்டும் பேசிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே காய்ந்த மாலைகள் காற்றில் சடசடத்தன. தரையில் சிதறிக் கிடக்கும், எரிந்து மக்கிய எலும்பு எச்சங்களும் உடைந்த பானைகளும் வாழ்வின் நிலையாமையைச் சொல்லிச் சிரித்தன. காய்ந்த தும்பைச் செடி... ஒற்றை புளியமரம்...

முட்செடிகள் என அத்தனையும் அமானுஷ்யமாய்த் தெரிந்தன. படர்ந்திருந்த கள்ளிச் செடிகள் அந்த வெயிலிலும் சதைப்பற்றோடு மஞ்சள் பூப்பூத்து சோகம் இல்லாது சிரித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி சிறகசைத்து தேன் தேடியது. மனித வாழ்க்கை இதுதானே. இந்த வாழ்க்கை நிலையில்லை எனத் தெரிந்திருந்தாலும்... அந்த கள்ளிப் பூவில் தேன் தேடும் பட்டாம்பூச்சி போலத்தானே மனிதன் சுகம் தேடி அலைகிறான். எண்ணங்கள் எழுந்து அடங்கின.

மயானம் ருத்ரபூமி. சிவன் வாழும் இடம். ஆகாயத்தைப் பார்த்தவர், ‘‘குமரகுரு’’ என்று சிரம் மேல் கைக்கூப்பி சொல்லி விட்டு குழிக்குள் இறங்கி, கதவினை மூடிக்கொண்டார். குமரகுருதாசர் தவம் தொடங்கிய உன்னத நாள், விஜய ஆண்டு பங்குனி மாதம், சனிக்கிழமை. அன்று அவருக்கு வயது 44.  மண் குழிக்குள் மெல்ல தீபம் ஒளிர்கிறது.

அதன் அசைவில் காற்று தெரிகிறது. அகல்விளக்கின் கீழறையில் நீரும் இருக்கிறது. கண்களை மூடி அமர்ந்த குமரகுருதாசர், மனவெளியில் ஆகாயமான இறைவனை அமர்த்தினார். பஞ்ச பூதங்களும் அவரது தவத்திற்கு அரணாக, அரன் மகன் குகனை நினைத்தார். ‘முருகா! நீயே எனக்கு உபதேசம் தந்தருள வேண்டும்... அதுவரை என் தவம் தொடரும்’ எனச் சொல்லி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

ஓரிரு நாட்கள் சீடர்கள் வைத்த உணவினை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, உணவு தவிர்த்தார். எங்கு நல்லது நடந்தாலும் இடர் வருமே. முதலில் குழிக்குள் பாம்பு எட்டிப் பார்த்தது. இது முருகனின் காலின் கீழ் இருக்கும் அல்லவா... ‘முருகா’ என நினைக்க, அமைதியாய் அது நகர்ந்தது. அடுத்து பேய்கள் சூழ்ந்துகொண்டு ஓலமிட்டன.

 ஆனால், சுவாமிகளை அவற்றால் நெருங்க இயலவில்லை. இடர்கொடுக்கும் பணியில் பேய்களின் தலைவனான ஒரு முனியும் சேர்ந்துகொண்டது. சுவாமிகள் தன் யோக தண்டத்தை அதன் மீது வீச, முனி தூர விழுந்து மறைந்தது. இடர்கள் தகர்ந்து தியானம் யோகமாகி, நிஷ்டையில் ஆழ்ந்தார், குமரகுருதாசர்.

ஏழாம் நாள். மழித்த தலை. பால்முகம். கௌபீனம் தரித்த குமரன், பாலனாய் அவர் முன் தோன்றினான். கூடவே, அகத்தியரும் வசிஷ்டரும் நின்றார்கள். குமரகுருதாசரின் காதில் ரகசியமாய் ஒரு மொழி சொன்னான், முருகன்.

அந்த உபதேசம் குமரகுருதாசரின் மனதுள் ஞானமழை பொழிந்தது. முகம் இன்னும் பிரகாசமாக, தீவிர யோகத்தில் ஆழ்ந்தார். 34 நாட்கள் ஓடின. இப்படியே விட்டால் நம் வேலை என்னவாவது என நினைத்தானோ என்னவோ முருகன்... ஒரு பேரொளி அந்த பிரதேசத்தைச் சூழ்ந்தது.

 ‘‘ஏகாச ருத்திரர்கள் வருகிறார்கள். நீ எழுந்து விடு’’ என்றது அசரீரி. ‘‘செவ்வேள் முருகனின் கட்டளையாய் இருந்தால் மட்டுமே நான் எழுவேன்’’ என்றார் குமரகுருதாசர். ‘இது முருகனின் கட்டளைதான்’ என உணர்த்தப்பட, நிஷ்டையிலிருந்து எழுந்தார்.

அந்தத் தவக்குழியை வலம் வந்து வணங்கினார். ஆகாயத்தைப் பார்த்தார். மேற்கே சித்திரை நிலவு காய்ந்து கொண்டிருந்து. மனதிலோ ஆயிரம் நிலவு. முருகனின் உபதேசமும் தரிசனமும் அவரை வார்த்தை இல்லாத தளத்தில் நிறுத்தி இருந்தது. குமரகுருதாசர் ஊர் நோக்கி நடந்தார். சூரியன் வானத்தை முட்டி எழ எத்தனித்துக் கொண்டிருந்தான்!

தீராத நோய் தீர்த்தார்


‘‘என் வலது முழங்காலுக்கு கீழ்ப்பகுதி முழுவதும் சரும நோயால் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. பிறவியிலேயே வந்த நோய். பார்க்காத மருத்துவரில்லை. ஆனாலும் குணமாகாமல் நீர் வடிந்து கொண்டே இருக்கும். வனத்துறையில் வேலை கிடைத்தது. ராமேஸ்வரத்தில் போஸ்டிங். 1972ல் என் அப்பா சண்முகக் கவசத்தைக் கொடுத்து, ‘இதைப் படி எல்லாம் சரியாகிடும்’ என்றார். படிக்க ஆரம்பித்தேன். துன்பங்கள் படிப்படியாய் நீங்கி, இப்போது பூரண குணமாகி விட்டேன்.

ஒரு மகன், இரண்டு மகள்கள் என வாழ்க்கை நிறைவாக நகர்கிறது. என் குடும்பமே பாம்பன் சுவாமிகளிடம் சரணாகதியாகி விட்டோம்’’ என்று பக்தியுடன் சொல்லும் கந்தகிருஷ்ணன், தேனிவாசி. ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலரான இவரும், டாக்டர் பாலாஜி உள்ளிட்ட நண்பர்களும் சேர்ந்து பிரப்பன் வலசையில் பாம்பன் சுவாமிகள் பெயரில் இலவச மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

துன்பங்களைத் தீர்க்கும் திருத்தொடையல்
ஐந்துவகைப் படுபூத வியல்பினைக் கொண்
டளவிலுல காக்கி வாங்க
ஐந்துமுகத் துடன் விளங்கி யைந்தெழுத்தி
  னருவாகி யவற்றோ டுள்ள
பந்தமொன்று சால்குடிலை யருவமுக
  மென்பதையும் பரித்தே மஞ்ஞை
உந்துமறு முகனாக வாறெழுத்துக்
  கிறையேயென் னுறுவ றீராய்
- பாம்பன் சுவாமிகள் அருளிய இந்தத் திருத்தொடையல் பாடலை தினமும் 12 முறை சொல்ல, சகல துன்பங்களும் தொலையும்.

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்