இது கார்த்திக்கு பிடித்த வட சென்னை நிஜம்!



இயக்குநர் இரஞ்சித் ‘மெட்ராஸ்’ டாக்

‘மெட்ராஸ்’ வட சென்னை மக்களின் அசலான வாழ்க்கைப் பதிவு. அந்த எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாடு, அரசியல், கொண்டாட்டம், காதல், மற்றவர்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட அவலம் எனப் பலவற்றை மிகவும் கரிசனமாகச் சொல்ல வருவது, ‘மெட்ராஸ்’. வட சென்னை மக்களை, அரசியல்வாதிகள் எப்படி கூட்டம் சேர்க்கிற, ஓட்டுப் போடுகிற, பிரச்னை செய்கிற மக்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை படத்தின் பின்னணியாக வைத்திருக்கிறேன்.

என்னுடைய சினிமாவின் மனிதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்கள் படுகிற துயரம் அசாதாரணமானது’’ - வர்ணம் தீட்டும் லாவகத்தோடு வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘அட்டக்கத்தி’யில் வித்தியாசமாக வெளிவந்தவர்.‘‘நீங்கள் வட சென்னை மக்கள் வாழ்வில் எப்போதும் கரிசனம் கொண்டிருக்கிறீகளே..?’’

‘‘நாம் உண்மையை மறைத்துவிட்டோம். அவர்கள்தான் சென்னையின் பூர்வகுடிகள். அவர்களை இதுவரைக்கும் சினிமா கேலி செய்து பழகிவிட்டது. அவர்கள் பேசுகிற மொழி கூட கிண்டலுக்கு ஆளாகிறது.

அவர்களைக் கொடூரமாக சித்தரிக்கிறோம். தலை கொள்ளாத முடியுடன் கத்திகளை வைத்துக்கொண்டு சினிமாவில் பாய்வதாகக் காட்டுவது அவர்களைத்தான். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை. மிகவும் நட்புணர்வோடு, ஜாதி, மதமற்று வாழ்கிறார்கள் வட சென்னை மக்கள். உறவு முறைகளோடு பழகுகிறார்கள்.

அடுக்கு மாடி குடியிருப்பு மக்களின் அக்கறையின்மை அவர்களிடத்தில் இல்லை. இன்றைக்குக் கூட வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், ஜமாலியா ஹவுசிங் போர்டு... இப்படி பல இடங்களில் ஒரு ஏ.டி.எம் கூட கிடையாது.

அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம். அப்படியான மக்களின் நிஜ முகம்தான் இந்த ‘மெட்ராஸ்’. சமூகம், வாழ்க்கை, இயல்புகள், மனநுட்பங்கள் என அவர்களைக் காட்டியிருக்கிறேன். உண்மை எப்பவும் அழகானது என்றால் அதன் பதிவும் அவ்விதம்தான்!’’‘‘படம் கொஞ்சம் கரடுமுரடாக இருக்குமோ?’’

‘‘நான் கூட வட சென்னையில் வளர்ந்தவன்தான். என் மூச்சுக்காற்றை ஊதி எடுத்த படம். வாழ்க்கை எப்படி இருக்கோ, அப்படித்தானே எடுக்க முடியும்? இந்த மெட்ராஸுக்குள்ளே இப்படியெல்லாம் உலகம் இருக்கா, இப்படிப் பசங்களும் இருக்காங்களா, இதில் இவ்வளவு காசு புழங்குதா, அவர்களை இப்படி பயன்படுத்தறாங்களான்னு உங்களுக்கே ஆச்சரியம் தாங்க முடியாது. கதை இல்லை, கதை இல்லைன்னு சொல்லிக்கிட்டே பல வருஷமா திரியுறோம். நார்த் மெட்ராஸில் இருக்கிற கதையே ஒரு நூறு தேறும்.

நாம் வாழலைன்னாலும் பொய் இல்லாத வாழ்க்கை நமக்குப் பிடிக்கும்தானே? புரியாத விஷயம், அரிதான விஷயம்னு எதுவும் சொல்லலை. வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொல்றாங்களே... சில விஷயங்கள் எல்லோருக்கும் ஆகிப்போவது மாதிரி இருக்கும். அப்படியொரு இடத்தில் ‘மெட்ராஸ்’ இருக்கு.

தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை, தமிழ் சினிமா குனிஞ்சு பாக்கிறதே இல்லை. அப்படிப் பார்க்கிற முயற்சி தான் ‘மெட்ராஸ்’!’’‘‘வட சென்னையை ரொம்ப ஆழமா தொட்டிருக்கீங்களோ..?’’

‘‘தமிழ் சினிமாவின் ஜெனிட்டிக் பிரச்னையா ஆகிப் போச்சு இது. படத்தின் வில்லன்கள் பேரு கூட வீரப்பா, கபாலி, பீட்டர், ஜான்னு வரும். சீட்டாட்டம், கழுத்து அறுக்கிறது மட்டுமே அவங்க வேலையா நினைச்சிருக்கோம். அது வெளியிலிருந்து பார்க்கிற மனநிலை. மேம்போக்கா இருக்கிறது படைப்பாளனுக்கான தன்மை இல்லை.

கொண்டாட்டம், வாழ்க்கை, அரசியலில் அவர்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், நட்பு, காதல், ரிலேஷன்ஷிப் இதெல்லாம்தான் இதில் இருக்கு. ஹீரோயின் கேதரின் தெரஸா, கேரள வம்சம். என் படத்திற்கு அவர் பொருந்தியிருக்கார். நான் பெண்களை கவர்ச்சிங்கிற ஒற்றை அம்சத்திற்காக உபயோகப்படுத்துறதில்லை. வினோத், ஹரி, ஜெயராவ், கலையரசன்னு நல்ல நடிப்பு வட்டம். புதுசா உள்ளே இறங்குற ஆர்வத்தில் பிரமாதமா நடிச்சிருக்காங்க...’’
‘‘இதில் கார்த்தி எப்படிப் பொருந்தினார்?’’

‘‘முதலில் நான் ஸ்டூடியோ கிரீனுக்குப் போனது ‘சார்பட்டா பரம்பரை’ என்கிற கதைக்குத்தான். அதோட, இதை இடையில் பண்ணிடலாம்னு ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். இதை கார்த்தி படிக்க, ரொம்பவும் அவருக்குப் பிடிச்சுப் போச்சு. ‘நான் இதுக்குள்ளே வர்றேன்’னு ஆசைப்பட்டார். நான் இந்த ‘மெட்ராஸ்’ கதையின் உண்மைத் தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவங்களைத்தான் விரும்பினேன். இதில் ஏகப்பட்ட கூத்துப்பட்டறை நடிகர்கள். இந்த ஏரியா, இந்த வகை முகங்கள்.

ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய் புகுந்துகொள்கிற ஆர்வம் கார்த்திகிட்டே இருக்கு. நிறைய ராத்திரிகளில்தான் ஷூட்டிங் நடக்கும். இந்தப் பேச்சு மொழிக்கு சீக்கிரம் வந்துட்டார் கார்த்தி. ‘நான் எப்படியெல்லாம் இருந்தால் நல்லா இருக்கும்’னு கேள்விகளால் துளைத்தெடுப்பார். ஒரு கதையில் நடிக்கிறோம்னு போயிடாமல், இதன் வரலாறு கேட்டார். எனக்கு இன்றைக்கு ஸ்கிரீனில் அவரைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி...’’‘‘உங்களுக்காக சந்தோஷ் நாராயணன் ஆசை ஆசையாய் டியூன் போடுறாரே...’’

‘‘அப்படியான இடங்கள் நிறைய இருக்கு. அவரே ரொம்ப தேர்ந்தெடுத்துதான் படங்கள் பண்றார். நிறைய அசலான கானா பாடல்கள், மெலடின்னு இழைச்சு இழைச்சு பண்ணின பாடல்கள் பத்திச் சொல்ல நிறைய இருக்கு. கானா பாலா இதில் வேறு வகையில் பாடியிருக்கார். மரணத்தில் பாடுகிற தத்துவ கானா அது. அதே பாட்டை நானே வட சென்னையில் முன்னே கேட்டிருக்கேன். அதையெல்லாம் சினிமாவுக்குள் இழுத்து வந்திருக்கோம்.

புனே இன்ஸ்டிடியூட் மாணவர் ஜி.முரளிதான் கேமரா. வட சென்னை அவர் கண் வண்ணத்தில் வந்து அப்படியே உங்க முன்னாடி நிக்கும். ‘இதாங்க, இப்படி எடுத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு’ எனக் கையைப் பிடித்து ரசிகர்கள் அழுத்துகிற அந்த நாளுக்காக காத்திருக்கேன்!’’

- நா.கதிர்வேலன்