கவனம்



ஸ்ஸில் சரியான கூட்டம்.ஒரு பெண் தன் கைப்பையின் ‘ஜிப்’பைப் போடாமல் பின் பக்கம் தொங்க விட்டபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொருவன் பேன்ட் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் பிதுங்க, ஒரு பெண்ணை உரசியபடி தன்னை மறந்திருந்தான்.

இது போதாதென்று, என் அருகில் நின்றிருந்தவரோ தனது சட்டைப்பையில் வைத்திருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் அப்பட்டமாய் தெரிகிற மாதிரி சட்டை அணிந்திருந்தார்.

‘‘இப்படிப்பட்ட கூட்டத்தில் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் சிறிதும் இல்லாமல் என்ன அசட்டை பாருங்கள். சில சமயங்களில் நம் அசட்டைதான் திருடர்களை உருவாக்கி விடுகிறது. ‘வாகாக சிக்குகிறது... எடுத்தால் என்ன’ என்று நல்லவனுக்குக் கூடத் தோன்றும் இந்தக் காட்சிகளைப் பார்த்தால்.

இப்படிப் பொறுப்பில்லாமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டு, பின்னால் எதையாவது பறி கொடுக்க நேரும்போது, ‘ஐயோ! போச்சே... அம்மா போச்சே’ என்று அலறுவதில் என்ன பயன்? இவர்களையெல்லாம்...’’ ‘‘சார்... டிக்கெட்!’’ - கண்டக்டரின் குரல், என் மன ஓட்டத்தைக் கலைத்தது.டிக்கெட் வாங்க என் பாக்கெட்டுக்குள் கையை விட்டேன்.  ‘‘ஐயோ... என் பர்ஸைக் காணோம்!’’

இமயவன்