பொலிட்டிக்கல் பீட்



அமைச்சரவைக் கூட்டங்களின்போது பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் கையில் பென்சிலும், ஒரு சின்ன நோட்டும் இருக்கும். மற்ற அமைச்சர்களையும் இப்படி நோட் வைத்து, குறிப்புகளை எழுதிக் கொள்ள வலியுறுத்துவார் அவர்.

 சமீபத்தில் பாதலின் குறிப்பேட்டைப் பார்க்க நேர்ந்த ஒரு மூத்த அதிகாரி திகைப்பில் ஆழ்ந்துவிட்டார். அதில் குறிப்புகளை விட, சின்னச் சின்ன கார்ட்டூன்களே அதிகம் இருந்தன. போரடிக்கும் மீட்டிங்குகளில் முதல்வர் இப்படித்தான் ரிலாக்ஸ் செய்து கொள்வாராம்!

பீகாரில் பாரதிய ஜனதா பெற்ற எழுச்சி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவையும் நிதிஷ் குமாரையும் இணைத்திருக்கிறது. எதிரும் புதிருமாக இருந்த இந்த இரண்டு முன்னாள் முதல்வர்களும் இப்போது பீகார் இடைத் தேர்தலில் தொகுதி பங்கீடு செய்துகொண்டு போட்டியிடுகிறார்கள்; இணைந்து பிரசாரம் செய்கிறார்கள்.

முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், வேறு வீட்டுக்கு மாறியிருக்கிறார். பாட்னாவில் லாலு வீட்டுக்கு மூன்று வீடு தள்ளிதான் அவர் வீடு. ‘‘பொடிநடையாகப் போயே கூட்டணி பேசி விடலாம்’’ என கிண்டலடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

சமீபத்தில் நேபாளம் போன நரேந்திர மோடி, அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 450 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்தார். அதில் நேபாள மக்களை மிகவும் நெகிழச் செய்தது, மிகச் சின்ன ஒரு விஷயம்! அது, புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்ட இரண்டரை டன் சந்தன மரங்கள். பல ஆண்டுகளாகவே இந்தக் கோயிலுக்குத் தேவையான சந்தன மரங்களை இந்தியாதான் கொடுத்து வருகிறது. மோடி அதை அதிகமாகவே கொடுத்து விட்டார்.

மேற்கு வங்காள போலீசார் நடத்திய ஒரு கலாசார நிகழ்ச்சிக்கு ஷாருக் கான் சிறப்பு விருந்தினர். மேடை ஏறிய அவர், அருகே நின்றிருந்த பெண் கான்ஸ்டபிள் ஷம்பா ஹல்தாரின் கையைப் பிடித்து டான்ஸ் ஆடினார்.

ஒரு கட்டத்தில் ஷம்பாவை அலேக்காக தூக்கி விட்டார். பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. ‘‘சீருடையில் ஒரு பெண் கான்ஸ்டபிளை இப்படித் தூக்கி டான்ஸ் ஆடுவது போலீஸையே அவமதிக்கும் செயல். இதை மம்தா எப்படி அனுமதிக்கலாம்?’’ என சீறுகிறார்கள் பலரும். ‘‘ராணுவ வீரர்களுடன் நாம் ஆடுவதில்லையா? அது போலத்தானே இது!’’ என்கிறார் ஷாருக்.

ஒவ்வொரு மாநில ஆளுங்கட்சி எம்.பி.க்களையும் தனது ரேஸ் கோர்ஸ் சாலை இல்லத்துக்கு ஒவ்வொரு நாள் அழைத்து, வளர்ச்சிப் பணிகள் பற்றி கூட்டம் நடத்துகிறார் நரேந்திர மோடி. இந்தக் கூட்டங்களின்போது மோடி மட்டும் மேடையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள்கூட எம்.பி.க்களுடன் சாதாரணமாக அமர்ந்திருப்பார்கள்.

மோடியிடம் எழுந்து நின்றே பேசுவார்கள். உத்தரப் பிரதேச எம்.பி.க்களை அழைத்துப் பேசும்போது மட்டும், மேடையில் இரண்டு நாற்காலிகளைக் கூடுதலாகப் போட்டு முரளி மனோகர் ஜோஷியையும், ராஜ்நாத் சிங்கையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். சீனியர்களுக்கு மரியாதை!