தேவதைபிசாசு!



திருப்பூர் பள்ளியின் காதுகேளாத - வாய் பேசாத அந்த மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளின் திறமையைப் பறைசாற்றின அந்தப் பேசும் புகைப்படங்கள். வாழ்த்த வார்த்தைகளைத் தேடி மௌனமானேன்.
- காந்தி லெனின், திருச்சி.

‘ஆழ்துளைக் கிணறு தண்டனைச் சட்டம்’ பற்றிய கட்டுரை, விருப்பு - வெறுப்பின்றி நடுநிலைமையுடன் எழுதப்பட்டிருந்தது. நடைமுறையைக் கண்காணிக்காமல், புதிய சட்டத்தை இயற்றுவது விவசாயத்தையே பாதிக்கும்!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்-2.

கறுப்பு உடையும், கருகரு விழியுமாகப் பார்வையிலேயே எங்களைக் கிறங்கடித்த பிரயாகா, ‘பிசாசு’ பட நாயகி என்றாலும் தேவதை!
- ஆதி.சௌந்தராஜன், பட்டவர்த்தி.

‘உயிர்க் கொல்லி. ஆனா மருந்து கிடையாது’ என வயிற்றில் புளியைக் கரைத்தது ‘எபோலா.’ அதற்கொரு மருந்து கண்டுபிடித்த செய்தியை முதலில் வெளியிட்டு வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள்!
- மயிலை.கோபி, சென்னை-83.

‘டீ கடையில் திருக்குறள் பாடம்’ கட்டுரையும் தகவல்களும் மனதில் ஆழப்பதிந்தன. திருக்குறளை வாழ்க்கையோடு பிணைத்து அர்ப்பணிப்போடு செயலாற்றும் தங்கவேலனார் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.
- எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடிநாயக்கனூர்.

‘பெண்களின் ஃபிரண்ட்ஷிப் ராங்கா... ஸ்டிராங்கா’ என ஆராயத் தேவையில்லை. தங்கள் வீட்டுக்குறைகள், மாமியார்கள் பற்றி கொட்டித் தீர்க்க முடியுமென்றால், அந்த ஃப்ரெண்ட்ஷிப்புக்கு சாங்கே பாடலாமே!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தன்னுடைய ஆதங்கத்தை இயக்குநர் மிஷ்கின் சற்று ஆவேசமாகவே கொட்டியிருக்கிறார். ஆவேசத்தில் உண்மையிருக்கிறது. ஆனால், ரசிகர்களின் இதயத்தில்தான் கருணை இல்லை!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ பகுதி, மிகவும் நல்ல செய்தி களையும் பட்டறிவையும் விளக்குவதால் நன்னெறி ஊட்டுவதாக அமைந்துள்ளது. இதில் இடம்பெறும் பாடல்கள், பக்தி ரசத்தின் ஊற்று என்றே சொல்ல வேண்டும்.
- இராம்.வேதநாயகம், வடமாதிமங்கலம்.

சுவாமி சிம்பானந்தாவின் ஆன்மிக மணம் கமழும், அமைதிப் பேட்டியைப் படித்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தோம்! அவரது சிஷ்யர்களாகும் பாக்கியம் கிடைத்தால், நாங்களும் பிறவிப்பயன் அடையலாமென்ற ஆசை பிறக்கிறது. அவரது மாசிலாமணி தெரு ஆசிரமத்தின் முழு விலாசம் தருவீர்களா?- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தோல்விப் படமாக அமைந்த ‘தாஜ்மஹால்’ படத்துக்கு பாரதிராஜா எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்று ‘நேற்றைய பொழுதில்...’ பகுதி விளக்கியது. வெற்றியோ... தோல்வியோ... சின்சியரான உழைப்பு. அதுதான் பாரதிராஜா!
- எஸ்.சதாசிவம், காங்கேயம்.