இயல்பான இந்த பொறியாளன்



எந்த ஆடம்பரமும் இல்லாமல்... பதறித் துடிக்கிற ஆக்ஷன், நம்ம மேலே தெறிக்கிற ரத்தம்னு இல்லாமல்... ஒரு அருமையான, எளிமையான படம் ‘பொறியாளன்.’ இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்தோட அழகே அதனோட எளிமைதான். ஒரு சராசரி இளைஞனின் கதை இது.

இது மாதிரி இளைஞனை நீங்க எங்கேயும் பார்க்கலாம். எதிர்ப்படுகிற பத்து முகத்தில் அஞ்சு பேர் இவங்கதான். இப்ப இருக்கிற இளைஞர்கள், முன்னாடி இருந்தவர்கள் மாதிரி இல்லை. பிளஸ் 2 முடிச்ச உடனேயே வாழ்க்கையைப் பத்தி கவலைப்பட வேண்டியதாகிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில் வளரத் துடிக்கிற ஒரு இளைஞனின் கதைதான் ‘பொறியாளன்.’ துறுதுறுன்னு படம் தொடங்கி, நிஜத்தின் பக்கத்தில் போய் முடிகிற படம். அதனாலதான் ஏஸ்மாஸ் மீடியா சார்பாக வெற்றிவேலவன், தேவராஜுலுவோடு சேர்ந்து நானும் தயாரித்தேன்’’ - உற்சாகமாகப் பேசுகிறார் தயாரிப்பாளர்-இயக்குநர் வெற்றிமாறன். கூடவே இருக்கிறார்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய மணிமாறனும் இயக்குநர் தாணுகுமாரும்.

வெற்றி முடித்த இடத்திலிருந்து பேச ஆரம்பிக்கிறார் மணிமாறன். ‘‘இங்கே கதைக்காகவோ, களத்திற்காகவோ அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஒருத்தனை ஆழமாகப் பார்த்தீங்கன்னா ஒரு கதை.

அவனோட சேர்ந்து வீடு வரைக்கும் போனா களம். அப்படித்தான் சிவில் எஞ்சினியரான ஹரீஷ், நண்பனோடு சேர்ந்து ஒரு இடத்தை வாங்கி, வீடு கட்டத் தொடங்குகிறான். அதில் ஏற்படுகிற ஒரு பிரச்னை. அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான்...

மீள முடிந்ததா என்பதுதான் சுவாரஸ்யமான மீதிக்கதை. யதார்த்தத்தோடு வந்திருக்கிறது. நிச்சயமாக பொறுப்பு என்பது ஒருத்தனை மாத்தும். சினிமான்னா நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்; கேள்வி கேட்கணும்...

 நடப்பைத் தெரிய வைக்கணும். ஒண்ணுமே இல்லாத ஒரு சினிமாவில் தெரிந்துகொள்ள என்ன இருக்கு? ‘பொறியாளன்’ மாதிரி ஒரு படம் செய்ய முடிஞ்சது ஒரு கௌரவம். பொறியாளனாக ஒரு இளைஞனின் வாழ்க்கையை குறுக்குவெட்டா எடுத்து வச்சிருக்கோம். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது.’’

‘‘ஹரிஷ் இதற்கு முன்னால் பெரிதாக வெளிப்படவில்லை. இதில் எப்படி?’’‘‘அவருக்கு இதுதான் முதல் படமென்று சொல்லலாம். பொதுவாக கேரக்டர்களுக்கு உயிர் கொடுக்க ஆள் வேண்டும். உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு வந்தார் ஹரிஷ். இந்தப் படத்தின் மீதான பெரிய நம்பிக்கையே அவருக்கு இந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

‘நம்மில் ஒருத்தன்’னு ஒரு ஃபீலிங் கொடுத்தாலே ஒரு ஹீரோவுக்கு அது ரொம்பப் பெரிய விஷயம். அந்த இடத்தை ஹரிஷ் அருமையா கடந்து வந்திருக்கார். அனுபவம் கொடுத்த இடமும், இந்தப் படத் தை சரியாக பயன்படுத்திக்கணும் என்ற பக்குவமும் ஹரிஷுக்கு கை வந்திருக்கு. அதன், ரிசல்ட்டாக ஹரிஷ் இதில் ஒரு நல்ல நடிகரா தெரிய வந்திருக்கிறார்...’’
‘‘ரக்ஷிதாதானே இப்ப ‘கயல்’ ஆனந்தி?’’

‘‘ரக்ஷிதா எங்க படத்தில்தான் அறிமுகம். அவருக்கும் ஹரிஷுக்கும் படத்தில் இருக்கிற காதல் அருமையானது. எங்க படத்தில் நடிச்சதைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் பிரபு சாலமன் ‘கயலி’ல் பயன்படுத்தினார்.

இப்ப புதுசா படம் பண்றவங்களோட விஷயமும், சூட்சுமமும் எங்களுக்கும் புரியுது. எல்லாத்தையும் கணக்கில் எடுத்துக்கிட்டுச் செய்வதுதான் இந்த ‘பொறியா ளன்’. ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரணும்னு எங்களுக்குள்ளே ஒரு கணக்கு இருக்கு. அதுக்கும் தகுதியாக வந்திருக்கு இந்தப் படம்.’’

இந்தத் தடவை குரல் கொடுக்கிறார் படத்தின் இயக்குநர் தாணுகுமார். ‘‘நானும், வெற்றிமாறனும் பாலுமகேந்திரா குருகுலத்தில் படிச்சோம். ‘இதை நீ டைரக்ட் செய்தால் நல்லாயிருக்கும். உன்னுடைய அறிமுகத்திற்கும் பெயர் இருக்கும்’னு சொன்னார். எனக்கு வேல்ராஜ் சார் ஒளிப்பதிவாளரா கிடைச்சது பெரிய பலம்.

நம்முடைய கனவைப் புரிந்துகொண்டு, அதை இறுதியாக்கித் தருவதில் அவருக்கு இணை அவரே. வெற்றிப் படங்களிலும் அவருக்கு இருப்பது பெரிய இடம். இத்தனைக்கும் அவரே ஒரு சக்ஸஸ் டைரக்டர்.

‘வேலையில்லா பட்டதாரி’ பாருங்க... சூப்பர் டூப்பர் ஹிட். அது எதையும் கண்டுக்காம, ‘நீ சொல்லு, உன் மனசில் இருக்கிறதை எடுத்துத் தர்றேன்’னு சொன்ன மாதிரி செய்தார். மியூசிக்கில் ஜோன்ஸ்னு புதியவர். டியூன்களைக் கேட்கும்போது அவர் புதியவராக இல்லை.

 ‘கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடக்கு’ன்னு ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி ஜோடியா ஒரு பாட்டுப் பாடியிருக்காங்க பாருங்க... பாட்டு சூப்பர் ஹிட். கானா பாலாவும் மனதைத் தொடுகிற பாட்டு எழுதியிருக்கார்.

யுகபாரதியின் முத்திரைப் பாட்டும் இருக்கு. அசரடிக்கிற பெரிய ஹீரோ இல்லை... மெகா பட்ஜெட்டும் இல்லை... ஆனாலும், படத்தை வேந்தர் மூவீஸ் வாங்கியிருப்பது கௌரவம். ஒரு நல்ல சினிமாவுக்கான கேரண்டியை எங்களால் தர முடியும் என்பதுதான் இந்தப் படத்தோட நம்பிக்கைச் செய்தி!’’

நா.கதிர்வேலன்