நடைவெளிப் பயணம்



சீட்டி

சீட்டி என்றால் என்ன? இன்றுள்ள துணிக்கடைகளில் யாருக்கும் தெரியவில்லை. சீட்டி என்றால் உதடுகளைக் குவித்து ஒலி எழுப்புவதுதான் தெரிந்திருக்கிறது; நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பாவாடை, ஜாக்கெட், ஜன்னல் படுதா, தலையணை உறை போன்றவை சீட்டித் துணியில்தான் இருக்கும். படுக்கை விரிப்புக்குக்கூட சீட்டித் துணி பயன்படுத்துவோம்.

 கிரியா தற்காலத் தமிழ் (2008) அகராதியில் பார்த்தேன். லிப்கோ (1968) அகராதியையும் பார்த்தேன். ‘அச்சடித்த துணி’ என்று இருந்தது. அதாவது, மலிவு ரக வெள்ளைத்துணியில் பூக்கள், அலங்கார சித்திரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். இன்று இப்பெயரே மறைந்து விட்டது. சீட்டித் துணி விலை குறைவாக இருக்கும். அது புழக்கத்தில் இல்லாமலே போய் விட்டது; அப்படியானால் இன்று மலிவுத் துணி வாங்குபவர்கள் இல்லை. உண்மையாகவா?

நாங்கள் குழந்தைகளாக இருந்து வளர்ந்த ஆண்டுகள், இரண்டாம் உலகப் போர் நடந்த காலம். யுத்த கால நடவடிக்கைகள் ஐதராபாத் நிஜாம் அரசில் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன. ஒரு விளைவு, சாதாரண மனிதர்கள் நல்ல துணிமணி உடுக்கமுடியாது.

நிஜாம் குடும்பத்தினருக்கு பெரும் பங்கு சொந்தமான ஓர் ஆலையிலிருந்து வரும் துணி ஒன்றுதான் தாராளமாகக் கிடைக்கும். அதை ஆங்கிலத்தில் ‘கோர்ஸ் கிளாத்’ என்பார்கள். அதில்தான் இந்த சீட்டி வரும். இந்த சீட்டியை வாங்க எங்களுக்கு என்று ஒரு துணிக்கடையை நியமித்திருந்தார்கள். (இப்போது இங்கே இருக்கும் ரேஷன் கடை போல!) இந்தக் கடை செகண்ட் பஜார் என்ற இடத்தில் இருந்தது.

‘விலை குறைவான இந்தச் சீட்டித் துணியை வாங்காமல் விட்டு விட்டால் என்ன’ என்று கேட்கலாம். ஐம்பது ரூபாய்க்கு இந்த மட்ட ரகத் துணிகளை வாங்கினால்தான் பத்து ரூபாய்க்கு உயர் ரகத் துணி வாங்கலாம். எங்கள் ஊர்த் துணி வியாபாரிகள் ‘சூப்பர் ஃபைன்’ துணிக்கடை என்று அமைத்திருந்தார்கள். அங்கே சிறிது நல்ல ரகத் துணி கிடைக்கும். மட்டத் துணி வாங்கிய ரசீதுகள் மூன்று மாதங்கள்தான் செல்லும்.

அதாவது நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிஜாம் ஆலையில் தயாரான சீட்டியையும், இன்னொரு வகை மட்டத்துணியையும் வாங்கித்தான் ஆக வேண்டும். அந்த இன்னொரு வகைத் துணி கைதிகள் சீருடை போலக் கோடு போட்டிருக்கும். நிஜாம் நினைத்தால் எளிதாக உயர் ரகத் துணிகளைத் தயாரிக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு சொன்னதைத்தான் நிஜாம் செய்ய முடியும். அதைத் தாண்டி யாரும் யோசிக்கவில்லை.

அந்தக் காலத்தில் மைசூரிலும் இப்படி ஒரு ராஜாதான். அங்கு மட்டும் எப்படி பட்டுத் துணி, சந்தன சோப் செய்ய முடிந்தது? இரண்டு பெரிய அணைகள்? நிறைய மின் உற்பத்தி? காரணம், மைசூரில் இருந்த திவான்களும் பொறியியலாளர்களும். தங்கள் அரசும் ராஜ்ஜியமும் எல்லாத் துறைகளிலும் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கொண்டிருந்த ஆர்வம்.

ஐதராபாத்தில் நாங்கள் கைதிச் சீருடைகளும் நுண்மையில்லாது அச்சடிக்கப்பட்ட சீட்டித் துணியும் அணிந்து பள்ளிகளுக்குப் போனோம். சூப்பர் ஃபைன் கடையில் பத்து ரூபாய்க்கு எவ்வளவு துணி வாங்க முடியும்? ஆதலால் மாறி மாறி வாங்கிக் கொள்வோம். எனக்குக் கைதி உடை பிடித்துப் போய்விட்டது! ஆனால் என் சகோதரிகள் கண்ணை உறுத்தும் சீட்டித் துணியில்தான் பாவா டை ஜாக்கெட் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போவார்கள்.

சீட்டித் துணிக்கு இன்னொரு சிறப்பு. தினம் தோய்த்தாக வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகச் சாயம் போகும். அவற்றோடு தோய்க்கப்பட்ட என் கைதிச் சட்டையை எப்படி எப்படியோ இந்த வண்ணங்கள் உரு மாற்றி விடும். ஒரு கூச்சமும் இல்லாமல் நாங்கள் இந்த உடைகளை அணிந்து சுமார் பத்தாண்டுகள் காலம் கழித்தோம்.

எனக்கு எப்படியாவது எம்.எஸ்.55 என்ற துணியில் ஒரே ஒரு பைஜாமாவாவது தைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை. அதென்ன எம்.எஸ். 55? மேட்டூர் மில்களில் தயாராகும் ‘லாங்க் கிளாத்.’ இந்த லாங்க் கிளாத்தும் இன்று நிறையப் பேருக்குத் தெரியவில்லை. எனக்கும் அந்தப் பெயரை எதற்கு ஒரு துணிக்கு வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் துணி வழவழப்பாக வெள்ளை வெளேரென்று இருக்கும். எனக்கு ஹரிகோபால் என்று ஒரு நண்பன் இருந்தான்.

அவன் எப்படியோ அந்தத் துணியைச் சம்பாதித்து ஒரு பைஜாமா தைத்துக் கொண்டு விட்டான். ‘‘இதைப் போட்டா, எல்லாரும் என்னையே பாக்கிறாங்க’’ என்பான் பெருமிதத்தோடு! அவன் வாயில் நல்ல வார்த்தையே வராது. ‘‘நீ ஃபெயில் ஆகப் போறே. உன்னை ஸ்கூலிலிருந்து தூக்கி விடுவார்கள். நீ அவனோட சேர்றே. போலீஸ்காரனோடு உனக்கு என்ன வேலை?’’ என்று அடுக்கிக்கொண்டே போவான். அப்படியிருந்தும் நான் தினமும் அவன் வீட்டுக்குப் போவேன்.

நான் கடைசிவரை எம்.எஸ். 55 அணிந்து கொள்ளவே இல்லை. சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ஒருவர் ஆறு ரூபாய்க்கு ஒரு ஷர்ட், ஆறு ரூபாய்க்கு ஒரு வெள்ளை பேன்ட் என்று தைத்துக் கொடுப்பார். அந்த நாளில் வெள்ளையில்தான் ஆபீஸுக்குப் போக முடியும். வண்ணத் துணி பெண்களின் உரிமை. அதுவும் அடக்கமாக இருக்க வேண்டும். இன்று பெண்களை விட ஆண்கள்தான் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடை அணிகிறார்கள்.

சட்டையிலும் பேன்ட்டிலும் எவ்வளவு பைகள்! முழங்காலுக்கு அடியில் ஒரு பை இருந்தால், அதில் என்ன வைக்க முடியும்? எப்படி வைக்க முடியும்? எனக்குப் புரியவில்லை! கண்ணுக்குத் தெரியும் பக்கவாட்டுப் பைகளிலிருந்தே நான் நான்கு முறை என் பர்ஸைத் தொலைத்திருக்கிறேன். என் மகன்கள் பர்ஸுடன் மொபைல் தொலை பேசிகளையும் தொலைத்திருக்கிறார்கள்.

யுத்தம் எங்கள் அன்றாட வாழ்க்கையை ஒவ்வொரு அம்சத்திலும் பாதித்தது. நல்ல காக்கித் துணி என்றால் பின்னி மில் துணிதான். ஆனால் அவர்கள் மொத்தமாக அவர்கள் தயாரிப்பு அனைத்தையும் ராணுவத்துக்குக் கொடுத்து விட வேண்டும். நான் சாரணர் படையில் இருந்தேன். காக்கிச் சட்டை, காக்கி நிக்கர். அதென்ன நிக்கர்? அன்று அரை டிராயர் என்று சொல்ல மாட்டார்கள். நிக்கர்தான். சாரணர் படைக்கு சட்டையில் இரண்டு பைகள் இருக்க வேண்டும்.

அவற்றுக்கு ‘ஃபிளாப்’ வைத்துப் பொத்தான் வைத்திருக்க வேண்டும். தோள் பட்டையில் இரு புறமும் மீண்டும் ‘ஃபிளாப்’ வைத்திருக்க வேண்டும். என் சாரணர் நாட்கள் மட்டக் காக்கித் துணியில் தைக்கப்பட்ட சட்டை நிக்கரோடு கடந்தது. கஞ்சி போட்டு இஸ்திரி போடு என்பார்கள். என் வரை அது வெற்றிகரமாக நடந்ததில்லை. சட்டையை எவ்வளவு நன்றாகத் தைத்திருந்தால் என்ன... துணி மோசமாக இருக்கும்போது?

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நல்ல துணி சாதாரண மக்களுக்குக் கிடைக்காது. ஆனால் நல்ல உடை உடுத்துபவர்கள் இருந்தார்கள். பெரிய துணிக் கடைகள் இருந்தன. போதாததற்கு பர்மா அகதிகள் தெருத் தெருவாக அவர்கள் கொண்டு வந்த சட்டைகளை விற்பார்கள்.

ஒரு முறைதான் அணியலாம். தண்ணீரில் நனைத்தால் பாதி அளவுக்கு சுருங்கி விடும். ‘எந்தத் துணித் தயாரிப்பாளர் இந்த அதிசயத் துணியை எப்படித் தயாரித்தார்?’ என எரிச்சல் கலந்த பிரமிப்பு ஏற்படும்.ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட ரசாயன இழை வந்தது. இதுதான் சீட்டியை அகராதிகளுக்கு விரட்டி விட்டதோ?

பெட்டி

இன்னும் நான்கு மாதங்களில் 2014 முடிந்து 2015 பிறந்து விடும். சில நாட்களுக்காவது பலர் நாட் குறிப்பு எழுதுவார்கள். முன்பு ஹோ அண்ட் கம்பெனி டைரி பிரபலமானது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும்.

இப்போது நர்மதா பதிப்பகம் சில ஆண்டுகளாக மிக விசேஷமான முறையில், நோட்டுப் புத்தகம் அளவில் நாட்குறிப்பு வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச் சிறப்புடைய இடங்களின் படங்கள் வெளியிடும். தமிழ் பக்தி இலக்கியத்தின் பகுதிகள் எல்லாப் பக்கங்களிலும் இடம் பெறும். அச்சே பளிச்சென்று வித்தியாசமாகத் தெரியும். முகவரி: நர்மதா பதிப்பகம், 10 நாநா தெரு, தியாகராய நகர், சென்னை 600017. தொ.பே: 044-24336313

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்