நேரில் அனுப்பிய கமல்...தபாலில் அனுப்பிய ரஜினி...



சாதனை ஓவியரின் ஃபீலிங்

சத்திராஜு சங்கர நாராயணா... ஆந்திராவின் புகழ்பெற்ற ‘போர்ட்ரைட்’ ஓவியர். சாதாரண ஏ4 பேப்பரில் பென்சிலால் இவர் வரையும் முகங்கள் அனைத்தும் அசாதாரணம்... தத்ரூபம். ஒன்றல்ல... இரண்டல்ல... இவர் வரைந்த 1800 ஓவியங்களுக்குமே கலை உலகில் ஸ்பெஷல் இடம். ஹிட்லர், டால்ஸ்டாய், மகாத்மா காந்தி தொடங்கி, ரஜினி, கமல், ஷாருக், டெண்டுல்கர்... ஏன், சமீபத்திய உலகக்கோப்பை கால்பந்தில் அசத்திய மெஸ்ஸி, தாமஸ் முல்லர், குளோஸ் வரை இவர் வரையாத பிரபலங்களே இல்லை.

இப்படி நிறைய பிரபலங்களை வரைந்த சாதனைக்காக, ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்தவர். தெலுங்கு மக்களுக்கு பரிச்சயமான இவர், சென்னையைச் சேர்ந்தவர். தெலுங்கில் புகழ்பெற்ற ஓவியரும், திரைப்பட இயக்குநருமான ‘பத்மஸ்ரீ’ பாப்புவின் உடன்பிறந்த சகோதரர்.

‘‘பூர்வீகம் ஆந்திரா. மேற்கு கோதாவரி மாவட்டத்துல நரசபுரம்ங்கற ஊர்ல பிறந்தேன். அப்பா வேணு கோபாலராவ், சென்னை ஹை கோர்ட்ல வக்கீலா இருந்ததால சென்னையே எங்க சுவாசமாகிருச்சு’’ என மெல்லிய குரலில் பேசும் சங்கர நாராயணாவிற்கு இப்போது 78 வயதாகிறது. ஓவியத்தின் மீது வந்த ஆர்வத்தை விழி விரிய விவரிக்கிறார் அவர்.

‘‘நாங்க அஞ்சு பேர். அண்ணன் பாப்பு, ஓவியக் கலையை முறையா படிச்சவர். சுலபமா ஓவியம் போடுவார். அவரும் கோபுலுவும் நெருங்கிய நண்பர்கள். இவங்களைப் பார்த்து நானும் வரைவேன். ஆனா, எனக்கு ஓவியம் வேலையா இருக்கல. பொழுதுபோக்குதான். இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏன்னா, நான் கோடுகளைப் பற்றியெல்லாம் படிக்கலை. ஒரு படத்தைப் பார்த்து பென்சில்ல அப்படியே வரைவேன். இதுக்கு உடற்கூறு பத்தி தெரிஞ்சா போதும். அதைத் தெரிஞ்சுக்கிட்டதால எனக்கு போர்ட்ரைட்ஸ் ஈஸியா வருது. ஓய்வுக்குப் பிறகு அது என்னை முழு நேர ஓவியனா மாற்றி ருக்கு’’ என்கிறார் எளிமையாக.

‘‘1963ல் ‘ஆல் இண்டியா ரேடி யோ’வுல வேலை கிடைச்சது. அங்கிருக்கிற புரோகிராம் பத்தின இதழ்கள்ல என்னோட கைவண் ணத்தை காட்டிட்டு இருந்தேன். இது அப்படியே தொடர்ந்தது. அப்பப்ப பத்திரிகைகளுக்கு கார்ட்டூனும் போடுவேன். 1995ல் சென்னையில ஸ்டேஷன் டைரக்டரா இருந்து ஓய்வு பெற்றேன்.

அப்பதான் என் மனைவி சாந்தா, ‘மறுபடியும் பொம்ம (படம்) போடுங்க’ன்னு உற்சாகப்படுத்தினாங்க. 2003ல் அவங்க இறந்துட்டாங்க. அதுக்குப் பின்னாடிதான் இவ்வளவு ஓவியங்கள் போட்டேன்’’ என்கிறவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். தான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் சம்பந்தப்பட்ட நபருக்கே அனுப்பி வைப்பது இவரது வழக்கம். 
 
‘‘இரண்டு காப்பிகள் அனுப்புவேன். ஒண்ணு அவங்களுக்கு; இன்னொன்றில் கையெழுத்து போட்டு அனுப்பச் சொல்லிக் கேட்டுக்குவேன். நிறைய பேர் உடனே அனுப்பிடுவாங்க. அதையெல்லாம் சேர்த்து வச்சிட்டு வர்றேன்.

கலைஞர் முதல்வரா இருந்தப்ப, அவர் ஓவியத்தை வரைஞ்சு அனுப்பினேன். மறுநாளே ஒரு அதிகாரி என் வீட்டுக் கதவைத் தட்டினார். தன் ஓவியத்தில் பாராட்டி கையெழுத்திட்டு இருந்தார் கலைஞர். நேரடியா கொடுக்கச் சொல்லி அனுப்பியதா அந்த அதிகாரி சொன்னார்.

இதேபோல், கமல்ஹாசனும் நேரில் கொடுத்தனுப்பினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தபாலில் அனுப்பி வைத்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போனில் நன்றி தெரிவித்து ஒரு காசோலையும் தந்தார். அவர், எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். இப்படி பல வி.வி.ஐ.பிகள் என்னை நெகிழ வச்சிருக்காங்க’’ என்கிற சங்கர நாராயணாவைத் தொடர்கிறார், மகள் அபர்ணா.

‘‘அப்பா எளிமையான மனிதர். எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் உள்ளவர். எங்க வீட்டுல எல்லாருமே லவ் மேரேஜ். மத வித்தியாசம் எதையும் பார்க்காம ஏத்துக்கிட்டார். அம்மா இறந்த பிறகு அப்பாவுக்கு ஒரே ஆறுதல் ஓவியம் வரையறதுதான். அவருக்காகவே நாங்க www.sankar portraits.comனு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சோம். அதுல அவரோட எல்லா ஓவியங்களையும் பார்க்கலாம்.

 எங்க வீட்டுல யாருக்காவது பிறந்தநாள்னா அவங்க படத்தை வரைஞ்சு கிஃப்ட்டா தர்றதுதான் அப்பாவோட ஸ்பெஷல்!’’ என அன்பாய் உருகுகிறார் அவர். ‘‘வேலையிலிருந்து ஓய்வு பெற்றவங்க எல்லார்கிட்டயும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை அவங்க சரியா கண்டுபிடிச்சிட்டா, இந்த வாழ்க்கை பயனுள்ளதா மாறிடும்’’ என்கிறார் சங்கர நாராயணா நிறைவாக! 

பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்