கேஷ் பேக் ஆஃபர் என்றால் என்ன?



‘‘இந்த போனை ‘கேஷ் பேக் ஆஃபர்’ல ஃப்ரீயா வாங்குனேன் பாஸ்...’’ - நண்பர் ஒருவர் சொன்னபோது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனோம்.

 ‘‘அப்ப எங்களுக்கும் ஒரு போன் வாங்கி தாங்களேன்?’’ என பதிலுக்கு நாம் ஆசைப்பட, அவரோ, ‘‘உங்க கிரெடிட் கார்டுல அவ்வளவு பாயின்ட்ஸ் இருக்கா?’’ எனக் கேட்டு விழி பிதுங்க வைத்தார். காலம் காலமாக நாமும் விளம்பரங்களில் ஹோர்டிங்குகளில் ‘கேஷ் பேக் ஆஃபர்’, ‘பை பேக் ஆஃபர்’ என ஊர்ப்பட்ட ஆஃபர்களைப் பார்க்கிறோம்.

மளிகைக் கடைகள் தொடங்கி பெட்ரோல் பங்க், தொலைபேசிக் கட்டணம், திரைப்பட டிக்கெட் வரை எல்லாவற்றிலும் ‘ஆஃபர்கள்’ கொடி கட்டிப் பறக்கின்றன. இதெல்லாம் நிஜமாவே நமக்கு சலுகை தரும் ஆஃபர்களா? இல்லை ஏமாத்து வேலைகளா? அத்தனை சந்தேகங்களையும் அள்ளிக்கொண்டு பொருளாதார நிபுணர் நாகப்பன் முன் ஆஜரானோம். ‘‘இதெல்லாமே தள்ளுபடி வகையறாக்கள். காலத்திற்கு தகுந்தாற்போல கொஞ்சம் நவீன மாற்றத்தோடு கையாளப்படுகிற உத்தியே தவிர வேறொன்றுமில்லை’’ என்றவர், ஆஃபர் பற்றி விரிவாகவே விளக்கினார்... 

* எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

இதுவரை நமக்கு நன்றாகத் தெரிந்த சங்கதி, ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ மட்டும்தான். ஏற்கனவே உபயோகித்த ஒரு பொருளை கடையில் கொடுத்துவிட்டு புதிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்வது. இதைத்தான் கொஞ்சம் நவீனமாக, ‘பை பேக் ஆஃபர்’ எனச் சொல்கிறார்கள்.

 உண்மையில் ‘பை பேக்’ என்பதன் அர்த்தம், நீங்கள் கொடுக்கும் பழைய பொருட்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வது. ஆனால், நிறுவனங்கள் பணத்தைக் கொடுப்பதில்லை. மாறாக, உங்களை ஒரு பொருள் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். இந்த அணுகுமுறையை வாடிக்கையாளர்கள் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில், வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கத்தானே முயற்சி செய்வார்கள்!

* கேஷ்பேக் ஆஃபர்

சில நிறுவனங்கள் வங்கிகளுடன் சேர்ந்து வாடிக்கையாளருக்கு ஆஃபர் தருகின்றன. அதாவது, குறிப்பிட்ட அந்த வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தும் நபர்களுக்கு 5%, 10%, 15% என பல்வேறு சதவீதத்தில் தள்ளுபடி தரப்படுகிறது. இதைத்தான் கேஷ் பேக் ஆஃபர் என்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய் பொருளுக்கு 5% ஆஃபர் கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

 நீங்கள் பொருட்கள் வாங்கினதும், ஆயிரம் ரூபாயை உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால், கிரெடிட் கார்டு பில் கட்டும்போது அந்த வங்கி உங்கள் பில்லில் 50 ரூபாய் தள்ளுபடி தந்துவிடும். அதேபோல், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அந்த தள்ளுபடி பணம் ஒரு சில நாட்களில் மீண்டும் அக்கவுன்டில் சேர்ந்து விடும்.

* ரிவார்டு பாயின்ட்ஸ்

இதுவும் ஒரு வகை கேஷ் பேக் ஆஃபர்தான். சில வங்கிகள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் செலவழிக்கிற ஒவ்வொரு பணத்துக்கும் ரிவார்டு பாயின்ட்ஸ் கொடுப்பார்கள். நூறு ரூபாய்க்கு ஒரு பாயின்ட் என வைத்துக்கொண்டால், 20 ஆயிரம் ரூபாய்க்கு 200 பாயின்ட். அதாவது, 200 ரூபாய். இப்படியே பாயின்ட் சேர்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில், அந்த பாயின்டுகளைக் கொண்டு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிட்ட காலத்துக்கு ஆஃபர் போடுவார்கள். உங்கள் நண்பர் போன் வாங்கியிருப்பது இந்த பாயின்ட்ஸ்களைப் பயன்படுத்தித்தான். பெரும்பாலும் பெட்ரோல் பங்குகளின் கூட்டணியோடு தரப்படும் விசேஷ கிரெடிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளில் இந்த பாயின்ட்ஸ் முறை அதிகம் இருக்கும். சீக்கிரமாகவும் பாயின்ட்ஸ் சேரும்.

* ஜீரோ மார்ஜின் ஆஃபர்


சில சமயங்களில் சில கடைகள் / நிறுவனங்கள் லாபமே இல்லாமல் தங்கள் பொருட்களை கம்பெனி விலைக்கே விற்பதாகச் சொல்வார்கள். ‘அதெல்லாம் எப்படி முடியும். லாபம் இல்லாமல் விற்க அவர்கள் என்ன தொண்டு செய்யவா வந்திருக்கிறார்கள்?’ என நினைப்பவர்கள் உண்டு. உண்மையில் லாபகரமாக தரப்படும் ஆஃபர்தான் இது. ஒரே நாளில் நிறைய பொருட்களை ஆஃபர் மூலம் விற்க முடிந்தால் உடனடியாக பணம் கைக்கு வந்துவிடும். அதை அவர்கள் உடனே கம்பெனிகளுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று முதல் ஆறு மாத காலத்தில் கொடுத்தால் போதும். இதனைப் பயன்படுத்தி அந்த விற்பனை நிறுவனங்கள் வங்கிகளில் இந்தப் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டிக் கொள்கின்றன. இதில் வாடிக்கையாளரு க்கும் லாபம்தான்!

இந்த ஆஃபர் மட்டுமல்ல... மேற்படி எல்லா ஆஃபர்களுமே சம்பந்தப்பட்ட கடைகள் அல்லது வங்கிகளின் லாபத்துக்காக அல்லது உடனடி பணமாக்கலுக்காக தரப்படுவதுதான். எதையும் தோண்டித் துருவிக் கேட்டு அறிந்துகொண்டு, அதன் மூலம் உங்களுக்கு லாபமா என கணக்கிட்டுப் பார்த்து, தேவையான பொருட்களை மட்டும் வாங்குவதே புத்திசாலித்தனம்!
‘அதெல்லாம் எப்படி முடியும். லாபம் இல்லாமல் விற்க அவர்கள் என்ன தொண்டு செய்யவா வந்திருக்கிறார்கள்?’

பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்