சங்கிலி



‘‘அண்ணா, எனக்கு அவசரமா இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுது. நீ என் கல்யாணத்துக்குப் போட்ட ரெண்டு பவுன் சங்கிலியை வெளிய எங்கயாவது அடகு வைக்கறதுக்கு பதிலா நீங்களே
வச்சிக்கிட்டு...’’

- அண்ணன் பிரபு முன்பாக அந்தச் சங்கிலியை வைத்தாள் சுகுணா.பிரபு தயங்கி நிற்க, அவன் மனைவி வடிவு விருட்டென்று வந்து அந்தச் சங்கிலியை எடுத்தாள். ‘‘உனக்கில்லாத உதவியா சுகுணா? இரு, வர்றேன்!’’ என்றவள், உள்ளே சென்று,

 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருபதாயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.‘‘ரொம்ப தேங்க்ஸ் அண்ணி. ஒருவேளை இதை என்னாலே திருப்பிக்க முடியலைன்னாலும் உங்ககிட்ட இருக்கறதே எனக்கு நிம்மதி! வரட்டுமா அண்ணா!’’ - புறப்பட்டாள் சுகுணா.

‘‘ஆமாம்... ஏது இவ்வளவு பணம் உன்கிட்ட?’’ - விசாரித்தான் பிரபு.‘‘சிறுக சிறுகச் சேர்த்ததுங்க. இப்ப ரெண்டு பவுன் 20 ஆயிரத்துக்கு எங்க கிடைக்கும்? அதான்!’’ என்றாள் வடிவு. ‘‘அடிப் போடி... சுகுணா கல்யாணத்துல பணம் புரட்ட முடியாம, நான் கவரிங் சங்கிலியைத்தான் வாங்கிப் போட்டு அனுப்பினேன். அது அவளுக்கு இப்போ தெரிஞ்சு போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் நாசூக்கா சங்கிலியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தோட போறா’’ என்றான் பிரபு. வடிவு அதிர்ந்தாள்.           

ராஜன் புத்திரன்