ஆசை



ராகவனுக்கு அடுத்த வாரம் ரிட்டயர்ட்மென்ட். மத்திய அரசு வேலை. மனைவியோடு வசித்த குவாட்டர்ஸை காலி செய்ய வேண்டும். எப்போதும் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். மூன்று மகன்கள்... அதே ஊரில் இருந்தும் என்ன புண்ணியம்? அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மாவை உரிமையாக வீட்டுக்கு வரச் சொல்லி கவனிக்கக் கூட மனமில்லை. திட்டமிட்டே தூரம் தூரமாய் வீடு பார்த்து சென்றுவிட்டார்கள்.

ராகவன் ரிட்டயர்டு ஆனதுதான் தாமதம்... மூத்த இரண்டு மகன்களும் அப்பா அம்மாவை தங்களுடன் வந்து விடுமாறு போட்டி போட்டு அழைத்தனர். மூன்றாவது மகனிடமிருந்து அழைப்பு இல்லை. ராகவன் அவனை போனில் அழைத்தார்...‘‘நீ மட்டும் ஏம்பா எங்களைக் கூப்பிடலை?’’

‘‘அப்பா! அண்ணனுங்க மாதிரி நான் பெரிய வேலை பார்க்கலை. சாதாரண சம்பளம் வாங்கறேன். நீங்க வேலையில இருக்கும்போதே அம்மாவை வீட்டுக்குக் கூப்பிடவும் ஆக்கிப் போடவும் எனக்கு வசதி இல்லை. இப்ப நான் உங்களைக் கூப்பிட்டா உங்க ரிட்டயர்மென்ட் பணத்துக்கும் பென்ஷன் பணத்துக்கும் ஆசைப்பட்டு கூப்பிட்டதா ஆகிடும். அதான்...’’ என்றான் அவன் தயங்கியபடி. அடுத்த நாள்...பணத்தாசை இல்லாத மூன்றாவது மகன் வீட்டுக்கே மூட்டையைக் கட்டினார்கள் அவர்கள்!          

வி.சகிதா முருகன்