காமெடி சிக்ஸர்... மெசேஜ் மிக்ஸர்!



“என்னோட ‘தில்லுமுல்லு’ படத்துக்கு ஒரு டீஸர் வெளியிட்டோம். ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஊழலில் மாட்டிக் கொண்டு அழுவார்; இந்தப் பக்கம் சிவா சிரிப்பார். ஸ்ரீசாந்த் ஊழல் வெளியான நேரத்துல அது வரவும், அதற்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ்.

 டீஸருக்கே இவ்வளவு வரவேற்புன்னா, இந்த ஊழலையே ஒரு படமா கலகலன்னு செய்தால் எப்படியிருக்கும்னு நினைச்சேன். பலன்... ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தயாரிக்க முடிஞ்சது. அதனோட ரிசல்ட்தான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ ’’ - உற்சாகமாகப் பேசுகிறார் டைரக்டர் பத்ரி.

‘‘டாபிக்கல் மேட்டர்... நிறைய டீடெயில் தேவைப்படுமே?’’


‘‘நாம ஆசைப்பட்டு, வியர்வை சிந்தி, க்யூவில் நின்னு, தொண்டை தெறிக்கக் கத்தி, நாட்டுப்பற்றில் துடிச்சு, கிரிக்கெட் பார்க்கிறோம். ஆனால், அங்கே நடக்கிறது என்ன? ஒரு ப்ளேயரை எப்படி விலைக்கு வாங்குறாங்க... அதற்கு எப்படி அப்ரோச் நடக்குது... ப்ளேயரின் பலவீனங்கள் எப்படி கண்காணிக்கப்படுது என்று பார்த்தால், கிடைக்கிற தகவல்கள் சும்மா ‘கிர்’னு சுத்தியடிக்குது. நாம்தான் ஒண்ணுமே தெரியாமல் கடைசி ஓவர், கடைசி பால்னு ரத்த ஓட்டம் நின்னு போற மாதிரி எழுந்திரிச்சு நிற்கிறோம்.

எல்லாமே திட்டமிடப்பட்டது, ஜோடிக்கப்பட்டது. அறிந்தே ஏமாற்றப்படுகிறோம் என்பதுதான் ஒரு மனிதன் அடைகிற வேதனைகளில் மிகக் கொடுமையானது. விளை யாட்டு இப்படி சூதாட்டமாகிப் போன விஷயத்தை மௌனமாகப் பார்த்தபடி, வழி இல்லாமல் ஏற்றுக்கொள்கிற துரதிர்ஷ்டம்தான் நம் எளிய ஜனங்களுக்கு வாய்த்திருக்கிறது. இதையே ஜாலியாக நகைச்சுவையாக சொல்லலாம்னு நினைச்சோம். இப்ப முடிவாய் வந்திருக்கிற படம் சந்தோஷமா இருக்கு!’’

‘‘ ‘ஜிகர்தண்டா’ சூட்டோடு சிம்ஹாவை ஆட வச்சிருக்கீங்களே?’’

‘‘சிம்ஹா, கருணாகரன், பாலாஜின்னு செமயான செட். ஷூட்டிங் யூனிட் கலகலப்பின் உச்சியில் இருந்தது. நீங்க இதுவரைக்கும் பார்த்த சிம்ஹா வேற. இப்ப இதில் இருக்கிற சிம்ஹா புதுசு. அவர் ஒரு கால் டாக்ஸி டிரைவரா வர்றார். அவரே ஒரு சூதாட்ட வலையில் சிக்கி சின்னாபின்னமாகி எப்படி வெளியே வருகிறார் என்பதும் கதை. மத்த ஊழலில் ஸ்பாட்டுக்குப் போக வேண்டியிருக்கும். இங்கே வீட்டில் இருந்தபடி, ஒரே போனில் எல்லாமே நடக்குது.

எக்கச்சக்கப் பணம் கை மாறுது. இதனால் தெருவிற்கு வந்த குடும்பங்களை நான் பார்த்திருக்கேன். எந்த விஷயத்தையும் இனிப்பு கோட்டிங் போட்டுக் கொடுத்தால் ஏத்துக்கறது நம்ம இயல்பு. அதைத்தான் செய்திருக்கோம். இதில் அவர் அசலா இருக்கிற மாதிரியே இளமையான சிம்ஹா. காமெடியில் பின்றார்.

 படு பயங்கரமான வில்லனிலிருந்து ஸ்மார்ட்டான சிம்ஹாவா மாறியிருக்கார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த சிம்ஹா இன்னும் பிடிக்கும். ஏமாறுவது, ஏமாற்றுவது என இந்த மூணு பேர் டீம் பண்ணுகிற அலப்பறை, படம் முழுக்க இருக்கு. கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கும் ஒரு நல்ல கேரக்டர்!’’

‘‘பெண்கள் யாரும் இல்லையா பிரதர்?’’

‘‘விஜயலட்சுமி. குடும்பப்பாங்கா இருக்கணும், அதே நேரத்தில் அளவான கவர்ச்சியும் வேணும், நடிப்பும் அவசியம்னு நினைக்கும்போது எங்களுக்கு இவர் நினைவுக்கு வந்தார். அட்சர சுத்தமா தமிழ் தெரிந்த ஹீரோயின் எப்பவும் நம்ம தமிழ் சினிமாவிற்கு அபூர்வம்தான்.

 ஒவ்வொரு மும்பை பொண்ணுக்கும் கதை விளக்கி, வசனம் சொல்லி, அதை யதார்த்தமாக உச்சரிக்க வைக்கிறதுக்குள் ‘அப்பாடா’ன்னு ஆகிடும். அப்படி எதுவும் இல்லாம அருமையா நடிச்சாங்க. அவங்களுக்கு கருணாகரனோட டூயட் கூட இருக்கு. பாடல்களில் கிளாமர் இருக்கணும்னு கேட்டப்பவும் ஓகே சொன்னது ஆச்சரியம்.’’

‘‘டி.வி ப்ரமோ பின்னுது..?’’

‘‘காமெடி, கடைசி கட்ட பரபரப்புன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. கடைசிக் காட்சியில் மியூசிக் மட்டுமே நிறைய இடங்களில் இருக்கு. அப்பத்தான் ஒரு நண்பர் என்னை கர்நாடக இசைக் கச்சேரி கேட்கக் கூப்பிட்டார்.

போனால், அவர் அருமையாகவே பாடினார். கச்சேரி முடித்துப் பார்த்தால் அவர்தான் ராகவேந்திர ராஜா என்கிற ஷான் ரோல்டன். ‘முண்டாசுப்பட்டி’யில் தூள் கிளப்பியவர். சாண்டில்யனின் பேரன். ‘யூ டியூபி’ல் பெயர் போட்டாலே அவரது திறமைகள் பளிச்சிடுது. கர்நாடகக் கச்சேரியிலும் பின்றார்; சினிமா வுக்கும் பொருத்தமா இருக்கார். எனக்கு ரொம்ப நிம்மதியாப் போச்சு. ரமேஷ் வைத்யா ப்ரமோ பாட்டு ஒண்ணு எழுதியிருக்கார்.

‘கூட நின்னு கோடி ஜனம் கூச்சல்களை போடஇந்த டீமும், அந்த டீமும் ஜெயிக்க வேண்டி ஆடவேர்த்து வழிய ஆடினவன் வெறுங்கையோடு போகநாங்க ஆடாம ஜெயிச்சோமடா நாங்க நாடாளப் போறோமடா’ன்னு அருமையான பாட்டு. ‘தில்லுமுல்லு’களை எடுத்து, இதோ இதோன்னு காட்டிக் கொடுக்கிற பாட்டு. அப்ஷாட் மதுசூதனன், சுதிர் ஜெயினோடு நானும் சேர்ந்து முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயமான காமெடி ட்ரீட்மென்டுக்கு பூர்ணமான உத்தரவாதம்!’’

- நா.கதிர்வேலன்