பொலிட்டிகல் பீட்



உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கும்போது, மூத்த அமைச்சர் அசம் கான் வீட்டில் காணாமல் போன எருமை மாடுகளைத் தேடும் பணியில் மாநில போலீசார் பிஸியாக இருந்தது சில மாதங்களுக்கு முன்பு பெரும் பிரச்னை ஆனது. அதே அமைச்சர் அதேபோல எருமை சர்ச்சையில் மீண்டும் சிக்கியிருக்கிறார்.

அசம் கான் வீட்டுக்கு ஐந்து எருமைகள் பஞ்சாப்பிலிருந்து வாங்கப்பட்டன. அவை லாரியில் எடுத்து வரப்பட்ட வழியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில் அவற்றுக்கு உணவு கொடுத்தனர். (சப்பாத்தி வாங்கி கான்ஸ்டபிள்களே ஊட்டி விட்டார்களாம்!) அதோடு அவற்றுக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனமும் கூடப் போனதாம்!

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முக்கியமான தலைவர்கள் 25 பேரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு தலைவரின் பிறந்த நாள் வரும்போது, அவரது படத்தின் ஃபிரேமுக்கு புதிதாக பொன்னிற வண்ணம் பூசப்படும்.

அதைத் தொடர்ந்து அலங்காரங்கள் செய்யப்பட்டு, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். சமீபத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் வந்தபோது, பொன்னிறம் பூசப்படவில்லை. ‘இதையும் மோடி மாற்றி விட்டாரா?’ என காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்கிறார்கள்.

சுதந்திர தின விழாவில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி தனது தலையில் கம்பீரமாக ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்திருந்தார். இந்தியாவின் வல்லமையை உலகுக்கு உணர்த்துவதற்காக மோடி அணிந்த தலைப்பாகை, அநேகமாக காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட்டை பெருமூச்சு விட வைத்திருக்கும்.

 ராஜஸ்தான்காரரான சச்சின், அந்த மாநிலத்தில் காங்கிரஸை வெற்றி பெற வைக்கும்வரை தலைப்பாகை அணிய மாட்டேன் என சபதம் செய்திருக்கிறார். ‘‘பைலட் தலைப்பாகை அணிய பல ஆண்டுகள் ஆகும்’’ என காங்கிரஸ்காரர்களே சொல்கிறார்கள்.

பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றதும் அமித் ஷா முதலில் எடுத்தது சிக்கன நடவடிக்கையைத்தான். முன்பெல்லாம் சீனியர் தலைவர்கள் கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்குப் போவது என்றால், சிறப்பு விமானத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கட்டணத்தை கட்சி செலுத்தும். இப்போது இந்த வசதி மறுக்கப்பட்டு, வழக்கமான விமானத்தில் டிக்கெட் போட்டுத் தரப்படுகிறது. இதர பயணிகளோடு சமமாக அமர்ந்துதான் போக வேண்டும். அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கேகூட இதுதான் விதி என மாற்றியாகி விட்டது.

லஞ்சம் பற்றி ஒரு மாநில முதல்வர் பேசும்போது சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்தான். ஆனால் அந்தப் பேச்சு அவரது சொந்தக் கட்சிக்காரரையே காலை வாரி விட்டால் என்ன ஆவது? பீகாரில் தோல்வி கண்டதால் பதவி விலகிய நிதிஷ் குமார், தனது கட்சியைச் சேர்ந்த ராம் மஞ்சி என்பவரை முதல்வர் ஆக்கினார்.

‘‘நிதிஷ் குமார் ஆட்சி செய்யும்போது, எங்கள் சொந்த வீட்டு மின் கட்டணத்தைக் குறைப்பதற்காக நாங்களே லஞ்சம் தர வேண்டியிருந்தது’’ என மஞ்சி வெள்ளந்தியாகப் பேசி வைக்க, சங்கடத்தில் தவிக்கிறார் நிதிஷ்.