பேசும் சித்திரங்கள்



தமிழ் 22 ஸ்டுடியோ அருண்

நட்பு எனப்படுவது யாதெனில்...‘‘இன்றைய கலாசாரத்தில் காணப்படும் படிமங்களின் தரப் பற்றாக்குறை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள படிமங்கள் படிப்படியாக வலிமையிழந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். பிம்பங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு சக்தியிழந்தவையாக ஆகிவிட்டன.

தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், பெரிய அளவிலான உருவப்படங்களிலும், கிராண்ட் கன்யான் போன்ற இயற்கைக் காட்சிகளையோ, பிற காட்சிகளையோ மீண்டும் மீண்டும் காணும்போது அவை பிம்பங்களை அபாயகரமான ஒரு நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதை உணர்கிறேன். நமது பார்வையைக் கெடுப்பவற்றில் மிகவும் அபாயகரமானதாக தொலைக்காட்சியைக் கருதுகிறேன்.

கைக்குண்டுகளை வீசித் தொலைக்காட்சி நிலையங்களைத் தகர்த்து அழிக்காமல் விட்டு விட்ட குற்றத்திற்காக நம் பேரக் குழந்தைகள் பின்னாளில் நம் மீது குற்றம் சாட்டப்போவது நிச்சயம். பார்வையாளரின் கற்பனை வளத்தைத் தொலைக்காட்சி அதன் உயிரற்ற பிம்பங்களைக் கொண்டு கொன்று விடுகிறது!’’- வெர்னர் ஹெர்சாக், புகழ்பெற்ற ஜெர்மன் இயக்குனர்தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பச் சீரழிவிற்கு ஈடாக, திரைப்படங்கள் கூட குழந்தைகளுக்கான பிம்பங்களை கட்டுடைத்து நாசம் செய்து வைத்திருக்கின்றன.

பெரியவர்களை திரையரங்கிற்கு அழைத்து வர, குழந்தைகளை வைத்துப் படமெடுக்கிறார்கள். ஆனால் அவைகூட பெரியவர்களுக்கான படங்களாகவே இருக்கின்றனவே தவிர, சிறுவர்களுக்கான படமாக இருப்பதில்லை. நடனம், பாட்டு, பேச்சு என எல்லா திறமைகளையும், தொலைக்காட்சிப் பெட்டிகள் போட்டிக்கு உரிய ஒன்றாக மாற்றி, சிறுவர்களுக்கான எல்லா தேடல்களையும் அழித்தொழித்து விட்டன. போலியாக வாழ்வதில் இருக்கும் சொகுசை சிறுவர்கள் இப்போதே சுவைக்கத் தொடங்கி விட்டார்கள்.

சிறுவர்களின் நிஜ பிம்பத்தை இன்னமும் கொஞ்சமாவது உயிர்ப்போடு வைத்திருப்பவை தமிழில் குறும்படங்கள் மட்டுமே. ஆங்காங்கே சில தொழில்நுட்பப் பிரச்னைகள், தமிழ் சினிமாவின் தாக்கம் என சில குறைகள் இருந்தாலும், கதையளவில் இன்னமும் குறும்படங்கள், அதன் செறிவை இழக்கவில்லை. ‘ஒரே ஒரு நாள்’ என்கிற குறும்படமும், சிறுவர்களுக்கான பிம்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

சிறுவர்கள் ஒரு தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் பந்தை ஓங்கி அடிக்க, அது அருகில் இருக்கும் மாடி வீட்டில் விழுந்து விடுகிறது. பந்தை எடுத்துத் தருமாறு, அந்த மாடி வீட்டில் இருக்கும் சிறுமியை சக சிறுவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அவளும் எடுத்துக்கொடுக்கிறாள். பந்தை எடுத்துக் கொடுக்கும்போது சிறுவர்கள் கவனிக்கிறார்கள். அவள் சரியாக நடக்க முடியாமல், இரண்டு ஊன்று கோல்களை வைத்துத் தாங்கித் தாங்கி நடக்கிறாள். இதனைப் பார்க்கும் சிறுவர்களுள் ஒருவனான செல்வா, அவளுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்.

சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவின் பாசத்திற்காக இங்கே இருந்தபடி ஏங்கும் ரம்யாவிற்கு, வீட்டு வேலைக்காரியின் எரிச்சல் மிகுந்த பேச்சுகளே பாசமாகக் கிடைக்கிறது. மாற்றுத் திறனாளி என்பதால், வெளியுலகம் தெரியாமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே இருக்கும் ரம்யா, செல்வாவிடம் தன்னை ஒருநாள் வெளியே அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறாள். அவள் கால்கள் இயல்பாக இல்லாத காரணத்தால், வேறு யாரும் அவளை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாததையும் அவள் ஆதங்கத்தோடு சொல்கிறாள்.

செல்வா அவளை ஒரு நாள் ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்கிறான். நீர்நிலைகள், காடு, மாமரத் தோப்பு என எல்லா இடங்களையும் இருவரும் இணைந்து சுற்றிப் பார்க்கிறார்கள். நீர்நிலைகளில் விளையாடி தீர்க்கிறார்கள். அன்புக்கு அடையாளமாக அவனுக்கு ஒரு பொம்மையை பரிசளிக்கிறாள் ரம்யா. மாலை நேரம் ஆனதும், ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் செல்வா. தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களான அவனது பெற்றோர்கள், ரம்யாவை அன்போடு வரவேற்கிறார்கள்.

வாழையிலையில் சாப்பாடு போட்டு உபசரிக்கிறார்கள். ஒரு தோல்பாவைக் கூத்துக் கதையும் அவளுக்காக பிரத்யேகமாக நிகழ்த்திக் காட்டுகிறார்கள். தன் வாழ்வில் இத்தனை மகிழ்ச்சியான மனிதர்களை சந்தித்திராத ரம்யா, அன்று இரவு மன நிறைவோடு வீட்டிற்குச் செல்கிறாள். மறுநாள் செல்வாவைத் தேடி, அவனது வீட்டிற்கு வருகிறாள் ரம்யா. கழைக் கூத்தாடிகள் என்று ஊர் அழைக்கும் அந்த மாபெரும் கலைஞர்களையும், செல்வாவையும் அவள் சந்தித்தாளா இல்லையா என்பதை சிறுவர்களின் பார்வையில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

மிக நேர்த்தியான கேமரா கோணங்கள், அருமையான ஷாட்ஸ் என தொழில்நுட்ப ரீதியில் ‘ஒரே ஒரு நாள்’ குறும்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. முதல் காட்சியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை காட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கும் ஷாட்ஸ் பிரமாதமானவை. மிக நிசப்தமான பின்னணி. ஒவ்வொருவரும் மற்ற நண்பர்களைப் பார்த்துக்கொள்கிறார்கள். செல்வா பந்தை உற்றுநோக்குகிறான். இன்னொரு பெண் பந்து வீச ஓடி வருகிறாள்.

பந்து பக்கத்து வீட்டு சுவரைத் தாண்டி உள்ளே சென்றுவிடும் என பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, பார்வையாளர்களின் கணிப்பை ஏமாற்றி அடுத்த காட்சிக்கு நகர்த்துகிறார்கள். ட்ராலி ஷாட்டின் மகத்துவத்தையும், அதன் அழகியலையும் இந்த முதல் காட்சி அத்தனை அற்புதமாக நமக்கு உணர்த்துகிறது. கதையின் மையத்தை பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் லேண்ட்ஸ்கேப் ஷாட்களும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இருவரும் விளையாடி ஓய்ந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, ஒரு பெரிய மரத்தை பிரமாண்டமாகக் காட்டி, இந்த இருவரையும் புள்ளியாக மறைய விட்டிருப்பார்கள். அந்த மாலை நேர ஒளியும், மரத்தின் பிரமாண்டமான லேண்ட்ஸ்கேப் ஷாட்டும் நமக்குக் கூட கொஞ்சம் நடந்து ஓய்ந்த களைப்பை ஏற்படுத்தும். சார்லி சாப்ளினின் ‘தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு மாடு துரத்துவதற்கு பயந்து, வேகமாக ஓடும் சார்லி சாப்ளின், தெரியாமல் ஒரு சிங்கத்தின் கூண்டிற்குள் சிக்கிக்கொள்வார்.

வெளியே வர முயலும்போது, அவரை அறியாமல் கதவின் தாழ்ப்பாளை இறுகப் போட்டு விடுவார். அடுத்த மூன்று நிமிடங்களுக்கு சிங்கத்தின் கூண்டில் இருந்துகொண்டு அவர் செய்யும் அந்த சேஷ்டைகள் நமக்கு நகைச்சுவையை வரவழைக்கும். ஆனால் அதுதான் ஒரு சர்க்கஸ் கலைஞனின் வாழ்க்கைத் துயரம் என்பதை சார்லி சாப்ளின் சொல்லாமல் உணர்த்தியிருப்பார். சிங்கத்திற்கும், சார்லி சாப்ளினுக்கும் இடைப்பட்ட அந்த தூரம்தான், பார்வையாளனுக்கும் கூத்துக்கலைஞர்களுக்கும் இருக்கிறது.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களாக வரும் செல்வாவின் பெற்றோர், நிலையான இடம் இல்லாமல், நாடோடிகளாக தங்கள் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக வருத்தப்படுவதும் இல்லை.

அதே நேரத்தில், மாளிகை மாதிரி வீட்டில் இருக்கும் சிறுமி ரம்யாவிற்கு நிலையான இடத்தைத் தாண்டி, நிலையான மகிழ்ச்சி தேவைப்படுகிறது. மெத்தை வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷத்தை உணர விரும்பினால், குடிசைக்கு இறங்கி வந்துதான் ஆகவேண்டும். குறும்படத்தில் வரும் பாடலும், மாண்டேஜ் ஷாட்களும் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

படம்: ஒரே ஒரு நாள்    இயக்கம்: அபிலாஷா உதயகீத்
நேரம்: 11.32 நிமிடங்கள்    ஒளிப்பதிவு: யுகராஜ்
இசை: பிரிட்டோ, சுனில், சுரேஷ்    படத்தொகுப்பு: பாலாஜி
பார்க்க: http://vimeo.com/73365427

கூத்துக் கலைஞர்கள்
நிலையான இடம் இல்லாமல்,
அடிக்கடி மாறிக்கொண்டே
இருக்கிறார்கள். மாளிகை வீட்டில்
இருப்பவர்களுக்கு நிலையான
இடத்தைத் தாண்டி, நிலையான
மகிழ்ச்சி தேவைப்படுகிறது.

சென்னை பிரசாத் பிலிம் அகாடமியில் படித்துக் கொண்டிருக்கும்போது, கல்லூரித் தேர்வுக்காக அபிலாஷா எடுத்த குறும்படம்தான் இந்த ‘ஒரே ஒரு நாள்.’ ஆனால் அதையும் தாண்டி தங்கப் பதக்கத்தையும், இந்தியா முழுவதிலும் பல்வேறு விருதுகளையும், இந்த குறும்படம் அபிலாஷாவிற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.

தமிழில் பெண் இயக்குனர்கள் அதிகம் இல்லை. தவிர, அழகியல் நுட்பத்துடன் படங்களை எடுக்கக் கூடிய இயக்குனர்கள் இல்லவே இல்லை என்று சொல்லலாம். அபிலாஷா கதை சொல்லல் முறையில் இருக்கும் அழகியலை கேமராவின் துணைகொண்டு நிரப்பிக் கொள்கிறார். இரண்டு நண்பர்கள் பற்றி படம் எடுக்க முற்பட்டு, இருவேறு வித வர்க்க நிலையைப் பதிவு செய்துள்ளார். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி