வந்தாச்சு இளநீர் வெட்டும் மெஷின்!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழக்கடை நடத்தி வரும் ஜெயராஜுக்கு ஒரு புது அடையாளம் கிடைத்திருக்கிறது. ‘எலேய்... மெஷின் இளநி வெட்டுதாம்ல!’ என வரும் பார்வையாளர்களாலேயே விற்றுத் தீருகிறது இவர் கடை இளநீர்.

 ‘‘அண்ணே! ஒரு இளநி’’ என்றதும் நல்ல காயாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து மெஷினில் வைக்கிறார் ஜெயராஜ். அரிவாள் இல்லை... வெட்டுகள் இல்லை. ஒரே ஒரு துளை மூலம், ஓபன் பண்ணிக் கொடுத்து விடுகிறது இந்த ‘இளநீர் கட்டிங் மெஷின்.’ தென் மாவட்டங்களில் இவர் கடையில் மட்டுமே இந்த மெஷின் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஏரியாவாசிகள்.

‘‘ஒரு சோலியா டெல்லிக்குப் போயிருந்தப்ப அங்க இந்த மெஷினைப் பார்த்தேன் சார்... ‘அட, நம்ம கடையில இருந்தா நல்லா இருக்குமே’ன்னு நினைச்சேன். ஆனா, எங்க கிடைக்கும்னு விசாரிக்க முடியல. நம்மூருக்குத் திரும்பி வந்த பெறகு, ‘இப்படி ஒரு மெஷினய்யா... நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்’னு எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி விசாரிச்சேன்.

ஒரு ஃபிரண்ட்தான் கோயம்புத்தூர்ல தயார் பண்றாங்கன்னு சொன்னாப்ல. போய் பார்த்து வாங்கிட்டு வந்துட்டேன். விலை எட்டாயிரம் ரூபாய். வாங்கி ஆறு மாசம் ஆச்சு. இது வந்த பிறகு வேலை ரொம்ப ஈஸியா இருக்கு சார். முன்னாடியெல்லாம், இளநி வெட்டவே ஒரு ஆள் போடணும். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். இப்ப, நானே கல்லாவையும் பார்த்துக்கிட்டு இளநியும் வெட்டிக் கொடுத்துடுறேன்.

இந்த மெஷின் இரண்டு வேலையைச் செய்யுது. முதல்ல ஒரு கம்பி, இளநியை ஓட்டை போட்டுக் கொடுத்துரும். குடிச்சு முடிச்ச பிறகு, இந்தக் கட்டிங் மெஷின் மூலமா ரெண்டா கட் பண்ணிரலாம். ரெண்டுமே ஒரே மெஷின்ல அடங்கிருது. இதனால, இளநி குடிக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது. கைக்கும் எந்த ஆபத்தும் இல்ல. ஒரு நாளைக்கு 200 இளநி வரை என் கடையில போகுது. இனி அருவாள்ல வெட்டிக்கிட்டு கஷ்டப்படத் தேவையில்ல பாருங்க...’’ என்கிறார் கூலாக. சூப்பர்ஜி!

பேராச்சி கண்ணன்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்