அவன் அவள் unlimited



பேசிக் கொல்வாள்  பெண்... கவிதையால் கொல்வான்  ஆண்!

யாருக்கும் பெரிதாகத் தேவைப்படாதவற்றை உருவாக்குபவனே படைப்பாளி!
- ஆண்டி வார்ஹால்

‘ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா...
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா...’

இத்தனை உளவியல்பூர்வமாக படைப்பாற்றலை யாருமே அணுகியதில்லை. அயல்நாட்டு அறிவியல் இப்போதுதான் இந்தக் கோணத்தில் சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. அந்தக் காலத்தில் கவிதை ஆராய்ச்சியை கவிதை மூலமே செய்த நம் கவியரசருக்கு நன்றி! நிஜமாகவே செக்ஸ் போன்றதுதான் கலைகள் எல்லாமே. அவை, மன அழுத்த வடிகால்கள்!

சாதாரணமாக நாம் வீடுகளில் பார்க்கும் காட்சிதான். மொத்தக் குடும்பத்தையும் ஒரு பிரச்னை பாதித்திருக்கும். ஆனால், குடும்பத் தலைவியிடம்தான் அதன் பாதிப்பும் பதற்றமும் தெரியும்.
‘‘சொந்தக்காரன், நல்லவன்னுதான் அவனை நம்பினீங்க. இப்ப அவனே துரோகம் பண்ணிடுவான் போலிருக்கே...’’ - பெண்கள் இப்படிப் புலம்புவது ரொம்ப சகஜம். ஆனால், தான் பேசப் பேச, டி.வியில் கிரிக்கெட், கம்ப்யூட்டரில் விளையாட்டு, செல்போனில் பாட்டு என ஏதாவது ஒன்றில் மூழ்கியிருக்கும் கணவர்களைப் பார்த்தால், இல்லத்தரசிகளுக்குப் பற்றிக் கொண்டு வரும்.

‘‘கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? கவலை தெரியுதா? இப்படி சின்ன புள்ளையாட்டம் விளையாடிட்டிருந்தா ஏமாத்தாம என்ன செய்வான்?’’ - பிரச்னையிலிருந்து அந்த மூன்றாவது நபர் நழுவிப் போக, இனி இது கணவன் - மனைவி கலவரமாக வெடிக்கும். ஆனால், ஒன்று... இப்படியெல்லாம் படபடவென்று தன் ஆற்றாமையைப் புலம்பி, கத்தி, அழுது தீர்க்கும் பெண்கள், படுக்கையில் விழுந்த மறு நிமிடம் தூங்கியிருப்பார்கள். ஆனால், துரோகத்தால் துளைக்கப்பட்ட ஆண் மனம், தூங்காமல் தவிக்கும்.

‘‘ஆண்களும் பெண்களும் தங்கள் மன அழுத்தத்துக்கு ஒரே மாதிரியாக மருந்து தேடுவதில்லை’’ என்கிறது அமெரிக்கன் சைக்காலஜிக்கல் அசோசியேஷன். ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் தரும் ஆண் - பெண் ஒப்பீடு சுவாரசியமானது.

* பெண்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி பல கோணங்களில் பேசுகிறார்கள்.
* ஆண்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி நினைப்பதையே தவிர்க்கிறார்கள்.
* கவலைகளை மறக்க பெண்கள் தோழிகளுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்கவே விரும்புகிறார்கள்.
* ஆண்கள் தங்கள் கவலைகளை மறக்க தனிமையை விரும்புகிறார்கள். அல்லது, விளையாட்டு, இசை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.

‘‘நிஜம்தாங்க. பெண்களின் மன அழுத்தத்துக்கு அவர்களின் பேச்சும் கண்ணீரும் பெரிய மருந்து’’ எனத் துவங்கினார் மன நல ஆலோசகரான பிருந்தா ஜெயராமன்.‘‘கலைகள் எல்லாமே சோகத்தின் வெளிப்பாடு என்று சொல்ல முடியாது. ஆனால், சோகத்தின்போது சிறந்த கலைகள் பிறப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

‘ஆண்கள் அழக்கூடாது’ என நம் சமூகம் ஓர் கட்டுப்பாட்டைக் கற்பிக்கிறது. புலம்புவது ஆண்களின் இயல்பு அல்ல. ஆக, பெரும்பாலான ஆண்கள் சோகத்தை தங்களுக்குள்ளேயே போட்டு அழுத்தி வைக்கிறார்கள். ஓவியம், கவிதை எனக் கலை வடிவாக அந்த அழுத்தம் பீறிட்டுக் கிளம்பினால் சந்தோஷம்தான். ஆனால், பெரும்பாலான ஆண்களின் மன அழுத்தம் போதை, புகை என தவறான பாதை காட்டி விடுகிறது’’ என்றார் அவர், கவலையோடு!

அப்படியானால், கலைகள் எல்லாமே ஆண்களுக்குச் சொந்தமானவையா? இப்படிச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், ‘கலை வடிவங்கள் பெரும்பாலும் ஆணின் திறமையை வெளிப்படுத்துவதற்காகப் பிறந்தவைதான்’ என்பது உயிரியலாளர்களின் கருத்து. பெண் பறவையை இம்ப்ரஸ் பண்ண ஆண் பறவை வானில் ராணுவ சாகசம் புரிவதில்லையா? காளை, பசுவிடம் துள்ளித் துள்ளி சர்க்கஸ் காட்டுவதில்லையா? மயில் செமையாய் ஒரு டான்ஸ் போடுவதில்லையா? இப்படித் தங்கள் பராக்கிரமத்தை, அழகை வெளிக்காட்டிக்கொள்ளும் அவசியம் ஆண்களுக்குத்தான் இருந்திருக்கிறது.

கூடவே மொழிப் பிரச்னை வேறு! பெண்கள் மூளையில் வலுப்பெற்று விளங்கும் மொழித்திறன், ஆண்களிடம் கொஞ்சம் மந்தம். ஆக, பேச்சின் உதவியின்றி தங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கே உண்டு! இன்று ஆண்களைக் கவருவதற்காக பெண்கள் கவர்ச்சி நடனமாடுவதெல்லாம் உயிரியல் தேவை அல்ல. செயற்கைத்தனம். சொல்லப் போனால், ஆண்கள் செய்ய வேண்டிய கவர்ச்சிப் பிரயத்தனத்தை பெண்களிடம் சுமத்தி அவர்கள் காலில் சலங்கை கட்டி விட்டதைத்தான் ஆணாதிக்கம் என்று சொல்ல வேண்டும். இயற்கையாக பெண்ணுக்கு அப்படிப்பட்ட அவசியம் இல்லவே இல்லை.

ஆண்களின் இனக்கவர்ச் சிக்கும் படைப்பாற்றலுக்கும் தொடர்பு உள்ளதற்கு என்ன நிரூபணம்? வ்ளாடஸ் கிரிஸ்கவிஷியஸ் என்ற உளவியலாளர் இதற்காக சோதனை ஒன்றைச் செய்தார். அமெரிக்காவின் மின்னேசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர், ‘சுட்டுப் போட்டாலும் ஓவியம் வரையத் தெரியாது’ என்று சொன்ன 20 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, தன்னந்தனியாக வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னார். பத்து நிமிடம் கழித்து அவர்களை அறைக்குள் அழைத்தார்.

கேன்வாஸையும் பிரஷையும் கையில் கொடுத்து, ‘‘உங்கள் மனதுக்குத் தோன்றுவதை வரையுங்கள்’’ என்றார். அவர்களும் எதையோ கிறுக்கிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஆனால், இந்தச் சோதனை முதல் பத்து பேருக்குத்தான். அடுத்த பத்து பேருக்கு சோதனை லேசாக மாற்றப்பட்டது. அதாவது, வரவேற்பறையில் அவர்கள் தனியாகக் காத்திருக்கப் போவதில்லை. அழகே வடிவாய், ஒரு ரிசப்ஷனிஸ்ட் அவர்களை ஒயிலாக வரவேற்பாள்.

‘‘ஹாய், நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க!’’ என அவளே முன்வந்து நெருக்கம் காட்டுவாள். அவளிடம் கதை கதையாய் இவர்கள் அளந்து விடும்போது, கரடி மாதிரி நடுவே கிரிஸ்கவிஷியஸ் அவர்களை உள்ளே அழைப்பார். ‘‘மனதில் தோன்றுவதை வரையுங்கள்’’ எனும் அதே கட்டளைதான் இவர்களுக்கும். ஆனால், கடந்த விநாடி வரை ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ண முயன்று கொண்டிருந்த இவர்கள், கேன்வாஸில் காட்டிய வண்ணம், அபாரம்.

முந்தைய பத்து ஓவியங்களையும் பிந்தைய பத்து ஓவியங்களையும் கலந்து வைத்தால் ஒரு குழந்தையால் கூட வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். அந்த அளவு கிரியேட்டிவிட்டி பின்னவர்களின் ஓவியங்களில். ‘‘இந்த எஃபெக்ட்டுக்கு நீங்கதான் காரணம்’’ என அந்த அழகு ரிசப்ஷனிஸ்ட்டிடம் ஆராய்ச்சியாளர் சொல்ல, அவர் வெட்கப்பட்டு சிரிக்கும் வீடியோ இப்போதும் யூ டியூபில் இருக்கிறது (பார்க்க: www.youtube.com/watch?v=OHy2A5ejTco).கவிதை எழுதி அடுத்தவரை வதைக்கும் ஆபத்தான உயிரினங்களாக ஆண்கள் இருப்பது ஏனென்று இப்போது புரிகிறதா? பாவம், அவர்களின் காதல் ஆயுதம், காய மருந்து... இரண்டுமே கலைதான்!பெண்கள் தங்கள் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கிறார்கள், சரி... பக்கத்து வீட்டுக் கதைகளை ஏன் பேசுகிறார்கள். அடுத்த வீட்டுக் கதைகள் மீது மனைவிகளுக்கும் அடுத்த வீட்டுப் பெண்கள் மீது கணவர்களுக்கும் அப்படி என்ன கிக்?

தேடுவோம்...

நீங்கள் யார்?

மனிதர்களில் சுமார் 8 சதவீதம் பேர்தான் இப்படித் தூங்குவார்கள் என்கின்றன தூக்கவியல் ஆய்வுகள். நேராக நிமிர்ந்து கைகளை நீட்டிப் படுத்துறங்கும் இந்த நிலை ‘போர்வீரன் பொசிஷன்’ என்றே அழைக்கப்படுகிறது. இப்படித் தூங்குகிறவர்கள் பெரும்பாலும் அமைதியாகவும் எதையும் உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள். தேவையற்ற பகட்டு இவர்களிடம் இருக்காது. ஆனால், தன்னையும் மற்றவர்களையும் உயர்ந்த இடத்திலேயே வைத்திருக்க விரும்பும் கேரக்டர்கள் இவர்கள்! இந்தப் புது மாடல் சீட் பெல்ட் வந்த பிறகு ஆக்ஸிடென்ட் பாதியா குறைஞ்சிடுச்சாம்!

கோகுலவாச நவநீதன்