குழந்தைகளால் கிடைத்த அங்கீகாரம்!



குழந்தைகளின் உளவியலை முன்மொழியும் ஆகச்சிறந்த இலக்கியங்களைப் படைத்துள்ள ‘ஆயிஷா’ நடராஜனுக்கு இந்த ஆண்டின் சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது (பால புரஸ்கார்) அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர், மாற்றுக் கல்விக்கான செயற்பாட்டாளர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட நடராஜன், சிறுவர் இலக்கியத்துக்குச் செய்த பங்களிப்பு போற்றத் தகுந்தது.

வண்ண வண்ணமாக கனவுகளை விதைத்த கதைகளற்று, வெற்று பூமியாக வற்றிக் கிடக்கும் குழந்தைகளின் பால்யத்தை மீட்டுத் தந்த எழுத்து நடராஜனுடையது. 20 ஆண்டுகளாக வெகு தீவிரமாக குழந்தைகளுக்காக எழுதி வரும் இவரை தகுந்த நேரத்தில் கவனித்து கௌரவப்படுத்தியிருக்கிறது சாகித்ய அகாடமி.

‘விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்’ என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகளை பெரிதும் ஈர்க்கும் விக்கிரமாதித்தன், வேதாளம் வழியாக அறிவியல் பேசும் புதிய எழுத்து முயற்சி இந்நூல்.

இருண்மையான, அடக்குமுறை நிரம்பிய, மாணவர்களின் இயல்பைச் சிதைக்கும் நம் வகுப்பறைகள் பற்றி நடராஜன் செய்துள்ள பதிவுகள் முக்கியமானவை. அவர் முன் வைக்கும் மாற்று வகுப்பறை மாணவர்களுக்கானது.

அங்கே ஆசிரியர்களின் அரசவை நடக்காது. மாணவர்கள் பேசுவார்கள். அவர்களுக்கு எது தேவையோ அதை ஆசிரியர்கள் அளிப்பார்கள். ஆசிரியர்கள் கையில் கம்பிருக்காது. வகுப்பறை எங்கும் அன்பே நிறைந்திருக்கும். இவர் எழுதி அண்மையில் வெளிவந்த, ‘இது யாருடைய வகுப்பறை?’ நூல், சமகால தொடக்கக் கல்விச் சிக்கலை விரிவாகப் பேசுவதோடு மாற்றத்துக்கான தீர்வையும் முன்மொழிகிறது.   

ஒரு பள்ளி மாணவி யின் ஆழ்மன துயரத்தைக் காட்சிப்படுத்தும் ‘ஆயிஷா’ என்ற இவரது குறுநாவல், கல்வித்தளத்தில் பெரும் அதிர்வை உருவாக்கியது. இந்தப் பிரதி ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையானது. கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றும் நடராஜன், ‘‘இந்த விருது பாடப்புத்தகங்களைத் தாண்டிய குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்’’ என்கிறார்.   

யுவ புரஸ்கார்

இந்தாண்டுக்கான இளம் சாகித்ய அகாடமி (யுவ புரஸ்கார்) ‘கால்கள்’ நாவலுக்காக அபிலாஷ் சந்திரனுக்கு வழங்கப்படுகிறது. போலியோ தாக்குதலால் நடையை இழந்த மது என்ற பெண்ணின் துயரைப் பேசுவதோடு, மாற்றுத் திறனாளியின் மனதுக்குள் இருக்கும் ஏக்கங்களையும், வலிகளையும் இயல்பான எழுத்தில் காட்சிப்படுத்துகிறது இந்த நாவல்.

குமரி மாவட்டம் தக்கலையை பூர்வீகமாகக் கொண்ட அபிலாஷ், தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி செய்து வருகிறார். கவிஞராக, கட்டுரையாளராக, சிறுகதையாளராக அறியப்பட்ட அபிலாஷின் முதல் நாவலே சாகித்ய அகாடமியின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது முக்கியமானது.

வெ.நீலகண்டன்
படங்கள்: ரவி