குட்டிச் சுவர் நிந்தனைகள்




* காதலிக்கும்போது கண்களால் காதல் ஈட்டி எறிந்த அதே பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகான சண்டைகளில் சாப்பிடும் தட்டுகளை எறிகிறார்கள்.

* காதலிக்கும்போது நாம் எது சொன்னாலும் சிரித்துப் பேசிய பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகு நாம் எது பேசினாலும் முறைத்துப் போகிறார்கள்.

* காதலிக்கும்போது நமது போன் காலுக்குக் காத்திருந்த அதே பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்சமும் பொறுக்காமல் நமக்கு போனாய் செய்து தள்ளுகிறார்கள்.

* காதலிக்கும்போது, ‘‘ஒரு வேளை சோறு சாப்பிட்டாலும் உங்களுடன் சாப்பிடணும்’’ என்று சொன்ன அதே பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகு, ‘‘லேட்டா வந்தா நைட்டு சாப்பாடு கட்டு’’ எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

* காதலிக்கும்போது, ‘‘நீங்க மட்டும் இருந்தா போதும்’’னு சொன்ன அதே பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகு, ‘‘வாரம் ஒரு தடவை வாங்க... ஷாப்பிங் போலாம்’’னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்.

* காதலிக்கும்போது நம்ம அப்பா அம்மாதான் கடவுள்னு சொன்ன அதே பொண்ணுங்க, கல்யாணத்துக்குப் பிறகு அவங்க அம்மா அப்பாவ நமக்கு தெய்வமாக்கிடுறாங்க.

* மொத்தத்தில் காதலிக்கும்போது ‘நமக்காக உயிரைக் கூட தருவேன்’ என்று சத்தியம் செய்த பெண்கள்தான், கல்யாணத்துக்குப் பிறகு நமது உயிரை எடுக்கிறார்கள்.

நமக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; வாழ, பல வித்தைகளை கற்றுக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; பல விஷயங்களில் தொல்லை கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; மின்சாரம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; மின்வெட்டு கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்...

ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; ஓட்டு வாங்கிய பின் நமக்கு ஆப்பு கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்; இலவசம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்... இப்படி எத்தனையோ கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனா, இத்தனை பேர் இருந்தாலும் நாம நல்லா இருக்கணும் என நினைப்பவர்கள் யாருன்னா, நமக்கு உயிர் கொடுத்தவர்கள், நமக்கு பொண்ணு கொடுத்தவர்கள் மற்றும் நமக்குக் கடன் கொடுத்தவர்கள் மட்டும்தான்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
ஆட்சி மாறியும், கழுத்தைப் பிடித்துத் தள்ளும்
வரை கவர்னர் நாற்காலியிலிருந்து இறங்க மறுத்த ஷீலா தீட்சித் உள்ளிட்ட எல்லோரும்தான்!

சாமிக்கான மாலைகள் விற்கப்படும் அதே கடைகளில்தான் சடலத்துக்கான மாலைகளும் விற்கப்படுகின்றன. காவல் காக்கும் தெய்வத்தின் கோயில் இருக்கும் அதே தெருவில்தான் திருட்டுகளை கண்டுபிடிக்கும் காவல் நிலையங்களும் இருக்கின்றன. வாசத்தைப் பரப்பும் பூக்கடை இருக்கும் அதே சாலையில்தான் நாற்றத்தைப் பரப்பும் சாக்கடைகளும் இருக்கின்றன...

‘இரு இரு... இப்போ நீ என்ன தத்துவம் சொல்ல வர?’ன்னு நீங்க மனசுல நினைக்கிறது புரியுது. இருங்க, அடுத்த பாயின்ட்களையும் சொல்லிடுறேன். அத்தாம் பெரிய யானைகள் வாழும் அதே காட்டில்தான் தம்மாத்துண்டு பூனைகளும் வாழ்கின்றன. பாதி நேரம் வெளிச்சம் இருக்கும் அதே நாளில்தான், மிச்ச பாதி நேரம் இருட்டும் இருக்கிறது. காதலை தங்களுக்குள் வைத்திருக்கும் அதே தம்பதிக்குள்தான் மோதலும் வெடிக்கிறது. 

‘இப்படி நல்லது, கெட்டது கலந்துதான் இருக்கும், அதான் வாழ்க்கை’ என மொக்கை தத்துவம் சொல்ல வர்றேன்னு நினைக்காதீங்க. நான் சொல்ல வருவது என்னன்னா, மொக்கையான படங்களைக் கிண்டலடிக்கும் அதே நேரத்தில், யாரும் கவனிக்காத நல்ல படங்களையும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பது இணையம்தான். அதனால இயக்குனர்களே, நல்ல விமர்சனங்களைக் கண்டுகொள்ளுங்கள்... உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

கடவுளை பழனிமலையில் தேடுகிறார்கள் சிலர், இமயமலையில் தேடுகிறார்கள் சிலர். தாயின் உருவத்தில் கடவுளைத் தேடுகிறார்கள் சிலர். தாரத்தின் உருவத்தில் கடவுளை அடைந்து விடுகிறார்கள் சிலர். ‘சாமியார்களே கடவுள்கள்’ என்கிறார்கள் சிலர். ‘மாமியார்களே கடவுள்கள்’ என்கிறார்கள் சிலர். உதவி செய்தவர்களைக் கடவுளாக நினைக்கிறார்கள் சிலர், உண்மை பேசுபவர்களைக் கடவுளாக காணுகிறார்கள் சிலர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கின்றனர் சிலர்.

ஏழுமலையானின் தரிசனத்தில் இறைவனைக் காண்கின்றனர் சிலர். குழந்தைகளின் ரூபத்தில் இறைவனைக் காண்கின்றனர் சிலர். காதலின் ரூபத்தில் இறைவனைக் காண்கின்றனர் சிலர். இயற்கையின் அழகில் இறைவனைக் காண்கின்றனர் சிலர். இயற்கையின் சீற்றத்தில் இறைவனைத் தேடுகின்றனர் சிலர். கடவுளை இப்படி பலரும் பல வழிகளில் தேடுகிறார்கள். கடவுள்கள் வேறு எங்கேயும் இல்லை...

 சக மனிதராய் நம்முடனே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். நானே இதுவரை நான்கைந்து கடவுள்களை நேரில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கடவுளும், தங்களுக்குப் பிறந்த மனநலம் குன்றிய குழந்தைகளை ஒரு குறையும் இல்லாமல், கண்ணாகப் போற்றி வருகிறார்கள்.

லஞ்சம் வாங்கி மாட்டும் அரசு அலுவலரின் பெயர் மனுநீதி சோழன். பெருமாள் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் சிட்டிசனின் பெயர் வெங்கடாசலபதி. ஊரெல்லாம் கடன் வாங்கி, செக் மோசடி செய்து பிடி வாரன்ட் பெற்றிருப்பவர் பெயர் குபேரன். பள்ளிக்கூடத்துக்கு வெளியே மாங்காவும் இலந்தைப் பழமும் விற்றுக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயர் சரஸ்வதி. வாய் பேச முடியாத ஒரு குழந்தையின் பெயர் தேன்மொழி.

மாலைக்கண் நோய் வந்ததால் வாட்ச்மேன் வேலையை விட்ட ஒரு முதியவரின் பெயர் கண்ணாயிரம். பஸ் ஸ்டாண்டில் குழந்தையைக் காட்டி பிச்சை எடுக்கும் பெண்ணின் பெயரோ லட்சுமி. அடிக்கடி உடல் நலமில்லாமல் அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே குடியிருக்கும் நபரின் பெயரோ ஆரோக்கியசாமி.

வாயைத் திறந்தாலே பொய்யை மட்டும் பேசும் நபரின் பெயரோ சத்தியமூர்த்தி. கள்ளக்காதலில் சிக்கிய தம்பதிகளின் பெயர் ராமச்சந்திரன் மற்றும் கண்ணகி. குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய கணவனை வெளுத்துக் கட்டிய மனைவியின் பெயரோ சீதா. இருட்டில் பாத்ரூம் போகக்கூட பயப்படும் அண்ணனின் பெயர் அய்யனார். இதுவரை பிறந்த மாநிலத்தை விட்டு வெளியே எந்த ஊருக்கும் செல்லாத நபரின் பெயர் உலகநாதன்.

மாசமானா மேன்ஷன் வாடகை தர முடியாமல் இன்று காலி செய்து தெருவில் போய் கொண்டிருக்கும் தோழரின் பெயர் ராஜா. நாற்பது வயதாகியும் இன்னமும் கல்யாணம் ஆகாமல் பொண்ணு தேடிக்கொண்டிருக்கும் ஆளின் பெயர் இந்திரன். மூத்த தாரத்து குழந்தைகளுக்கு சோறு போடாமல் துன்புறுத்திய பெண்ணின் பெயர் மணிமேகலை.
வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது... பகுத்தறிந்த கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டிருந்த பெரியாரின் இயற்பெயர், ராமசாமி என்பதைப் போல!

ஆல்தோட்ட பூபதி