போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்படுமா?



எல்.எல்.ஆர். தொடங்கி லைசென்ஸ் வரை எதற்கெடுத்தாலும் லஞ்சம். எங்கெங்கும் தரகர்கள் ஆதிக்கம். இந்தியாவில் லஞ்சம் புழங்கும் இடங்களில் முதலிடம், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குத்தான்.

இந்த லஞ்சத்தையும் முறைகேடுகளையும் எப்படித் தடுப்பது? ‘அந்த அலுவலகங்களை இல்லாமல் செய்வதுதான் வழி’ என்கிறார் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்கரி, ‘‘லஞ்ச, லாவண்யத்தில் உழன்று வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்கள் விரைவில் மூடப்படும். செம்மையான நிர்வாகத்தைத் தரும் புதிய போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும்...’’ என்று கூறியிருக்கிறார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மூடுவது சாத்தியமா? அதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியுமா?‘‘மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தக் கூடாது. போக்குவரத்து அலுவலகங்களில் பட்டப்பகலில் வெட்டவெளியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி தேடாமல், மொத்தமாக அலுவலகத்தையே மாற்றுவோம் என்பது வேடிக்கை’’ என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.

‘‘இதற்கு மாற்றாகத் தொடங்கப்படுகிற அமைப்பில் செவ்வாய் கிரகத்திலிருந்து ஊழியர்களை அழைத்து வரப் போவதில்லை. இதில் பணியாற்றும் ஊழியர்கள்தான் அதிலும் பணியாற்றப் போகிறார்கள். பிறகெப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்புகிற இளங்கோ, ‘‘லஞ்ச ஒழிப்புத்துறையின் உறக்கம் கலைந்தால் மட்டுமே அரசுத்துறைகளில் உள்ள லஞ்ச, ஊழல்களைக் களைய முடியும்’’ என்கிறார்.

‘‘அண்மையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் ஊழல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தோம். அந்தப் புகாரை விசாரித்து அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

 ஆனால் சம்பந்தமே இல்லாமல் புகாரை அப்படியே மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதையும் ஒழுங்காக அனுப்பவில்லை. மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை எனக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த அளவுக்குத்தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடு இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் இருக்கிறது. தரகர்கள் இன்றி நேரடியாக செல்பவர்களை அலைய விடுவதும் அவமானப்படுத்துவதும் இயல்பாகி விட்டது. துட்டு போட்டால் போதும். எட்டு கூட போடாமல் லைசென்ஸ் வாங்கிவிடலாம்.

அத்தனை போக்கு வரத்து அலுவலகங்களிலும் கேமரா வைத்து புரோக்கர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அதைச் செய்யாமல் நிர்வாகத்தை மாற்றுவதால் ஒரு பயனும் இல்லை’’ என்கிறார் இளங்கோ.

இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார், ‘ஐந்தாவது தூண்’ அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த். ‘‘பல அரசுத்துறைகள் இன்னும் பழங்கால பாணியிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதுதான் ஊழலுக்குத் துணையாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதன் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

ஒரு காலத்தில், தரகர்களை நாடினால் மட்டுமே ரயில் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலை இருந்தது; ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தபிறகு இடைத்தரகு முடிவுக்கு வந்துவிட்டது. தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். இங்கு மட்டுமின்றி பல அலுவலகங்களிலும் எந்த அச்சமும் இல்லாமல் வெட்டவெளியில் லஞ்சம் வாங்குகிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்கக் கூட பறக்கும் படைகள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களைக் கண்காணிக்க எந்தப் படையும் இல்லை. 

இப்போது இருக்கும் சட்டம், லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடும் கரிசனம் காட்டுகிறது. லஞ்சம் வாங்குபவர்கள் கையும் களவுமாக பிடிபட்டால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். குற்றம் நிரூபணமானால் 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை. வழக்கு முடியும் வரைக்கும் பாதிச்சம்பளம் உண்டு.

 இதில் 25% வழக்குகளில் கூட குற்றம் நிரூபணமாவதில்லை. தண்டனையைக் கடுமையாக்கினால்தான் பயம் வரும்’’ என்கிறார் அவர். கட்கரியின் அறிவிப்பு குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அசோசியேஷன் என்ன நினைக்கிறது? அந்த அமைப்பின் செயலாளர் ஏழுமலையிடம்
கேட்டோம்.

‘‘அமைச்சர் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் போக்குவரத்து அலுவலகங்களை கலைக்கப் போவதாகச் சொல்லவேயில்லை. இருக்கும் விதிமுறைகளை காலத்துக்குத் தகுந்தது போல் மாற்றப்போவதாகத்தான் சொல்லியிருக்கிறார். இப்போதுள்ள விதிமுறைகள் 1989ல் கொண்டு வரப்பட்டவை.

30 வருடங்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதை மாற்றுவதற்கு தேசிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன’’ என்கிறார் ஏழுமலை.
ஏதாவது நடந்தால் சரி!

-வெ.நீலகண்டன்