காமெடி காதல் பேய்



சுந்தர்.சி புது ரூட்!

எல்லோராலும் விரும்பப்படுகிற மேக்ஸிமம் கேரன்டி இயக்குநர் சுந்தர்.சியைப் பார்த்தாலே மிகுந்த நட்புணர்வு தோன்றும். ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில், ஆறடி உயரத்தில் சிரித்து வரவேற்கிறார். வெயிலை மீறி சிலுசிலுக்கும் காற்றில் தலை கோதிச் சிரிக்கிறார். இந்தத் தடவை சுந்தர்.சி வந்திருப்பது ‘அரண்மனை’க்காக! ‘‘ ‘அரண்மனை’யை நான் எடுக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, பிள்ளைகள்தான். குழந்தைகளுக்கு எப்பவும் முதல் பிரியம் பேய் படம் பார்க்கிறதுதான்.

‘என்னடா இது... குழந்தைகளுக்கு எவ்வளவோ சேனல் இருக்கு. அப்புறம் எதுக்கு...’ன்னு கேட்டு முடிக்கிறதுக்குள் நம்மளையும் ஜமாவில் சேர்த்துடுவாங்க. பயந்து, கட்டிப் பிடிச்சுக்கிட்டு, ஒத்தக்கண்ணால அவங்க படம் பார்க்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கும். ‘அடடா, நாம இந்த வகையில் ஒரு படம் செய்ததில்லையே’ன்னு மனதில் பட்டது.

அப்படி நாலு வருஷமா மனசில் ஊறியிருந்த கதைதான் ‘அரண்மனை’. என் பிள்ளைங்க போட்ட விதைதான் இது. நானே தயாரிச்சிடலாம்னு இருந்தப்போ, இன்னும் பிரமாண்டமா தயாரிக்கிறேன்னு முன்வந்தார் நண்பர் தினேஷ் கார்த்திக். ஐ.டி படிச்சிட்டு சினிமாவில் உயிராய் இருக்கிற மனிதர்.’’

‘‘பயப்பட வைக்கிறது சாதாரண வேலை இல்லையே...’’‘‘இதில் யாரும் ஹீரோ, ஹீரோயின்னு தனியா கிடையாது. நான், வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் இப்படி எல்லாருக்கும் அவரவருக்கான நல்ல இடம் இருக்கு. எப்பவும் இது மாதிரி படங்களில் தவிர்க்க முடியாமல் சில காட்சிகள் வரும்.

திடீர்னு புறாக்கள் றெக்கைகளை அடிச்சிப் பறக்கும். திடீர்னு ஒரு பெண் எழுந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பார். கழுத்தில் ஒரு கை விழும்... பதறியடித்து வியர்த்துப் போய் நாம் பார்த்தால்... அவள் கணவர், ‘ஏன்... தூக்கம் வரலையா?’ எனக் கேட்டு அழைத்துப் போவார். மியூசிக்கில் காரணமே இல்லாமல் திகில் பரப்பி, அசரடிப்பாங்க. ‘டப்... டப்... டப்...’னு ஜன்னல்கள் திறந்து திறந்து மூடும்.

பைப்பில் தொடர்ச்சியா திடீர்னு தண்ணீர் கொட்டும். இப்படி எதுவும் இல்லாமல் பேய்ப் படம் பண்ணியிருக்கேன். ஆனாலும், இந்தப் பேய் அரண்மனையில் வருகிற காட்சிகள் பயமுறுத்துவதாகவே இருக்கும்.

ஏமாற்றுகிற விஷயம் எதுவும் கிடையாது. கிராமத்தில் இருக்கிற பூர்வீக அரண்மனையை பங்கு பிரிக்க வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து அங்கே மூன்று நாட்கள் தங்குகிறார்கள். அதற்குள்ள நடக்கிறதுதான் கதை. ஃபாரீனில் பேய்ப் படம்னா ஒன்றேகால் மணி நேரம் போதும்னு முடிச்சிடுவாங்க. இங்கே இரண்டரை மணி நேரம் படம் ஓடணும். ஒன்லி பேய்ன்னா,
ஃபேமிலி ஆடியன்ஸ் வராது.

அதனால் காமெடி + பேய் + காதல் இருந்தால் அருமையா இருக்கும். ‘சந்திரமுகி’ அதை ப்ரூவ் பண்ணியிருக்கு. காமெடியில் சந்தானம் இதில் உச்சம் போறார்.’’‘‘உங்களுக்கும் சந்தானத்துக்கும் நல்ல அலைவரிசை இருக்கு..?’’‘‘அவருக்கு இதில் ரொம்பவும் அருமையான காமெடி இருக்கு. சந்தானத்தின் பாட்டி சீரியஸாக இருப்பாங்க. சாகப் போகிற வேளையில பாட்டி ஒரு போட்டோ கொடுக்கும். ‘என் பேரனா இருந்து நீ கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது வருத்தமா இருக்கு. ஒரு உண்மை சொல்றேன்.

நான் ஜமீன்தார் ‘கீப்’பா இருந்து பிடிச்சுப் போய் கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. அவரும் நானும் சேர்ந்து இருக்கிற இந்த போட்டோதான் என்கிட்டே இருக்கு. இன்னொண்ணு அரண்மனையில் இருக்கு. சொத்தை விற்கப் போறாங்களாம். அதில் உனக்கும் பங்கு இருக்கு’ன்னு சொல்லும். சந்தானத்துக்கு சந்தோஷம்.

போட்டோவை பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு காக்கா அதில் ‘கக்கா’ போக, அது கரெக்டா ஜமீன்தார் முகத்தில் விழும். அதில் அதிர்ச்சியான பாட்டி, செத்துப் போறாங்க. இன்னொரு போட்டோவை அரண்மனையிலிருந்து எடுக்கணும்... அதுக்காக சமையல்காரனா அங்க போறார் சந்தானம். அதில் இருக்கு பாருங்க காமெடி... சிரிச்சு மாளாது! அதோட ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் கிளாமர் வேற!’’‘‘நீங்க மறுபடியும் நடிக்கிறீங்க..?’’

‘‘நடிக்க ஆரம்பிச்சேன்... ஒரு ஸ்டேஜில் ஒரே மாதிரி போயிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது. நாலு ஃபைட், நாலு பாட்டுனு ஆகிப்போச்சு. தப்பான பாதையில் போறோமோன்னு டவுட் வந்திருச்சு.

அதனால், மூணு வருஷம் நடிக்கிறதை நிறுத்திட்டு டைரக்ஷனுக்கு வந்துட்டேன். இதில் நான் ஹீரோ இல்லை. ஆனா, நல்ல கேரக்டர். டூயட், ஃபைட் கிடையாது. அதான் நடிச்சேன்.’’‘‘ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா... மூணு பேரை வச்சு எப்படி சமாளிச்சீங்க?’’

‘‘எங்க யூனிட்டே ஜாலி. இங்கே எல்லாருக்கும் கேரவன் உண்டு. ஆனா, அதில் யாரும் இருக்கவே மாட்டாங்க. எல்லாரும் கூடி சீட்டு விளையாடிக்கிட்டு இருப்போம். ஒரு ஈகோவும் கிடையாது. விளையாட்டும், வேடிக்கையுமா பொழுது கழியும். ஹன்சிகா எப்படி இருப்பாங்கன்னு தெரியும்...

அப்படியே பளபளன்னு ஜொலிப்பாங்க. அவங்களை கிராமத்துப் பொண்ணா ஆக்க கொஞ்சம் மெனக்கெட்டோம். ஆண்ட்ரியா இவ்வளவு அருமையா நடிப்பாங்கன்னு சத்தியமா தெரியாது. லட்சுமி ராய் அவங்க அளவுக்கு மேல சூப்பர். என் படத்துல இருக்கும்போது ஈகோ தலை காட்டாது.’’
‘‘கிளாமர்ல பின்னியிருப்பீங்களே...’’

‘‘இருக்கும்... ஆனால், உறுத்தாது. ‘சேச்சே... போங்கப்பா’ன்னு சொல்ற மாதிரி இருக்கவே இருக்காது. அரண்மனை தான் இந்தப் படத்துல பெரிய விஷயம். நிறைய கதை அங்கேதான் நடக்கும். அதனால் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல செலவழிச்சு செட் போட்டோம். ஷூட்டிங் முடிச்ச பின்னாடி அதைக் கலைக்கவே மனசு வரலை.

 எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் திரும்பித் திரும்பிப் பார்த்துட்டுப் போனாங்க. என்னோட நிறைய ஒர்க் பண்ணினவர் கேமராமேன் யூ.கே.செந்தில்குமார். அவர்தான் இதிலும் பிரயாசைப்பட்டு செய்தி ருக்கார். எனக்கு படம் பண்றது ஈஸி. டென்ஷன் இல்லாமல் வேலை வாங்குவேன். ரெண்டு மாசம் பூட்டின அறைக்குள் நடத்தின ஸ்டோரி டிஸ்கஷன் நல்லா வந்துட்ட பிறகு, எல்லாமே ஈஸிதான்!’’

- நா.கதிர்வேலன்