ஜிமி ஜில்லு ஜிம்மி... இதெல்லாம் என்ன?



மியா! பன்-பட்டர் கன்னம், சன்செட் சிரிப்பு, தாராள அழகு, ஏராள இளமை என நாங்கள் சொல்லாவிட்டாலும் ‘அமரகாவியம்’ பார்த்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்ப்பு இதுதான். மியா ஜார்ஜ் கை குலுக்குகிறார். ‘‘ஜார்ஜா...’’ என பதறுவதற்குள் ‘‘அப்பாங்க’’ என முந்திச் சொல்லி சமாதானப்படுத்துகிறார்.‘‘இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் மியா?’’

‘‘சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சுக்கூட பார்த்தது கிடையாது. அதற்கான எந்தத் தொடர்பும் என் ஃபேமிலியில் கிடையாது. 10ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். ‘மதர் மேரி’யா நடிக்க கருணை நிறைஞ்ச முகத்தோடு ஒரு பெண் வேணும்னு தேடியிருக்காங்க. நான் அன்னிக்கு ஸ்கூலை விட்டு வெளியே வந்தேன்.

 ஏதோ அமைதியா யோசிச்சபடி சாந்தமா வெளியே வந்திருப்பேன் போல. ‘நான்தான் மேரியா நடிக்க சரியான பொண்ணு’ன்னு முடிவு பண்ணிட்டாங்க. கன்னியாஸ்திரியான என்னோட டீச்சரே, ‘உன்னை மதர் மேரியா நடிக்கக் கூப்பிடுறாங்க. பெரிய பாக்கியம். நீ கொடுத்து வச்சிருக்கணும். போய் நடி’னு அனுப்பி வச்சாங்க. அதற்குப் பிறகு கேரளாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரோடும் நடிச்சிட்டேன். அதெல்லாம் ஒரு பிளஸ்ஸிங்!’’‘‘இங்கேயும் ‘அமரகாவிய’த்தில் புகழ் பெற்றுட்டீங்களே...’’

‘‘என்னை அப்படி வழி நடத்தினது, டைரக்டர் ஜீவா சங்கர். நடிப்புக்கான அளவு மேலயும், குறைஞ்சும் போயிடாமல் பார்த்துக்கிட்டது அவர்தான். மக்களின் பாராட்டு பெறுகிற ஒவ்வொரு இடமும் அவர் பார்த்து செதுக்கியதுதான்.

நான் சும்மா ஒரு கருவி தான். ஊட்டியின் அவ்வளவு அழகோடும் எங்களைச் சேர்த்து வச்சி ஷூட் பண்ணினார். எனக்கு தமிழ் தடுமாறும்போதெல்லாம் உதவியது ஆர்யாவோட தம்பி சத்யா. படத்துக்கு அவர்தான் ஹீரோ; அவர்தான் புரொடியூசர். ஆனால், எந்த பந்தாவும் காட்டாமல் ஈஸியா பழகினார். ரொம்ப நாளாவே தமிழ் ரசிகர்களிடம் போய்ச் சேரணும்னு நினைச்சேன். அவங்களுக்கு என்னைப் பிடிச்சிட்டா, நான் இருக்கிற இடமே வேறு... தமிழ் சினிமாவில் இனி அதிக அக்கறை செலுத்துவேன்.’’ ‘‘ஆர்யாவைப் பார்த்தீங்களா?’’

‘‘ஷூட்டிங் நடந்த வரைக்கும் ஊட்டி பக்கமே அவர் வரலை. அவர் வருவார்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனால், கடைசி வரைக்கும் வரலை. பிறகு, இரண்டு தடவை சந்திச்சேன். ஆனால், கொஞ்ச நேரம்தான். படம் பார்த்துட்டு, ‘அருமையா செய்திருக்கீங்க. புரிஞ்சு செய்த நடிப்பு’ன்னு சொன்னார்!’’
‘‘அப்போ இனிமேல் தமிழ்தானா?’’

‘‘தமிழ், மலையாளம் இரண்டிலும் கவனம் செலுத்துற எண்ணம் இருக்கு. நமக்கு என்ட்ரியும் இருக்கிற இடத்தையும் கொடுத்த கேரள மக்களையும் மறக்கக் கூடாதே... இரண்டு ஊரும் நம்ம ஊருதான்.’’‘‘ ‘அமரகாவியம்’ மாதிரி தீவிர காதலில் விருப்பமுண்டா உங்களுக்கு?’’

‘‘இப்ப எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். இப்ப கொஞ்சம் நடிப்பை, படிப்பை பார்க்கலாம். காதலுக்கு இப்ப என்ன சார் அவசியம்... அவசரம்..?’’‘‘அதென்னங்க ‘மியா?’ ’’‘‘அது நான் நடிச்ச படத்தோட கேரக்டர் பெயர். ரொம்ப பளீர்னு வெளியே தெரிஞ்சது. அதையே பெயரா வச்சிக்கிட்டேன். சொந்தப் பேரு ஜிமி... காலேஜ்லயும் வீட்லயும் ஜிம்மி, ஜில்லு, ஜிமின்னு செல்லமா கூப்பிடுவாங்க. நீங்க எப்படி கூப்பிடுவீங்க?’’ என்கிறார். நமக்கோ இதயத் துடிப்பு
எகிறுகிறது!

கேரளாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரோடும் நடிச்சிட்டேன். அதெல்லாம் ஒரு பிளஸ்ஸிங்!

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்