திருட்டு டி.வி.டி பழசு...நெட் பிரின்ட் புதுசு!



சினிமாவை அழிக்கும் இன்டர்நெட்

‘ஹைய்... டிரெய்லர்’ எனப் பார்த்திருக்க வேண்டிய ‘ஐ’ பட டிரெய்லரை ‘அய்யய்யோ டிரெய்லர்’ எனப் பார்த்து நறநறத்தது திரையுலகம். காரணம், அதை வெளியிட்டது படக்குழு அல்ல. தயாரிப்பாளர், தன் தனி அறையில் சிலருக்கு டிரெய்லரைப் போட்டுக் காட்ட, குட்டிக் கேமராவால் அதை சுட்டுப் போட்டுவிட்டார்கள் நெட்டில். கொஞ்ச காலம் முன்பு வரை ‘திருட்டு டி.வி.டி ஒழிக’ எனப் பேசிய திரைத்துறை, இப்போதுதான் உண்மை உணர்ந்திருக்கிறது, ‘அனைத்திற்கும் காரணம், இன்டர்நெட்’ என்று! இணையத்தில் படத்தை ஏற்று கிறவர்கள், விமர்சனம் பண்ணுகிறவர்கள் என அனைவருக்கும் இப்போது தமிழ் சினிமா வைத்திருக்கும் செல்லப் பெயர் ‘டெக்னாலஜி டெர்ரரிஸ்ட்’!

‘‘இந்தப் பேர் ரொம்பப் பொருத்தமானது சார். தீவிரவாதம் மாதிரிதான் இப்போ வீடியோ பைரஸியும். அதை ஒழிக்க முடியாது. ஆனா, கட்டுப்படுத்தலாம்!’’ எனத் துவங்குகிறார் சுதர்சன். சென்னையில், ‘காப்பிரைட் மீடியா’ எனும் நிறுவனத்தை நடத்தி வரும் 23 வயது இளைஞர் இவர். டெக்னாலஜி தாதாக்கள் புதுப்படங்களைத் திருட்டுத்தனமாக இணையத்தில் ஏற்றிப் பரப்புகிறார்கள் என்றால், அதே டெக்னாலஜியைப் பயன்படுத்தி அந்தப் படத்தை யாரும் பதிவிறக்கம் செய்யாமலும் ஆன்லைனில் பார்க்காமலும் தடுப்பதே இவர் வேலை.

‘‘பொதுவா இன்டர்நெட்ல தான் சார் சினிமா திருட்டுத்தனமா பரவுது. அதிலிருந்து டவுன்லோடு பண்ணி டி.வி.டியில ரைட் பண்ணி விக்கிறதைத்தான் நாம் திருட்டு டி.வி.டின்னு சொல்றோம். இப்ப காசு கொடுத்து டி.வி.டி வாங்குறவங்க எண்ணிக்கையே குறைஞ்சுடுச்சு. நேரா இன்டர்நெட்ல அவங்களே டவுன்லோடு பண்ணிக்கறாங்க.

 இனிமே, டி.வி.டி விக்கிறவங்களைப் பிடிச்சி பிரயோஜனமில்ல. இன்டர்நெட் பரவலைத் தடுக்கணும். பொதுவா ‘யு டியூப்’ மாதிரி பெரிய வெப்சைட்ல ஒரு படத்தை ஏத்தியிருந்தாங்கன்னா, அந்தத் தளத்துலயே படக்குழு மறுப்பை போஸ்ட் பண்ணலாம். உடனடியா அந்தப் படத்தை யு டியூப் நிர்வாகமே தூக்கிடும்.

ஆனா, பேரே தெரியாத ஏதேதோ வெப்சைட்டுகளாலதான் இப்ப பிரச்னை. அதை நடத்துறது யாரு, எந்த நாட்டுல அதுக்கு சர்வர் இருக்கு, யார்கிட்ட நாம புகார் தெரிவிக்கணும்னு ஒண்ணுமே புரியாது. பெரும்பாலும் ஆட்சேபகரமான படங்களை வெளியிடுற சில தளங்கள், அவங்க அடையாளத்தையே மறைச்சுக்குவாங்க. அப்படிப்பட்ட தளங்கள்ல இருக்குற படங்களை யாரும் பார்க்காம தடுக்கறதுதான் சவால்!’’ என்கிற சுதர்சன், அந்த சவாலான காரியத்தைத் தான் செய்து முடிப்பது எப்படி என்பதையும் விளக்குகிறார்...

‘‘இதுவும் ஒரு வகையில ஹேக்கிங்தான். ஆனா, நல்ல விதமான ஹேக்கிங். எந்த வெப்சைட்ல படம் இருக்கோ அந்த வெப்சைட்டுக்குள்ள நுழைஞ்சு, டவுன்லோடு பண்றவங்களோட வேகத்தைக் குறைச்சுடலாம். 2 மணி நேரத்துல டவுன்லோட் ஆக வேண்டிய படம், 2 நாளா டவுன்லோடு ஆச்சுன்னா, வெறுப்புல விட்டுடுறவங்கதான் அதிகம். சில சமயம் ‘இந்தப் படத்தை டவுன்லோடு செய்ய இந்த Link-ஐ கிளிக் பண்ணுங்கள்’னு சில விஷமிகள் அவங்க பிளாக்ல போட்டிருப்பாங்க.

அந்த Link எல்லாத்துக்கும் போலிப் பெயர் கொடுத்து திசை திருப்பிட்டா படத்தைத் தேடுறவங்க மண்டை காய்ஞ்சு போவாங்க. அதே மாதிரி, புதுப்படத்தோட பேரை கூகுள்ல போட்ட உடனே இந்த மாதிரி முழுப்படம் இருக்குற சைட்டுகள் முன்னாடி வந்து நிற்காம கட்டுப்படுத்தலாம். இது எல்லாத்துக்கும் மேல, ‘சர்வர் கன்ட்ரோல்’னு ஒரு டெக்னாலஜி இருக்கு.

 ரஷ்யாவுல இருந்து இதுக்கான லைசென்ஸை வாங்கணும். வாங்கிட்டா, அதை வச்சி பேர் தெரியாத வெப்சைட்டுகளோட டவுன்லோடு வசதிகளைக் கூட முடக்கலாம். ஆனா, ஒரு படத்தை நாம இப்படி முடக்க முடக்க... ஏற்கனவே அதை டவுன்லோடு பண்ணினவங்க வேற வேற தளங்கள்ல ஏத்திக்கிட்டேதான் இருப்பாங்க.

அடிக்கடி அதைக் கண்டுபிடிச்சு தடுக்கணும். இது ஒரு முடிவில்லாத வேலைதான். என்ன... இன்னிக்கு தேதிக்கு ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் வரைக்கும் நெட்டில் பரவாம காப்பாத்திட்டா போதும்.

 அது லாபம் சம்பாதிச்சிடும். அந்த வேலையைத்தான் நாங்க செஞ்சிக்கிட்டிருக்கோம்!’’ என்கிறார் சுதர்சன் தெளிவாக. சரி, இந்தப் படங்கள் எல்லாம் எப்படித்தான் வெளியே கசிகின்றன? ‘‘தெரியவில்லை’’ என்ற வழக்கமான பதில்தான் இவரிடமிருந்து வருகிறது. ‘‘நெட்ல மூணு பிரின்ட்தான் பாப்புலர். படம் ரிலீஸான அன்னைக்கே வர்றது தியேட்டர் பிரின்ட். இது ஏதாவதொரு கிராமத்து தியேட்டர்ல ஹேண்டி கேம் வச்சி எடுக்குறது. சவுண்ட் தெளிவா இருக்காது.

ஆடியன்ஸ் கை தட்டுற சத்தம் கூட கேக்கும். இந்த பிரின்ட்டை பெரும்பாலும் யாரும் விரும்புறதில்லை. படம் ரிலீஸாகி 20, 25 நாள் கழிச்சு 5.1 பிரின்ட் வரும். ஃபாரின்ல தரப்படுற டி.வி.டி ரைட்ஸ் மூலமா கிளம்புற பளிச் பிரின்ட் இது.

லேட்டா வர்றதுனால இது கவுன்ட்டர் கலெக்ஷனை பாதிக்காது. ஆனா, படம் ரிலீஸான ரெண்டாவது, மூணாவது நாள்ல நெட் பிரின்ட்னு ஒண்ணு வரும். படமும் சவுண்டும் ஓரளவு கிளியரா, பார்க்குற மாதிரி இருக்கும். இந்த பிரின்ட்தான் பிரச்னை. இதைக் கட்டுப்படுத்தத்தான் இவ்வளவு கஷ்டப்படுறோம்.

இப்ப தியேட்டர் எல்லாமே கியூப்னு சொல்லப்படுற டிஜிட்டல் வட்டத்துல சேர்ந்துடுச்சு. பட்டனை தட்டி விட்டா நேரடியா ஆன்லைன்ல இருந்தே ஸ்கிரீன் ஆகும். இதுல இருந்து தியேட்டர்காரங்க காப்பி பண்ணி எடுத்துதான் நெட் பிரின்ட் வருதுன்னு சொல்றாங்க. கியூப் மூலமா படத்தைக் காப்பி பண்ணி தியேட்டர்காரங்க மாட்டிக்கிட்ட சம்பவங்களும் சமீபத்துல நடந்திருக்கு. சினிமா வேலைகள் நடக்குற லேப்ல இருந்தே இது வெளியாகிடுதுன்னும் சொல்றாங்க. காரணம் தேடிட்டிருந்தா தேடிக்கிட்டேதான் இருக்கணும்! கட்டுப்படுத்துறதுல கவனம் செலுத்தலாம்னு நான் முடிவெடுத்துட்டேன்!’’ என்கிறார் சுதர்சன் நிறைவாக.

புதுப்படங்களைத் திருட்டுத்தனமாக இணையத்தில் பரப்புவதை, அதே டெக்னாலஜியைப் பயன்படுத்தி தடுக்கிறார்கள் படம் ரிலீஸான அன்னைக்கே வர்றது தியேட்டர் பிரின்ட். 20, 25 நாள் கழிச்சு 5.1 பிரின்ட் வரும். படம் ரிலீஸான ரெண்டாவது, மூணாவது நாள்ல நெட் பிரின்ட்னு ஒண்ணு வரும். இந்த பிரின்ட்தான் பிரச்னை!

 டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்