பாரம்பரிய இசைக்கு இப்போ வேலையில்லை!



இசையமைப்பாளர் கே

‘‘‘அறையும்போது ஒரு சத்தம் வந்துச்சே... அது ஒரு இசை’ன்னு வடிவேல் காமெடி ஒண்ணு வரும். அது காமெடி இல்லை, உண்மை. நம்ம வாழ்க்கையோட ஒன்றிப்போனதுதான் இசை. நான் எந்நேரமும் சிந்திக்கிற ஒரே விஷயம் இசை மட்டும்தான். அதை விட்டா வேற ஒண்ணும் தெரியாது.’’

- டெம்போ எகிறப் பேசுகிறார் இசையமைப்பாளர் கே. மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ படத்தில் அறிமுகமாகி, ‘கன்னித்தீவு பொண்ணா...’ என கவனம் ஈர்த்தவர். இப்போது ‘49ஓ’, ‘காடு’, ‘மகாபலிபுரம்’ படங்களில் இசையமைப்பாளராய் பிஸி. ‘கள்ளப்பட’த்தில் நடிகராகவும்..! ‘‘அதென்ன ‘கே’?’’

‘‘கிருஷ்ணகுமார். பள்ளிக் காலத்துல இருந்தே மியூசிக் மேல அலாதி பிரியம். எங்க ஸ்கூல் ‘வெஸ்டர்ன் மியூசிக் கிளாஸ்’லதான் கீ போர்டு வாசிக்கக் கத்துக்கிட்டேன். இன்டர் ஸ்கூல் காம்படீஷன்ல எல்லாம் நிறைய பரிசு வாங்கியிருக்கேன். மிஷ்கின் சார் என் அப்பாவோட நீண்ட கால நண்பர். டைரக்டர் ஆகறதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார்.

 இசை தொடர்பா நிறைய புத்தகங்கள் வாசிக்கச் சொல்லி என்னை வழி நடத்தினார். அப்பாவோட விருப்பத்துக்காக பி.டெக் படிச்சேன். முடிச்சதும் மிஷ்கின் சார்கிட்ட மியூசிக்ல ஏதாவது ஒரு வாய்ப்பு வேணும்னு கேட்டேன். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இயக்குனர்கள் மிஷ்கின், சசிகுமார், கிருத்திகா உதயநிதி இயக்கின மூணு குறும்படங்களுக்கு மியூசிக் பண்ணேன். சினிமா துறையில் என்னோட முதல் பங்களிப்பு அதுதான். கிருஷ்ணகுமார் கே ஆகிட்டான்!’’

‘‘இது இசையமைப்பாளர்கள் நடிகராகிற சீஸனோ..?’’‘‘நடிக்கிற ஆசையெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ பண்றப்ப மிஷ்கின் சாரோட உதவி இயக்குனரா இருந்த வடிவேல் எனக்குப் பழக்கமானார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘நான் பண்ற படத்துல நீங்கதான் நடிக்கணும்’னார். அதை நான் பெருசா எடுத்துக்கலை.

அப்புறம் ஒரு நாள், ‘படம் உறுதியாகிடுச்சு. நீங்களும் நடிக்கிறீங்க’ன்னார். வாழ்க்கையில வாய்ப்புங்கிறது ஒரு தடவைதான் கதவைத் தட்டும். அதை சரியா பயன்படுத்திக்கிறதுதான் புத்திசாலித்தனம். நடிச்சுத்தான் பார்ப்போமேன்னு ஒப்புக்கிட்டேன். வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாம் சாதாரணமாத்தான் தெரிஞ்சுது. ஆனா, கேமரா முன்னாடி நிற்குறப்பதான் அது எவ்ளோ கஷ்டம்னு புரியுது. இசைக்குள்ளேயே மூழ்கி இருந்த எனக்கு, ரொம்பவும் புது அனுபவம்.’’
‘‘இப்போ பாரம்

பரிய இசையையே பார்க்க முடியலையே..?’’‘‘இளையராஜா பாரம்பரிய இசையையும், நாட்டுப்புறக் கருவிகளையும் அதிகளவில் பயன்படுத்தினார். அன்னிக்கு சினிமாவில் அதுக்கான களம் இருந்தது. இப்போ அது இல்லைன்னுதான் சொல்வேன். ஃபாரின் டூயட்ல நாம எங்க தமிழ் பாரம்பரிய இசையைக் கையாள்றது?

 ‘கள்ளப்பட’த்தில் கூத்து தொடர்பான ஒரு பாடலுக்கு கூத்து இசைக்கலைஞர்களை வச்சே பாடல் பதிவு பண்ணியிருக்கோம். பாரம்பரிய இசைக்கான தேவை வந்தா கண்டிப்பா எல்லாரும் பயன்படுத்துவாங்க!’’‘‘உட்கார்ந்த இடத்திலேயே ஒரு படத்துக்கான மொத்த இசையையும் அமைக்குமளவு மென்பொருட்கள் வந்துவிட்டன. இருந்தும் லைவ் ரெக்கார்டிங்தான் நடை முறையில் இருக்கு. என்ன காரணம்?’’

‘‘தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் மனிதனின் திறமைக்கு ஈடாகவே ஆகாது. நாதஸ்வரம், வயலின்னு எல்லாமே கம்ப்யூட்டர்லயே கம்போஸ் பண்ணலாம். ஆனா, அது உயிரோட்டமா இருக்காது. ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி அதை அவசரத்துக்குப் பயன்படுத்திக்கலாமே தவிர, முழுமையான இசையை அதிலிருந்து பெற முடியாது.

அதுக்காக, அந்தத் தொழில்நுட்பத்தை முற்றிலுமா புறக்கணிக்கவும் முடியாது. இப்போ, சீனப் பாரம்பரிய இசைக்கருவியில ஒரு சின்ன நோட் நமக்குத் தேவைப்படுதுன்னு வைங்க... அதை வாசிக்க இங்க யாரும் கிடைக்க மாட்டாங்க. சாஃப்ட்வேர்கள்தான் அப்ப கை கொடுக்கும். திறமைகளும் தொழில்நுட்பமும் ஒண்ணு சேருற இடத்தில்தான் வெற்றி நின்னு விளையாடும்!’’

- கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.கோபால்