கவிதைக்காரர்கள் வீதி




காலம்


விளையாண்ட வியர்வையோடு
வீடு செல்லும்போது
பாட்டி கொடுக்கும் நீராகாரத்தில்
வயிறு நிறைந்தது
நெஞ்சும் குளிர்ந்தது.
இப்போது
அம்மா கொடுக்கும் கூல் டிரிங்க்ஸில்
வயிறு நிறைந்து
நெஞ்சு எரிகிறது.
- காந்தி லெனின்,
திருச்சி.

பயம்

தன்னந்தனியாக
குரைக்கும் நாயை
பயமுறுத்தியது
யாராக இருக்கும்?
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தைரியம்

அய்யனார் அரிவாள்மீது
அமர்ந்த குருவி
சாவகாசமாய்த்
தன் அலகு தீட்டுகிறது.
- செழியரசு, தஞ்சை.

சந்தோஷம்

ஆஸ்பத்திரியிலிருந்து
அப்பா வீடு வருவதால்
எல்லோருக்கும் சந்தோஷம்.
எங்களோடு
சேர்ந்து சந்தோஷப்பட்டார்
அம்மாவின் நகைகளை
கையில் வாங்கியபடி
வட்டிக்கடை சேட்டும்!
- வஸந்த் பூபதி,
வெள்ளாங்கோவில்.

விசிறி

நெரிசலான பேருந்தில்
பயணச்சீட்டு
வழங்கி வியர்த்திருந்த
நடத்துனரின் கையில்
பணவிசிறி
- சிக்ஸ்முகம்,
கள்ளியம்புதூர்.

வாசம்


மதுவாசனையில் இறந்தவருக்கு
தினமும்
ஊதுவத்தி வாசனை
புகைப்படத்தில்!
- சிவபாரதி, திருவாரூர்.