டபுள்



தன் அக்கா மகளின் பிறந்த நாளுக்குப் போன என் மனைவி சாந்தி, பரிசாக ஐந்நூறு ரூபாய் எடுத்துக் கொடுப்பாள் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு அது மிக அதிகம். எங்கள் குடும்ப வருமானம் அப்படி!‘‘உனக்கு அறிவிருக்கா?’’ - வீடு திரும்பும்போது சாந்தியை ஒரு பிடி பிடித்தேன். ‘‘எல்லாம் காரணமாத்தான். ஒரு வாரம் பொறுத்துக்கங்க!’’ என்று என் வாயை அடைத்தாள் சாந்தி.

அடுத்த வாரம் எங்கள் பையன் ராகவுக்கு பிறந்த நாள். சாந்தியின் அக்கா குடும்பத்தினர் வந்து வாழ்த்திவிட்டு, பரிசாக ஆயிரம் ரூபாய் அவன் கையில் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
உடனே என் காதைக் கடித்தாள் சாந்தி.

‘‘என் அக்கா சின்ன வயசுல இருந்தே இப்படித்தான். எனக்கு அப்பா எது வாங்கித் தந்தாலும் அதை மாதிரி ரெண்டு மடங்கு தனக்கு வேணும்னு அடம் பிடிப்பா. இப்பவும் என்னை விட அவ டபுள் வசதியா இருக்கறா மாதிரி காட்டிக்கறதுல அவளுக்கு ஒரு அல்ப சந்தோஷம். இதைக் கணக்குப் போட்டுத்தான் அன்னிக்கு தைரியமா ஐந்நூறு கொடுத்தேன். அப்படி டபுளாச்சு பார்த்தீங்களா?’’ - என்றாள் சிரித்தபடி! ‘‘இப்படிக் கூட ஒரு  கணக்கா?’’ - பெருமூச்சு விட்டேன் நான்.

வி.சிவாஜி