சகுனியின் தாயம்



அறிவிப்பது போல் கட்டளையிட்ட பெண்ணைப் பார்த்து அந்த சீன வணிகன் மிரண்டதும், வியப்படைந்ததும் ஒரு கணம்தான். அதன் பிறகு அவன் துரிதமாக செயல்பட்டான். ‘யவன ராணி’ என தன்னைத் தானே அந்தப் பெண் குறிப்பிட்டதாலும், அணிந்திருந்த பட்டாடைகள் முதற்கொண்டு உடலசைவு வரை அனைத்துமே ராணிக்குரிய கம்பீரத்துடன் இருந்ததாலும், அவனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ‘‘வாருங்கள்...’’ என உடைந்த தமிழில் அழைத்தவன், அவளை உட்புறமாக அழைத்துச் சென்றான்.

சீன வணிக சாத்துக்குரிய இலக்கணங்களுடன் அந்த இடத்தின் வெளிப்புறம் காட்சியளித்தது. உட்புறமும் எந்த மாறுதலும் இல்லாமல் வணிக ஸ்தலமாகவே சிதறியிருந்தது. இரு நபர்கள் தோள்கள் உரசும்படி நடக்கக் கூடிய பாதை பாம்பு போல் நெளிந்திருக்க, இரு புறமும் ஒரே அளவில் கட்டப்பட்ட விற்பனை நிலையங்கள் மூடியிருந்தன. திறப்பதற்கு இன்னும் இரு நாழிகைகள் ஆகலாம். அனைத்துமே நான்குக்கு நான்கு அளவில் செதுக்கப்பட்டிருந்த சிறு அறைகள். உதிரி விற்பனைக்கான ஸ்தலங்கள் அவை. மொத்த கொள்முதல் ஒருவேளை உட்புறம் இருக்கலாம் என ராணி நினைத்தாள்.

சீரான வேகத்துடன் அந்தப் பாம்புப் பாதையில் சீன வணிகனை பின்பற்றி நடந்தாள். வளைந்து நெளிந்து சென்றவர்கள், குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த பின்பு ஒரு வீட்டை அடைந்தார்கள். சற்றே பெரிய வீடு. ஆனால், மாளிகை என்று குறிப்பிட முடியாது. அதன் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த சீன வணிகர்கள் பார்வையால் ராணியை துளைத்தார்கள். மேலுக்குத்தான் அவர்கள் வணிகர்கள் என்பதையும், உண்மையில் அவர்கள் வீரர்கள் என்பதையும் இமைப்பொழுதில் ராணி புரிந்து கொண்டாள். அதற்கு அத்தாட்சியாக அவர்களது இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த வாட்கள், கூர்மையுடன் மின்னின.

‘‘சக்கரவர்த்தி இருக்கிறாரா..?’’ என்று அவர்களிடம் கேட்ட அந்த வணிகன், பதிலுக்குக் காத்திராமல், தன்னைப் பின்தொடரும்படி ராணிக்கு கண்களால் சைகை செய்துவிட்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தான். தாழ்வாரத்தைக் கடந்தான்.அவனைப் பின்தொடர்ந்த ராணி, தன் கண்முன் விரிந்த காட்சியைக் கண்டு திகைத்தாள்.காரணம், தாழ்வாரத்தை கடந்த பிறகு நியாயமாகப் பார்த்தால் அறைகள் வெளிப்பட வேண்டும். அப்படித்தான் புகாரில் வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் - அறைகள் எதுவும் அங்கு தட்டுப்பட வில்லை. பதிலாக மந்திராலோசனை நடைபெறு
வதற்கான அறிகுறிகளுடன் அந்த இடம் காட்சியளித்தது.

பார்க்கப் பார்க்க ராணிக்கு தலை சுற்றியது. சீன வணிக சாத்துக்குள் இருப்பது வீடோ, மாளிகையோ அல்ல. பதிலாக அரண்மனை! வெளியிலிருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. இப்படியொரு அமைப்புடன் காவிரிபூம்பட்டினத்துக்குள்ளேயே ஓரிடம் கட்டப்பட்டிருப்பது சோழ மன்னரான பெருநற்கிள்ளிக்கு தெரியுமா?
‘‘வா...’’ ஒலித்த குரல், ராணியை இயல்புக்கு கொண்டு வந்தது.

‘‘வணக்கம் சக்கரவர்த்தி! இவர்கள்...’’ என வலப்புறம் திரும்பி தலைசாய்த்தபடி சீன வணிகன் வணங்கினான். ‘‘யவன ராணி தோற்றத்தில் வந்திருக்கும் பணிப்பெண்...’’ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சீன சக்கரவர்த்தி நகைத்தார். இதைக் கேட்டதும் சீன வணிகன் திடுக்கிட்டான். வாளை உருவுவதற்காக இடுப்புப் பக்கம் தன் கையை கொண்டு சென்றான்.
‘‘அவசியமில்லை. சோழ மன்னர் சொல்லித்தான் இங்கு வந்திருக்கிறாள். நீ செல்லலாம்...’’

சக்கரவர்த்தியை வணங்கியவன், யவன ராணி தோற்றத்திலிருந்த பணிப்பெண்ணை முறைத்துவிட்டு அகன்றான்.‘‘உருவத்தில் மட்டுமல்ல... நடை, உடை பாவனைகளிலும் ராணியைப் போலவே இருக்கிறாய்...’’ ‘‘இந்தப் பாராட்டு தயார் படுத்திய சோழ மன்னரைத்தான் போய்ச் சேர வேண்டும்...’’ ‘‘நல்லது. உன்னை எதற்காக வரச் சொன்னேன் என்று தெரியுமா?’’ சீன சக்கரவர்த்தியின் குரல் இடியாக இறங்கியது.

‘‘தெரியாது. நேரில் நீங்களே விளக்குவீர்கள் என்று மன்னர் சொன்னார்...’’
‘‘அவரை எங்கு சந்தித்தாய்?’’
‘‘மணிவண்ணன் கோட்டத்தில்...’’
‘‘எப்போது?’’

‘‘சில நாழிகைகளுக்கு முன்பு...’’
‘‘வேறென்ன சொன்னார்...’’
‘‘ ‘சீன சக்கரவர்த்தியை பார்த்துப் பேசிக் கொண்டிரு. விரைவில் நானும் உரையாடலில் கலந்து கொள்கிறேன்’ என்றார்...’’
‘‘எந்த வழியில் வருவதாக குறிப்பிட்டார்?’’
‘‘படகுத்துறை வழியாக...’’

‘‘அப்படியானால் இந்நேரம் அவர் வந்திருக்க வேண்டுமே..?’’ பதில் சொல்லாமல் ராணி உருவத்தில் இருந்த பணிப்பெண் அமைதியாக நின்றாள். அவளது உள்ளத்திலும் அதே கேள்விதான் சுற்றிச் சுற்றி வந்தது. ஆனால் -சீன சக்கரவர்த்தியோ, பணிப்பெண்ணோ எதிர்பார்க்காத சம்பவங்கள் சோழ மன்னர் விஷயத்தில் நடந்து கொண்டிருந்தன. பட்டினப்பாக்கத்தில் இருந்த மணிவண்ணன் கோட்டத்திலிருந்து படகுத்துறைக்கு செல்ல வேண்டுமானால் பட்டினப்பாக்கத்துக்கும் மருவூர்பாக்கத்துக்கும் இடையில் இருந்த நாளங்காடி இடைநிலத்தை அடைந்து, பிறகு தெற்கு திரும்பி, காவிரி நதி புகாரை அணைந்து நிற்கும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அப்படித்தான் சோழ மன்னர் பெருநற்கிள்ளியும் வந்தார். ஆனால், பட்டினப்பாக்கத்தின் வீதிகளைக் கடந்து மரங்களடர்ந்த வர்த்தக சாலைக்குள் புகுந்த பிறகும் அவர் ஏறிய ரதம் தெற்குப்புறம் திரும்பாமல் வடக்குப் புறமாக நேர் எதிர்திசையில் வேகமாகச் சென்றது. இந்தப் பாதை மாற்றத்தை அறியாமல், கனத்த யோசனையுடன் சோழ மன்னர் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
உற்சாகத்துடன் ரதத்தை செலுத்திக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அவர், அதங்கோட்டாசான்.

கல்லணையை கட்டி எந்த மன்னர் தமிழகத்தின் பெருமையை கடல் கடந்து யவன நாடு வரை கொண்டு சென்றாரோ... யார் பெருநற்கிள்ளி யின் முப்பாட்டனாக இருக்கிறாரோ... அந்த கரிகால் சோழனின் மகள் வயிற்றுப் பேரன்தான் அந்தப் பெரியவர். ரதத்தை செலுத்தியபடியே அதங்கோட்டாசான், தன் இடுப்பிலிருந்து ஒரு கல்லை எடுத்தார். முத்தமிட்டார். பழையபடி அதை பத்திரமாக தன் இடுப்பிலேயே வைத்தார்.

அந்தக் கல்லைத்தான் சில நாழிகைகளுக்கு முன் மணிவண்ணன் கோட்டத்திலிருந்த இறைவனின் கழுத்தில் சோழ மன்னர் பெருநற்கிள்ளி பார்த்தார். அவர்கள் இருவரும் சென்ற ரதத்தின் மேல் ஒரு கொடி பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடியில் இருந்த உருவம் - முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவம். ‘‘நோ...’’ என்று அலறிய மந்திரவாதி தாத்தா, உடனடியாக தன் வலக்கையை உயர்த்தினார்.

அடுத்த நொடி கோடாரி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்தது. அதைப் பிடித்தவர் சட்டென்று தன் தாடை பக்கம் அதைக் கொண்டு சென்றார். தாடியைப் போல் வளர்ந்திருந்த விழுதுகளை அந்தக் கோடாரியால் வெட்டினார். பிறகு அதை கொத்தாகப் பிடித்து தரையில் வீசி எறிந்தார். ‘‘மாஸ்டர்... என்ன காரியம் செஞ்சுட்டீங்க?’’ மயக்கம் தெளிந்த சூனியக்கார பாட்டி கத்தினாள்.
‘‘வேற வழியில்லை. நீ பேசாம இரு...’’

‘‘எப்படி அமைதியா இருக்க முடியும்? உங்க தாடிக்குள்ளதானே வௌவால் கோட்டை இருக்கு...’’ ‘‘அதனாலதான் அப்படி செஞ்சேன். இல்லைன்னா நீயும் நானும் சாம்பலாகியிருப்போம்...’’‘‘என்ன சொல்றீங்க மாஸ்டர்?’’ ‘‘நீயே என்ன நடக்குதுன்னு பாரு...’’

பார்த்தாள். தேவதையால் ஃபுட்பால் பந்து போல் மாற்றப்பட்டிருந்த நாகங்களின் விஷம், குறி தப்பாமல் பறந்து வந்தது. தரையில் விழுந்திருந்த மந்திரவாதி தாத்தாவின் தாடியை பொசுக்கியது.
‘‘ஐயோ...’’ மார்பில் அடித்துக் கொண்டு சூனியக்கார பாட்டி அழுதாள். ‘‘வௌவால் கோட்டைக்குள்ளதானே என்னோட மந்திர சக்தி பூராத்தையும் அடைச்சு வைச்சிருக்கேன்...’’
‘‘ஆமா, இப்ப உட்கார்ந்து அழு! முட்டாள்... அந்த மகேஷை அஞ்சு தலை பாம்புகிட்ட அனுப்பறதுக்கு முன்னாடி இதையெல்லாம் நீ யோசிச்சிருக்கணும்...’’

‘‘திட்டாதீங்க மாஸ்டர். அதுதான் நான் செஞ்சது தப்புன்னு மன்னிப்பு கேட்டுட்டேனே... மேற்கொண்டு என்ன செய்யணும்? அதைச் சொல்லுங்க...’’ ‘‘நீ ஆணியே புடுங்க வேண்டாம். அப்படி ஓரமா உட்கார்ந்திரு. இனி செய்ய வேண்டியதை நான் பார்த்துக்கறேன்...’’ சொன்ன மந்திரவாதி தாத்தா, மாயக்கண்ணாடி பக்கம் திரும்பினார். ‘‘எல்லாம் அறிந்த மாயக்கண்ணாடியே... அடுத்து மகேஷ் என்ன செய்யப் போகிறான் என்று சொல்...’’

‘‘மந்திரவாதி...’’ என்று ஒலித்த அசரீரி, தொடர்ந்தது. ‘‘அலாவுதீனுக்கு சாப விமோசனம் தரும் அருவியை நோக்கித்தான் அடுத்து மகேஷ் செல்லப் போகிறான்...’’
‘‘நல்லது. அவனைத் தடுத்து நிறுத்துவது எப்படி?’’‘‘ரொம்ப சிம்பிள்...’’ ‘‘அப்படியா? வழியைச் சொல்...’’ அசரீரி சொல்லி முடித்தது. உற்சாகத்துடன் எழுந்த மந்திரவாதி தாத்தா, தான் அமர்ந்திருந்த மரப்பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்த கத்தியை எடுத்தார். அதைப் பார்த்து சூனியக்கார பாட்டி தன் கண்களை அகலமாக விரித்தாள். ‘‘மாஸ்டர்... இது?’’

‘‘மகேஷை அழிக்கப் போற ஆயுதம்...’’ கடகடவென்று சிரித்த மந்திரவாதி தாத்தா மாயக் கண்ணாடியை பார்த்தார். வழக்கத்துக்கு மாறாக ராஜ உடையில் ஓநாயின் மீது அமர்ந்தபடி அருவியை நோக்கி மகேஷ் சென்று கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. ‘‘தேங்க்ஸ்...’’ என்றபடி மாயக்கண்ணாடியை மூடினார். அவர் மட்டும் ‘ஏன் திடீரென்று மகேஷ் அரச உடையையும், மார்புக் கவசத்தையும் அணிந்திருக்கிறான்...’ என்று கேட்டிருந்தால் தேவையான தகவலை மாயக்கண்ணாடி சொல்லியிருக்கும்.

ஏனெனில் அந்தக் கவசத்துக்குள்தான் தேவதை கொடுத்த முத்து மாலையை மகேஷ் அணிந்திருக்கிறான். அந்த மாலையின் நடுவில்தான் சிவப்புக் கல் பதித்திருக்கிறது...
‘‘ஏன் நிறுத்திவிட்டீர்கள் சார்வாகனரே..?’’ கேட்ட இளம் சார்வாகனரையே சற்று நேரம் உற்றுப் பார்த்தார் அந்த வயதான சார்வாகனர். அவரையும் அறியாமல் பெருமூச்சு வெளிப்பட்டது.
‘‘என்ன விஷயம்?’’

‘‘ஒன்றுமில்லை... இப்போதுதான் கவனித்தேன்...’’‘‘என்ன?’’‘‘சுபாலனின் வலது கையில் ஆறு விரல்கள் இருந்திருக்கின்றன...’’ ‘‘அது அவ்வளவு முக்கியமான தகவலா?’’ஆம். யுகங்கள்தோறும் உருளப் போகும் ‘சகுனியின் தாய’த்துக்கு அடித்தளமே அந்த ஆறுவிரல்கள்தான்...’’
‘‘புரியவில்லையே..?’’ ‘‘புரியாமல் இருப்பதே நல்லது...’’

‘‘அப்படியானால் மேற்கொண்டு எதுவும் நான் கேட்கவில்லை. ‘தாய் மாமன் என்பது தாய்க்கு சமமான உறவல்லவா? அப்படி இருக்கும்போது அக்காவின் புதல்வர்களை நானே அழிக்கலாமா? அது தர்மமா?’ என சகுனி கேட்டதற்கு சுபாலன் என்ன மறுமொழி சொன்னார் என்று மட்டும் சொல்லுங்கள்...’’
‘‘மைந்தனை அழைத்து தன் மடியில் அமர வைத்த சுபாலன், அவன் தலையை கோதியபடி சொல்லத் தொடங்கினார்...’’
‘‘ம்...’’

பல ஆண்டுகளுக்கு முன் தன் முன் நிகழ்ந்த அந்த உரையாடலை வயதான சார்வாகனர் சொல்லத் தொடங்கிய அதே நேரம் -அஸ்தினாபுரத்தில் இருந்த தன் மாளிகையில் குறுக்கும் நெடுக்குமாக சகுனி நடந்து கொண்டிருந்தார். மஞ்சத்தின் அருகில் எரிந்து கொண்டிருந்த தீபம், அணையும் தருவாயில் இருந்தது. காவலரை அழைக்காமல் தானே எண்ணெயை எடுத்து அதன் மீது விட்டார். பிரகாசம் அதிகமானது. கூடவே தந்தையைக் குறித்த நினைவும்.

யோசனையுடன் மஞ்சத்தின் மீது அமர்ந்தவர், தன் கழுத்தில் தவழ்ந்து கொண்டிருந்த ஒரு முத்து மாலையைப் பார்த்தார். அதன் நடுவில் சிவப்பு நிறக் கல் ஒன்று பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் தீபத்தின் ஒளியில் பிரகாசித்தது.அந்தப் பிரகாசம் அவர் இருந்த இடத்தை நிரப்பியது. அதுவும் புள்ளிப் புள்ளியாக. அந்தப் புள்ளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தன. சகுனி அந்தப் புள்ளிகளைத்தான் உன்னிப்பாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்... குறிப்பாக ஒரு புள்ளியை.

அந்தப் புள்ளி சுட்டிக் காட்டிய இடம் -அஸ்தினாபுரத்தில் இருந்த ஆதூரச் சாலை. அங்குதான் பகவான் கிருஷ்ணர் அந்த நேரத்தில் இருந்தார். அவர் கரங்களில் வெள்ளை நிறக் கொடியொன்று படபடத்துக் கொண்டிருந்தது.அந்தக் கொடியில் தீட்டப்பட்டிருந்த உருவத்தையே கிருஷ்ணர் பார்த்தபடி இருந்தார்.அந்த உருவம் -முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடு.
‘‘தோழர் எந்த இடத்தை குறி பார்க்கறீங்க?’’ கேட்டபடி வந்த இளவரசனைப் பார்த்து தங்கப்பன் புன்னகைத்தான். ‘‘ஆட்டோட தலை...’’
‘‘ஆடா?’’‘‘ஆமா. முழங்கை அளவுக்கு அதுக்கு கொம்பு இருக்கு...’’

‘‘அப்படியொரு ஆடு இருக்கா?’’
‘‘ம். சமைச்சு சாப்பிட்டா ருசியா இருக்கும்...’’
‘‘எங்க... துப்பாக்கியை இப்படி கொடுங்க. நான் பார்க்கறேன்...’’

‘‘தேவையில்ல. இந்நேரம் அது போயிருக்கும். அந்த வெள்ளக்காரன் என்ன செய்யறான்...’’
‘‘யாரு ஸ்காட் வில்லியம்ஸா? தூங்கிட்டு இருக்கான்...’’
‘‘உண்ட மயக்கமா?’’ சிரித்தான். சிரித்தார்கள். ‘‘சரி, அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்...’’ என்றபடி தங்கப்பன் நகர்ந்தான்.
‘‘எங்க போறீங்க?’’

‘‘அவசியம் உன்கிட்ட சொல்லணுமா?’’
இளவரசனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த தங்கப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
புதருக்குள் மறைந்த தங்கப்பன், நிதானமாக மலையை விட்டு இறங்கத் தொடங்கினான்.
பாதி தூரம் சென்றதும் பாறை ஒன்று தட்டுப்பட்டது. அவன் எதிர்பார்த்த மனிதர் அங்கு அமர்ந்திருந்தார்.
அவர், வால்டர் ஏகாம்பரம்.

‘‘தலைவர் பண்ற பந்தா
தாங்கலை...’’
‘‘என்ன பண்றார்?’’
‘‘கோர்ட் விசாரணைக்கு
வந்தவர், மேடை போட்டுக்
கொடுத்தாதான்
பேசுவேன்ங்கறார்!’’

‘‘பிட் நோட்டீஸ் அடிச்சு
பிரசாரம் பண்ணினதுக்காகவா தலைவரை கைது
பண்ணினாங்க..?’’
‘‘அவர் அடிச்சது ஷகிலா பட
பிட் நோட்டீஸாம்..!’’

‘‘புதுசா இந்த மருந்து,
மாத்திரை எதுக்கு டாக்டர்..?’’
‘‘நீங்க நர்ஸை
நினைக்காம இருக்க..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

(தொடரும்)

கே.என்.சிவராமன்