பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ அருண் 25

புறக்கணிக்கப்படும் ஹீரோக்கள்!

ஒலிம்பிக்கில் ஹாக்கி என்ற குழுப் போட்டியில் மட்டுமே அடுத்தடுத்து இந்தியா பதக்கம் வென்ற காலத்தில், தனி மனித விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர் கே.டி.ஜாதவ். குத்துச்சண்டை வீரரான அவர், தன்னுடைய இறுதிக் காலத்தில் மிகுந்த வறுமையில் உழன்று, ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

பத்ம விருதுகளோ, கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் அனுபவிக்கும் இன்ன பிற சலுகைகளோ பெறாமல், இயலாமையின் நாட்களில் பென்ஷனுக்காக போராடிக் கொண்டிருந்தார். உலகில் வேறெந்த நாட்டிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்றவர்களை அந்த தேசத்து அரசாங்கம் இத்தனை தூரம் அவமானப்படுத்தியிருக்காது. அந்த அளவிற்கு மிகுந்த மன உளைச்சலில் தன்னுடைய இறுதிக்காலத்தை கழித்திருக்கிறார் ஜாதவ்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், தமிழில் இலக்கியத் தொன்மைக்கும் செழுமைக்கும் காரணமாக இருக்கும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்த பாடல்களைப் பாடியவர்களில் ஒருவர். இவருக்காக மதுரையில் இருக்கும் நினைவிடம் என்ன ஆனது என்பதை வரலாறு ஒருபோதும் திரை விலக்கிக் காட்டியதே இல்லை. ஜாதவ், பெரியாழ்வார் - இருவரின் நிலை பற்றியும், விளையாட்டு வீரர்கள் எவ்விதம் இந்த நாட்டில் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதை முன்னிறுத்தியும் தமிழில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதுதான் தமிழின் முதல் குறும்படமும் கூட! தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் ஒரு படத்தொகுப்பாளரின் திறமையையே நம்பியிருந்தது. ‘படம் எடுக்கும்போது, காட்சிகளில் என்ன பிரச்னை இருந்தாலும், அதனை இந்த படத்தொகுப்பாளரிடம் விட்டு விட்டால் பார்த்துக் கொள்வார்’ என்கிற அளவிற்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது.

தமிழின் அத்தனை பெரிய இயக்குனர்களுக்கும் ஆபத்பாந்தவராக இருந்த அந்த படத்தொகுப்பாளர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் அதீத வன்முறை, வணிகப் போக்கு போன்றவற்றை எதிர்த்து, ‘இனி அப்படியான திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய மாட்டேன்’ என்று சொல்லி விட்டு வெளியேறினார். பின்னர் தமிழ்த் திரைப்படங்களின் வணிக கேந்திரத்தைக் கட்டுடைத்து, இரண்டு மணி நேர படத்திற்கு பதிலாக இருபது நிமிடத்திற்குள்ளாக ஒரு படத்தை எடுத்து முடித்தார். குறும்படம் என்கிற வார்த்தை கூட அதிகம் அறியப்படாத அந்த காலக்கட்டங்களில் அவரது முயற்சி, பெரிதும் கேலிக்குள்ளானது. ‘‘குறும்பு படம் எடுக்கிறார் போல’’ என்று சக திரைப்படக் கலைஞர்களே கேலி பேசினர்.

ஆனால், மற்றவர்களின் கேலி, துன்புறுத்தல், அலட்சியம் என எல்லாவற்றையும் தாண்டி, அந்த குறும்படம் தேசிய விருது பெற்றது. தமிழ்நாடு முழுக்க வீதிகளில் திரையிடப்பட்டு மக்களுக்கு இன்னொரு வகையான சினிமாவை அறிமுகம் செய்தது. ‘திரைப்படத்திற்கு கால அளவு முக்கியமல்ல, சொல்ல வரும் கதையை அதன் மையம் சிதையாமல் எத்தனை நிமிடத்திற்குள் எடுத்தாலும் அது திரைப்படம் கொடுக்கும் அதே திருப்தியைக் கொடுக்கும்’ என்று நிரூபித்தார் அவர். அந்தக் குறும்படம் ‘நாக் அவுட்’; அதன் இயக்குனர் பீ.லெனின்.

ஒரு அனாதைப் பிணத்தை வைத்துக்கொண்டு, அதற்கு ஈமச் சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று ஒருவன் சாலையில் எல்லாரிடமும் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறான். ஓரளவிற்கு பணம் கிடைத்தவுடன், இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கிறான். வெட்டியானிடம் அந்த சடலத்தைப் புதைக்கச் சொல்கிறான்.

அந்த வெட்டியான் தன் இயல்புப்படி, சடலத்தில் ஏதாவது தங்கமோ, பணமோ தேறுமா என்று ஆராய்ந்து பார்க்கிறான். அப்போது சடலம் சுற்றப் பட்டிருக்கும் வேட்டியில் தங்க சரிகை இருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறான். இறந்தவரின் அரைஞாண் கயிற்றில் தங்கத்திலான மெடல் ஒன்று இருக்கிறது. அதையும் எடுத்துக்கொள்கிறான். எல்லாவற்றையும் உருவிக்கொண்டு, சடலத்தைப் புதைக்கிறான்.

நாட்கள் கடக்க... அந்த சடலத்தைப் புதைத்த இடம், மனிதர்களும் நாய் உள்ளிட்ட விலங்குகளும் தங்களது கழிவுகளை வெளியேற்றும் இடமாக ஆசுவாசமடைகிறது. சில வருடங்கள் கழித்து, ‘குத்துச்சண்டைப் போட்டியில் உலக அளவில் புகழ்பெற்ற’ சஞ்சீவி என்பவரது நினைவிடத்தை வெளிநாட்டினருக்கு சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கிறார் கைடு ஒருவர். ‘‘சஞ்சீவி எனும் இந்த குத்துச்சண்டை வீரரை, அவர் வாழ்ந்த காலத்தில், களத்தில் வீழ்த்த ஒருவர் கூட இல்லை.

ஒருமுறை இவர் வெற்றிபெற்றுத் திரும்பியபோது, முன்னூறுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊரே திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தது. 1924ல் தங்கப்பதக்கம் வென்றார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் மட்டும் கிடைக்கவில்லை’’ என்று சொல்லி முடிக்கிறார் கைடு.

அந்தக் குத்துச்சண்டை வீரரை புதைத்த இடத்தில் ஒரு பலகை இருக்கிறது, ‘உலக குத்துச்சண்டை வீரர் சஞ்சீவி இங்கே உறங்குகிறார்’ என்று. ஆனால் அவருக்கான நினைவிடம் கட்டப்பட்டிருப்பது, அந்த இடத்திலிருந்து பல அடி தூரம் தாண்டி. ஒரு உண்மையான விளையாட்டு வீரனை அவனது வாழ்நாளில் மெச்சாத, வாழ விடாத இந்த சமூகமும் அரசும், குறைந்தபட்சம் அவனது நினைவிடத்தையாவது ஒழுங்காக அடையாளம் கண்டுகொள்கிறதா என்கிற ஆதங்கத்தை காட்சி வழியே உணர்த்தி, நம்மை உறைய வைக்கிறது இந்தக் குறும்படம்.

பீ.லெனின் படத்தொகுப்பாளராக இருந்த காரணத்தினாலோ என்னவோ, இந்தக் குறும்படம் படத்தொகுப்பின் அத்தனை சாத்தியங்களையும் நம் கண்முன்னே கொண்டு வந்து கிடத்துகிறது. ஒரு திரைப்படத்தை பார்வையாளனுக்கு அத்தனை சுவாரசியமாக சொல்லவும், கதை சொல்லலில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் முக்கியமான உத்தியாக கருதப்படும் ‘இன்டர்கட்’ படத்தொகுப்பு முறையிலேயே படத்தை எடுத்திருக்கிறார் அவர். விளையாட்டு வீரரான சஞ்சீவியின் சடலத்தை ஒரு ஓரமாகக் கிடத்திவிட்டு வெட்டியான் குழி வெட்டிக்கொண்டிருக்கும்போது, யார் இந்த சஞ்சீவி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக இன்டர்கட்டில் விளக்க ஆரம்பித்து விடுகிறார்.

சடலத்தின் அருகே கிடக்கும் கையுறையை குளோசப் ஷாட்டில் காண்பித்து விட்டு, இன்டர்கட்டில் அந்தக் கையுறையை அணிந்துகொண்டு அவர் எதிரில் இருக்கும் வீரனை தாக்கும் காட்சி காட்டப்படுகிறது. சடலத்தின் கால்களை குளோசப் காட்சியில் காட்டி விட்டு, இன்டர்கட்டில் அவர் கயிறு தாண்டி பயிற்சி எடுக்கும் காட்சி வருகிறது. ஒரு விளையாட்டு வீரன் உருவாகும் விதம், அவன் எத்தனை பெரிய வீரனாய் வாழ்ந்திருக்கிறான் என்பதையெல்லாம் இப்படிச் சொல்லி விடுகிறார்.

படத்தில் வசனங்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த உரையாடலும், நிறைய காட்சிகளுமே சினிமாவிற்கான மொழி என்பதை பீ.லெனின் 1992லேயே உணர்த்தியிருக்கிறார். சடலமாக நடித்திருப்பவர் சத்யேந்திரா. சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இவரை, இந்தக் குறும்படத்தில் எந்தவித அசைவும் இன்றி, படம் நெடுக ஒரு சடலமாகவே காட்டியிருப்பார்.

வெவ்வேறு உடல் மொழி காட்டி, வசனம் பேசிக்கொண்டிருப்பது மட்டுமல்ல நடிப்பு. கதைக்கு தேவையென்றால், ஒரு நொடி கூட அசையாமல் சடலமாகவே வாழ்வதும் நடிப்பின் இன்னொரு பரிமாணம் என உணர்த்தியிருக்கிறார் சத்யேந்திரா. படத்தில் வரும் பின்னணி இசையும், பட்டினத்தாரின் பாடலும் நம்மை மேலும் நெக்குருகச் செய்கின்றன. ஒரு உண்மையான விளையாட்டு வீரனை அவனது வாழ்நாளில் மெச்சாத, வாழ விடாத இந்த சமூகமும் அரசும், குறைந்தபட்சம் அவனது நினைவிடத்தையாவது ஒழுங்காக அடையாளம் கண்டுகொள்கிறதா?

படம்: நாக் அவுட்
இயக்கம்: பீ.லெனின்
நேரம்: 19.31 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: பீ.கண்ணன்
படத்தொகுப்பு: பீ.லெனின்-வி.டி.விஜயன்

இயக்கம், படத்தொகுப்பு என இரண்டு துறைகளுக்குமான தேசிய விருதுகளைப் பெற்றவர் லெனின். தமிழில் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவரால் எடுக்கப்பட்ட முதல் குறும்படம் ‘நாக் அவுட்’. தமிழ் நாட்டில் குறும்படங் களை ஒரு இயக்கமாக உருவாக்கியவர் லெனின். தான் எடுத்த பல குறும்படங்களை கிராமங்கள் தோறும் சென்று, வீதிகளில் ஒளிபரப்பிக் காட்டியிருக்கிறார். ‘‘தமிழ்த் திரைப்படங்களில் வன்முறையும், வணிக நோக்கமும் அதிகரித்து விட்டது.

 நாயகத் தன்மை தலை விரித்தாடுகிறது. சினிமா மாஃபியாக்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது’’ என்று தொடர்ந்து தமிழ் சினிமாவின் நலன் மீது அக்கறையாகப் பேசி வருகிறார். ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் பெரும்பாலான படங்களுக்கும் இவரே படத்தொகுப்பாளர். ‘நாக் அவுட்’ குறும்படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர், இயக்குனர் ஜனநாதன்.

(சித்திரங்கள் பேசும்...)

ஓவியம்: ஞானப்பிரகாசம்

ஸ்தபதி