நடைவெளிப் பயணம்



அன்புள்ள அனந்தமூர்த்தி

ஆகஸ்ட் 22ம் தேதி யூ.ஆர்.அனந்தமூர்த்தி காலமானார் என்று அறிந்த போது, நாற்பது ஆண்டு ஞாபகங்கள் நொடியில் தோன்றின. நான் அவரை முதலில் சந்தித்தது 1973 ஜனவரியில் என்றாலும், நான் அதற்குப் பல ஆண்டுகள் முன்னரே அவர் பெயரையும் அவருடைய புகழ் பெற்ற நாவலாகிய ‘ஸம்ஸ்காரா’வையும் அறிந்திருந்தேன்.

அந்த நாளில் தி.க.சிவசங்கரன் அவர்களைப் பார்க்க சோவியத் செய்தி நிறுவனத்திற்குச் செல்வேன். அங்கு திவாகர் என்றோர் இளம் கன்னட எழுத்தாளர் என்னிடம் பேச வருவார். நான் ஒரு பூங்காவிற்குச் சென்று எழுதுவதை அறிந்த அவர், வெளியிடத்தில் மேஜை இல்லாமல் எழுத வசதியாக ஒரு ‘ஃபைல்’ கொடுத்தார்.

 (அது இன்றும் பத்திரமாக இருக்கிறது.) அவர் கன்னட முன்னணி எழுத்தாளர்கள் பற்றி விவரமாகவே சொல்வார். ‘ஸம்ஸ்காரா’ பற்றிச் சொன்னாலும், ‘‘அனந்தமூர்த்தி கோஷ்டியினர் ‘பிற்போக்காளன்’ என்று கேலி செய்யும் எஸ்.எல்.பைரப்பாதான் திடமான எழுத்தாளர்’’ என்றும் கூறுவார். திவாகரும் செயல்முறைப் ‘பிற்போக்காள’னாக மாறி அமெரிக்கச் செய்தி நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்!

அப்போது அநேகமாக ஒவ்வொரு ஆண்டும் ஏ.கே.ராமானுஜன் சென்னையில் வந்து இரு மாதங்கள் தங்குவார். ஏ.கே.ராமானுஜன் மைசூர் சமஸ்தானத்தில் பிறந்த தமிழர். கன்னடம்தான் அவர் பிறந்ததிலிருந்தே கேட்டு, பேசி, எழுதிய மொழி. ஆனால் அவர் தமிழில் பட்டமேற்படிப்பு படித்து, திருவனந்தபுரம் மற்றும் மதுரையில் ஆசிரியராக இருந்து விட்டு, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசியப் பிரிவில் சேர்ந்து கொண்டார். அற்பாயுளில் போய் விட்டார்.

 அதற்குள் ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘வசனா’ என்றழைக்கப்படும் கன்னட தலித் கவிதைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலிய பண்டைய பொக்கிஷங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

அவருடைய மொழிபெயர்ப்பு பற்றித் தமிழ் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டிரா விட்டாலும், அவருடைய மொழிபெயர்ப்பு தான் கீழ்த்திசைக் கலாசாரங்கள் பற்றி அக்கறை கொண்ட ஆங்கில அறிஞர்கள் மத்தியில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது. அவை அச்சேறும் முன்பே அவர் என்னிடம் காட்டியிருக்கிறார். அவரே ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். ஒரு முறை ஒரு நாவல் மொழிபெயர்ப்பைக் காட்டினார். அது ‘ஸம்ஸ்காரா’வின் முதல் அத்தியாயம்.

பாராட்டும்படியாக இல்லை. அவரிடத்தில் சொல்லா விட்டாலும், அவர் என் அபிப்பிராயத்தைப் புரிந்து கொண்டார். பின்னர் அனந்தமூர்த்தியை 1973ல் சந்தித்தபோது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. குடும்பம் வரை ராமானுஜன், அனந்தமூர்த்தி இருவரும் ஒரே நிலையில் இருந்தார்கள். அன்றே கலப்புத் திருமணம் சகஜமானது. ஆனால் எழுத்தாளர்களுக்கு அதை நியாயப்படுத்த வேண்டும்.

அதன் பிறகு நானும் அனந்தமூர்த்தியும் பல்வேறு கருத்தரங்கங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் சந்தித்திருக்கிறோம். (எங்கள் கலந்துரையாடல் டிசம்பர் 1976ல் நடந்தது.) ஒருமுறை அவர் சென்னை ‘இலக்கியச் சிந்தனை’ தமிழ்ப் புத்தாண்டு தின விழாவுக்கு வந்திருந்தார். அன்று என்னால் போக முடியவில்லை. நான் ஏன் வரவில்லை என்று விசாரித்திருக்கிறார்.

ஆனால் அவர் மகன் ஷரத் திருமண விருந்துக்குப் போனேன். அவன் மணந்தது ஒரு வேற்று மதத்துப் பெண்ணை. ஆனால் அன்று காலை அவர் அவனுக்கு உபநயனம் நடத்தியிருக்கிறார்! பல எதிர்ப்புகளை மீறி நடந்த அந்தத் திருமணம் துரதிர்ஷ்டவசமாக நீடிக்கவில்லை. சென்னை பார்க் ஷெராடன் ஹோட்டலில் விருந்து. பெண் வீட்டார் வந்தார்கள். யாரிடமும் பேசாமல் தனியாக ஒரு குழுவாக உட்கார்ந்திருந்தார்கள்; போய்விட்டார்கள். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

‘ஸம்ஸ்காரா’ வெளியுலகுக்கு அனந்தமூர்த்தி பற்றி ஒரு தோற்றம் அளித்தாலும், உண்மையில் அவர் ஒரு பாரம்பரியவாதி. அது தவறே இல்லை. பாரம்பரியமே காலத்துக்குக் காலம் இயல்பாகவே மாறிக் கொள்கிறது. என் மிக நெருங்கிய உறவினர்கள் குடும்பங்களில் ஜாதி மாறி, மதம் மாறித் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அது பிரச்னையாகவே இருந்ததில்லை. 

அனந்தமூர்த்தி இங்கிலாந்தில் முனைவர் பட்டத்திற்குப் படிக்கையில் அதே நேரத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும் விமர்சகருமான கைலாசபதியும் அவருடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இருவருக்கும் நீண்ட விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். அனந்தமூர்த்திக்குக் கைலாசபதி மீது மிகுந்த மரியாதை இருந்தது. கைலாசபதி அயோவா செல்ல என்னை சிபாரிசு செய்யச் சொன்னார். நான் செய்தேன். கைலாசபதி அயோவா சென்று அங்கிருந்து சீனா சென்றார். அவரும் அற்பாயுளில் மறைந்தவர்.

அனந்தமூர்த்தியை ஒரு ‘ரொமான்டிக்’ என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அவருடைய குருநாதரும் நலம் விரும்பியுமான சி.டி.நரசிம்மய்யா அதற்கு நேர் எதிர். ஒரு சொல் மிகை உணர்ச்சியாகவோ ரொமான்டிக்காகவோ இருந்தால் அவர் ஒதுக்கி விடுவார். இதில் ஒரு வினோதம்... அவர் ‘உலக மில்டன் சங்க’த்துக்குத் தலைவர்! அவருக்கு ‘ஸம்ஸ்காரா’ பற்றிப் பெரிய அபிப்பிராயம் இல்லை. ‘‘என்னப்பா இது? ஒரே இரவில் இவ்வளவா!’’ என்பார். ஆனால் அனந்தமூர்த்தி மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

நரசிம்மய்யா மைசூர் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமனம் பெற வேண்டும். ஆனால் ஒரு பேராசிரியர் குறுக்கே புகுந்து, ‘நரசிம்மய்யா அயலான், முனைவர் பட்டம் பெறாதவர்’ என்ற காரணங்கள் காட்டி அதை நடக்க விடாமல் செய்து விட்டார். கடைசியில் அந்த பேராசிரியருக்கும் கிடைக்க வில்லை. விந்தையாக நரசிம்மய்யா என்ற பெயர் கொண்ட இன்னொரு அதிகாரி நியமனம் பெற்றார்!

நரசிம்மய்யாவை எதிர்த்த அதே பேராசிரியர், அனந்தமூர்த்தி மீதும் சில கடுமையான குற்றச்சாட்டுகள் கொணர்ந்தார். அனந்தமூர்த்திக்கு அப்போதே அரசியல்வாதி மனப்போக்கு இருந்தது. அவர் நேராக அந்தப் பேராசிரியரின் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து தர்ணா செய்தார். அவர் இன்னொரு முறை இப்படி தர்ணா செய்த அடுத்த நாள் நான் பெங்களூரு சென்றிருந்தேன். அனந்தமூர்த்தியிடம் சொன்னேன், ‘‘நீங்கள் தாராளமாக தர்ணா செய்யுங்கள்.

உங்கள் மனைவியையும் ஏன் தர்ணா செய்ய வைக்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’ என்று கேட்டார். நான் அன்றைய பத்திரிகையைக் காட்டினேன். ‘‘ஆமாம், சரியல்லதான்’’ என்றார். ஆனால் அவர் மனைவி தானாகவே அனந்தமூர்த்தி கூடப் போயிருக்க வேண்டும். அவருக்கு அப்போதே உடல்நிலை சரியில்லை.

நாங்கள் இருவரும் கடைசியாகப் பங்கேற்றது ம்யூனிக் இலக்கிய விழாவில். அங்கு ‘விமோசனம்’ என்ற என் நீண்ட சிறுகதை ஜெர்மனில் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்பட்டது. அனந்தமூர்த்திக்கு மீண்டும் ‘ஸம்ஸ்காரா’. ‘‘இது உங்களை விடாது போலிருக்கிறது’’ என்றேன். அங்கும் அவர் மனைவி அவரை மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்.

சிலருக்கு யாராவது நிரந்தர எதிரியாக இருக்கவேண்டும். பைரப்பா என்ற பெயரைக் கேட்டாலே அனந்தமூர்த்திக்குக் கோபம் வந்துவிடும். ஆனால் பைரப்பாவுக்கு வலுவான இலக்கியத் தளம் இருந்தது.  உலகம் அதுவாகச் சில பங்கீடுகள் செய்கிறது. அதை உணர்ந்து விட்டால் தேவையற்ற ஒப்பீட்டையும் மனவேதனையையும் தவிர்த்து விடலாம்.உலகம் அதுவாகச் சில பங்கீடுகள் செய்கிறது. அதை உணர்ந்து விட்டால் தேவையற்றஒப்பீட்டையும் மனவேதனையையும் தவிர்த்து விடலாம்.

படிக்க


கவிஞரும் சிறுகதை ஆசிரியருமான, ஓய்வுபெற்ற சென்னை பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியர் ராஜகோபாலின் மகன் திருமணத்தில் ‘நவீன விருட்சம்’ ஆசிரியர் அழகியசிங்கர் (எஸ்.சந்திரமௌலி) அவர்களைச் சந்தித்தேன். அநேக இளம் எழுத்தாளர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்த அச்சிறு பத்திரிகை ஆகஸ்ட் மாதம் அதன் 95வது இதழைக் கொணர்ந்திருக்கிறது. (இதழைப் பெற: அழகியசிங்கர், புது எண் 16, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600033.)

அந்தப் பத்திரிகையில் பஞ்சாட்சரம் செல்வராஜ், ஐராவதம் போன்ற எழுத்தாளர்களும் நிறைய எழுதியிருக்கிறார்கள். இன்று அவர்கள் இருவரும் நம்மிடையே இல்லை. தர்மு சிவராமு, ஸ்டெல்லா ப்ரூஸ் போன்றவர்களுக்கு அழகியசிங்கர் நிறைய உதவியிருக்கிறார். மாதம் ஒரு முறை சென்னை தி.நகரில் பாண்டி பஜார் அருகில் உள்ள அலமேலு மங்கைத் தாயார் கல்யாண மண்டபத்தில் இலக்கியக் கூட்டமும் நடத்துகிறார்.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்