விவாகரத்தானால் குழந்தைகள் யாரிடம் போகும்?



‘‘பாப்பா, உனக்கு அப்பாகிட்ட இருக்க விருப்பமா? அம்மாகிட்ட இருக்க விருப்பமா?’’ - சினிமா விவாகரத்துகளில் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதை இப்படி சிம்பிளாக முடித்துவிடுவார்கள். ‘‘ஆனா, அதையெல்லாம் தாண்டியும் ஆயிரம் ப்ரொசீஜர் இருக்கு சார். சொல்லப் போனா, சட்டப்படி குழந்தைங்க இவங்களோடதான் இருக்கணும்னு ஒரு உறுதியான ஸ்டேட்மென்டே இல்லை. கோர்ட் என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கும் போலிருக்கு’’ என நண்பர் ஒருவர் புலம்ப, சட்டென அணுகினோம் சட்ட நிபுணரை.

‘‘குழந்தைகளைப் பராமரிக்கும் விஷயத்தில் அவர்களின் படிப்பும் பாதுகாப்புமே முக்கியம் என அழுத்திச் சொல்கிறது சட்டம். எனவே தான், இதில் தாய் தந்தையரைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து முடிவெடுக்கிறது கோர்ட்’’ எனத் துவங்கினார் மூத்த வழக்குரைஞரான செந்தில்நாதன். ‘‘கணவன் - மனைவி இருவருமே இந்துக்கள் என்றால், இந்து திருமணச் சட்டப்படியும்... பிற மதத்தினர் என்றால் சிறப்பு திருமணச் சட்டப்படியும் கோர்ட் முடிவெடுக்கும்.

வாரிசுகள் யாரிடம் வளர வேண்டும் என்பதில் இந்த இரு சட்டங்களுமே கிட்டத்தட்ட ஒரே விதிமுறைகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதன்படி, 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தாயிடம்தான் இருக்க வேண்டும் என்பது உறுதி. ஒருவேளை அந்தத் தாய்க்கு குழந்தையை வளர்க்க முடியாதபடி, மனநிலை பாதிப்பு போன்ற பிரச்னை இருந்தாலோ, தாயிடம் வளர்ந்தால் குழந்தைக்கு ஆபத்து என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டாலோ... தந்தை அந்தக் குழந்தைக்கு உரிமை கோர முடியும்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால், அந்தக் குழந்தையின் எதிர்கால நலனுக்கு ஏற்ற சூழ்நிலை தாயிடம் இருக்கிறதா, தந்தையிடம் இருக்கிறதா எனப் பரிசீலித்து அவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த விஷயத்தில், நீதிமன்றம் ஒற்றைக் காரணத்தை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுக்காது. குழந்தையின் நலன் என்றால் அதில் முதன்மையானது கல்வி.

 பொருளாதாரக் காரணங்கள் மட்டுமல்லாமல், தொடர்ந்த பராமரிப்பு, குழந்தையோடு செலவழிக்கும் நேரம் எனப் பல விஷயங்கள் இதில் ஆராயப்படுகின்றன. உதாரணத்துக்கு, தந்தை எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் வியாபாரக் காரணங்களுக்காக வெளியூரில் சுற்றிக்கொண்டே இருப்பவர் என்றால் அவரிடம் ஒப்படைக்க கோர்ட் தயங்கும்.

அடுத்ததாக, கணவனோ, மனைவியோ வேறொரு திருமணம் செய்திருக்கிறார்களா என்பதைப் பார்ப்பார்கள். தாய் மறு திருமணம் செய்து, தந்தை திருமணம் செய்யாமல் இருந்தால், தனியாக வாழும் தந்தைக்கே குழந்தையை வளர்க்கும் முதல் உரிமை தரப்படும். தந்தை மறுமணம் செய்திருந்தால், தாய் எந்தத் தடையும் இல்லாமல் குழந்தையை வளர்க்கலாம். இருவருமே மறுமணம் செய்திருக்கும்பட்சத்தில், குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா, சித்திகள் யாராவது ‘கார்டியன்’... அதாவது, காப்பாளர் எனும் வளர்ப்பு உரிமையைக் கோரலாம்.

அனைத்துக்கும் மேலாக,  குழந்தை யாரிடம் வளர விரும்புகிறது என்பதையும் நீதிமன்றம் விசாரிக்கும். ‘தந்தையிடம்தான் வளருவேன்’ என்றோ, அல்லது ‘தாயிடம்தான்’ என்றோ, குழந்தை எது சொன்னாலும் எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலாவது குழந்தை அப்படிச் சொல்கிறதா என ஆராய்வார்கள். வாரிசின் வேண்டுகோளில் நியாயம் இருக்கும்பட்சத்தில் அதன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

இப்படி எல்லாக் கோணங்களிலும் ஒரு குழந்தையின் நலன் சார்ந்து நீதிமன்றம் தீர்மானித்தாலும், ஏமாந்து நிற்கும் இன்னொருவருக்கும் சில உரிமைகளை அது கொடுக்கிறது. அதன்படி, அவர் தன் பிள்ளையை தற்காலிகமாகப் பார்க்க, பராமரிக்க முடியும்.

வாரிசு தாயிடம் வளர்வதாக இருந்தால், தந்தை வாரம் ஒரு முறையோ மாதத்தில் ஒருமுறையோ தன் குழந்தையை வந்து பார்த்துப் போகலாம். அல்லது, அந்த நாள் முழுக்க தன்னோடு கூட்டிப் போய் பராமரிக்கலாம். இதையும் வாரிசின் நலன் கருதியே தீர்மானிக்கிறது நீதிமன்றம்.

இப்படி குழந்தையைப் பார்க்கச் செல்லும் தாயோ, தந்தையோ, தன் இஷ்டப்படி நாளையும், கிழமையையும் தீர்மானிக்க முடியாது. குழந்தையின் படிப்பு பாதிக்கப்படாமல், பள்ளி விடுமுறை நாளாக அது இருக்க வேண்டும். இது போல் சில விதிமுறைகள் உள்ளன. குழந்தையின் வாழ்விடம், வளர்ப்பு முறை போன்றவற்றைப் பொறுத்து இவை அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்ட  பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்மானிக்கப்படும்.”

குழந்தையின் எதிர்கால நலனுக்கு ஏற்ற சூழ்நிலை தாயிடம் இருக்கிறதா, தந்தையிடம் இருக்கிறதா ?

- டி.ரஞ்சித்