பொலிட்டிகல் பீட்



தன்னைப் பற்றிய வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க செய்த முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஒருமுறை தடுத்தார். ஆனாலும் பா.ஜ.க.வில் சிலர் அதைக் கேட்பதாக இல்லை போலிருக்கிறது.

மோடி பற்றி புகைப்பட நிபுணர் திலீப் தாக்கர் எழுதிய ஒரு புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி. ‘‘இந்த நூலை குஜராத்தின் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும். அப்போது இந்தியாவுக்கே வழிகாட்டும் இடமாக குஜராத் மாறும்’’ என்று பரவசத்தோடு ஸ்ம்ரிதி பேச, மீண்டும் மோடி பாடத்துக்கு பிள்ளையார் சுழி ஆரம்பம்!

மோடி ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை பத்திரிகைகள் அலசிய அதே நேரத்தில் சத்தமில்லாமல் இன்னொரு செய்தியும் வந்தது. பல அமைச்சர்களுக்கு பிரைவேட் செக்ரட்டரி நியமிக்கும் ஃபைலுக்கு அப்போது தான் ஒப்புதல் தந்திருந்தார் மோடி. சீனியர் அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் அதுவரை செக்ரட்டரி இல்லாமல் தவித்தார்கள். ஆனாலும் ‘ஆட்சிக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருவதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அமைச்சர்களின் உதவியாளர்கள்தான். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு தப்பான ஆட்களை நியமித்து விடக் கூடாது’ என்பது மோடி பாலிஸி!

பதவியை இழந்த நாளிலிருந்து துவங்கி, மூன்றே மாதங்களில் மூன்று புத்தகங்களை எழுதி முடித்துவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து பல பெரிய திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது, நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பல சட்டங்களை இயற்றியது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கு நலத் திட்டங்களைக் கொண்டு செல்ல முயன்றது என எல்லாம் பற்றிய புத்தகங்கள் இவை. இப்போதெல்லாம் எழுத்தாளர்களைவிட அரசியல்வாதிகள் அதிகம் புத்தகம் எழுதுகிறார்கள்!

தொடர்ச்சியாக நான்காவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணிக் சர்க்காரை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கும் திரிபுரா மாநிலம், சத்தமில்லாமல் இன்னொரு சாதனையைச் செய்திருக்கிறது. இந்தியாவிலேயே கல்வி அறிவில் அந்த மாநிலம் முதலிடம் பிடித்திருக்கிறது. 95.16 சதவீதம். ‘‘இன்னும் ஆறு மாதங்களில் நூறு சதவீதத்தை எட்டுவோம்’’ என்கிறார் முதல்வர். கல்வி அறிவுக்கான அளவுகோல், மூன்றாம் வகுப்பு பாடத்தைப் படித்துப் புரிந்துகொள்வது!

‘‘என்னை சினிமாவில் எல்லோரும் காசு கொடுத்து விட்டு வந்து பார்க்கிறார்கள். எந்த செலவும் இல்லாமல் நேரிலேயே என்னைப் பார்ப்பதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ என தேர்தல் பிரசாரத்தில் பேசி சர்ச்சைக்கு ஆளானவர் நடிகை சதாப்தி ராய். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான இவர், அதன்பின் தனது இமேஜை மாற்றுவதற்காக தொகுதியில் பலரிடம் தனது செல்போன் நம்பரைக் கொடுத்திருந்தார்.

அதுதான் இப்போது பிரச்னை ஆகிவிட்டது. ‘தெருவில் நாய் சண்டை போடுகிறது’, ‘பொண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போயிட்டா’ என்கிற ரேஞ்சில் புகார்கள் நேரங் கெட்ட நேரத்தில் வர, சங்கடத்தில் தவிக்கிறார் சதாப்தி.