சோனியா மருமகன் வி.ஐ.பி. இல்லையா?



‘க்யூ’வில் நிற்க வேண்டியிருக்கும் எல்லா இடங்களிலும் வி.ஐ.பி.க்களுக்கு தனியாக ஒரு முன்னுரிமையை உருவாக்கிக் கொடுப்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப் போன பண்பாடாகி விட்டது. அதனால்தான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்களில் வோட்டு போட தலைவர்களும் நடிகர்களும் க்யூவில் நிற்பது அதிசய செய்தி ஆகிறது.

ஆனால் விசேஷ தினங்களில் ஏதாவது புகழ்பெற்ற கோயிலுக்குப் போனால் குழப்பம் வந்துவிடும். இலவச தரிசன க்யூவை விட, வி.ஐ.பி.க்களுக்கான கட்டண தரிசன க்யூ பெரிதாக இருக்கும். விமான நிலைய பாதுகாப்பு விஷயத்தில் அப்படி ஒரு குழப்பம் வந்துவிட, அது ‘சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு வி.ஐ.பி. அந்தஸ்து கொடுப்பதா, வேண்டாமா?’ என்ற அரசியல் சர்ச்சையில் வந்து நிற்கிறது.

விமான நிலையப் பாதுகாப்பு விஷயத்தில் உலகில் எந்த நாடும் சமரசம் செய்து கொள்வதில்லை. குடியுரிமைச் சோதனைக்குப் பிறகு கடுமையான பாதுகாப்பு சோதனையைக் கடந்தே ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஏறி உட்கார முடியும். அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு ஆளாகும். சில நாடுகளில் ஸ்கேனர் வைத்து மனிதர்களை சோதிக்கிறார்கள். சந்தேகப்படும் எவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட நிர்வாண சோதனை நடத்துவதுண்டு.

 மத்திய அமைச்சராக இருந்தபோது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இப்படி அமெரிக்காவில் சோதனைக்கு ஆளானார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர்கள் ஷாருக் கான், நம் கமல் ஹாசன் என இப்படி குறி வைத்து சோதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான இந்தியர்களின் பட்டியல் நீளம்!

‘ஒவ்வொரு பயணியும் மற்றும் அவரது பேக்கேஜும் சோதிக்கப்பட்டால்தான், விமானத்தில் ஏறும் மற்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என்கிறது சர்வதேச பயணிகள் விமான அமைப்பின் விதி. ‘சில நாடுகள் தங்களின் ஆட்சியாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு கொடுக்கலாம். ஆனால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பு சோதனையைச் செய்துகொண்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்’ என்கிறது அந்த அமைப்பு.

ஆனால், கடைசி நிமிடத்தில் விமானத்தில் அடித்துப் பிடித்து ஏறுவதும், தங்களுக்காக விமானத்தையே காத்திருக்கச் செய்வதுமாக பயணித்துப் பழகி விட்டவர்கள் நம் தலைவர்கள் பலர். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து கடந்த 89ம் ஆண்டு வரை விமான நிலைய பாதுகாப்பு சோதனையிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, இதர நீதிபதிகள், மாநில கவர்னர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த சலுகை. மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்கூட பாதுகாப்பு சோதனைக்கு நின்றாக வேண்டும். சில இடங்களில் முகத்தைப் பார்த்து தனியாக அழைத்துச் செல்வார்கள். யாராவது வம்பு பிடித்த அதிகாரி இருந்தால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கையைத் தூக்கி சோதித்து விடுவார்கள். 

இப்படி நிகழ்ந்த சம்பவங்களால், ஒரு வி.ஐ.பி. லிஸ்ட் ரெடி செய்துவிட்டார்கள். 1989ம் ஆண்டிலிருந்து அது அனுமன் வால் போல நீண்டபடி இருக்கிறது. மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையிலான ஒரு குழுவே இந்த வி.ஐ.பி. லிஸ்ட்டை தயாரிக்கிறது. இந்த ஆலோசனையை ஏற்று அவ்வப்போது இந்தப் பட்டியலை இறுதி செய்வது விமான நிலையப் பாதுகாப்புத் துறையின் பணி. கூட்டிப் பார்த்தால், 33 பிரிவைச் சேர்ந்தவர்கள் விலக்குப் பெறுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டபோது பிரச்னையானது. பொதுவாக இந்த வி.ஐ.பி. லிஸ்ட் என்பது பதவியில் இருப்பவர்களையே குறிக்கிறது. அதாவது, பிரதமர், ஜனாதிபதி என்று... இந்த லிஸ்ட்டில் தனிப்பட்ட ஒரு நபரின் பெயர் என இடம்பெற்றிருப்பது வதேரா பெயர் மட்டுமே! விமான நிலையங்களில் வி.ஐ.பி. பட்டியல் ஒட்டப்படும்.

 அப்படி ஒட்டிய ஒரு பட்டியலை யாரோ போட்டோ எடுத்து பத்திரிகைகளில் வெளியிட, அது பெரிய பிரச்னை ஆனது. ஆனால், ‘‘எப்போதும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பில் சோனியா காந்தி குடும்பம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால்கூட தப்பு செய்ய முடியாது. அதனால் இப்படி விலக்கு தருவதில் தவறில்லை’’ என்பது அதிகாரிகளின் வாதம்.

மாமியார் சோனியா, மனைவி பிரியங்கா ஆகியோரோடு போகும்போது மட்டும்தான் வதேரா இந்த சலுகையைப் பயன்படுத்துகிறார். அவர் தனியாகச் செல்லும் பயணங்களின்போது, முறைப்படி க்யூவில் நின்று பாதுகாப்பு பரிசோதனையை முடித்தபிறகே விமானம் ஏறுகிறார். இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த விஷயம் சர்ச்சையானது. உடனே எஸ்.பி.ஜி. படைத் தலைவருக்கு பிரியங்கா ஒரு கடிதம் எழுதினார்.

‘‘என் கணவருக்கு இந்த சலுகை ரத்து செய்யப்பட்டால், எங்கள் குடும்பத்துக்கு சிறப்புப் பாதுகாப்புப் படை பாதுகாப்பே தேவையில்லை’’ என அதில் அவர் தெரிவிக்க, வம்பே வேண்டாம் என அரசு ஒதுங்கிக் கொண்டது. வி.ஐ.பி.க்கள் வழக்கம் போல சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார்கள்.

அந்த வி.ஐ.பி. லிஸ்ட்!

இந்திய விமான நிலையங்களில் கீழ்க்கண்ட எல்லோரும் எவ்வித பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் விமானம் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்...ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில கவர்னர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், திட்டக்குழு துணைத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள், பாரத ரத்னா விருது பெற்றவர்கள்,

இந்தியாவில் பதவியில் இருக்கும் வெளிநாடுகளின் தூதர்கள், துணைத் தூதர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமை தணிக்கை கணக்கு அலுவலர், மக்களவை துணை சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர், மத்திய இணை அமைச்சர்கள், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கேபினட் செயலாளர்,

 யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், முப்படைத் தளபதிகள், அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை முதல்வர்கள், இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்கள், தலாய் லாமா, எஸ்.பி.ஜி. படையின் பாதுகாப்பு பெற்றவர்கள் (அதாவது சோனியா காந்தி குடும்பம், வாஜ்பாய் மற்றும் பிரதமர்), ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதியின் மனைவி.

- அகஸ்டஸ்