ஆண்களை சரண்டராக்கும் அழகு போலீஸ்



அரெஸ்ட் பண்ணுங்க!

இந்த ஆம்பளைங்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே இல்லை. கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு போட்டோவை பத்திரிகையில் பார்த்துவிட்டால் போதும்... உடனே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடுவது... வகைதொகை இல்லாமல் வர்ணிப்பது... ஒரு கூச்சநாச்சம் வேண்டாம்? இப்படித்தான் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரா ஹீனா ரப்பானினு ஒரு மேடம் வந்தாங்க.

 ‘அவங்களுக்கு கை கொடுக்கறதுக்காக காஷ்மீரைக் கூட கொடுக்கலாம்’னு எழுதினாங்க சில இன்டர்நெட் இடியட்ஸ். அந்த வரிசையில் இப்போதைக்கு சோஷியல் மீடியாவின் பியூட்டி குயின், கேரளாவைச் சேர்ந்த மெரின் ஜோசப். ஐ.பி.எஸ் பாஸாகி பயிற்சியில் இருப்பவர் இவர். ஆனால், அழகாக இருக்கிறாரே! ‘இந்தியாவின் மிக அழகான ஐ.பி.எஸ் அதிகாரி’ என இப்போதே இவருக்குப் பட்டம் கொடுத்து புளகாங்கிதப்பட்டிருக்கிறது ஜொள்ளர்கள் கூட்டம்!

24 வயதாகும் மெரின், கேரளத்து வார்ப்பு என்றாலும் ஐதராபாத், திருவனந்தபுரம், புதுடெல்லி என பல்வேறு நகரங்களில் படித்து வளர்ந்தவர். தில்லியில் புகழ் பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் முடித்து, 2012ல் ஐ.பி.எஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றார். தற்சமயம் ஐதராபாத்தில் இருக்கும் தேசிய போலீஸ் அகாடமியில் அவருக்கு அதி தீவிர பயிற்சி.

கடந்த ஜூலை மாதம் ‘ஜி20’ நாடுகளின் சார்பாக சிட்னியில் நடைபெற்ற ‘ஒய்20’ என்கிற இளைஞர் சம்மேளனத்தில் பங்கு பெற்ற இந்திய அணிக்கு தலைமை ஏற்றவர் மெரின்தான். இந்தப் பெருமையைக் குறிப்பிடுவதற்காக சில பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் இவர் புகைப்படம் இடம்பெற அதைப் பார்த்த மாத்திரத்தில் சொக்கிப் போய்விட்டார்கள் இளைஞர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில், இவரது அழகுக்கு ஆராதனையோ ஆராதனை.

‘‘மெரின் முதன்முதலாக எங்கே வேலைக்குச் சேருகிறாரோ... அங்கே நான் ஏதாவது ஒரு குற்றம் செய்து அவர் கையால் கைதாவேன்’’ என அந்தப் பக்கத்தில் சூளுரைத்திருக்கிறார் ஒருவர். ‘‘பெரிய ரவுடிகள் எல்லாம் மெரினிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

இதனால் குற்றங்கள் குறையும்’’ என ஆருடம் சொல்லியிருக்கிறார் இன்னொருவர். கொச்சிக்கு துணை கமிஷனராக மெரின் நியமிக்கப்பட்டுள்ளார் என சமீபத்தில் வதந்தி கிளம்ப, ரொம்பவும் ஆர்வமாகிப் போன ஒரு ரசிகர், மலையாள நடிகர் மோகன் லாலே ‘‘என்னை அரெஸ்ட் பண்ணுங்க’’ என கெஞ்சுவது போல குறும்புப் படம் போட்டுவிட்டார்.

கொஞ்சம் ஆறுதலாக, ‘‘அழகிய பெண்கள் சினிமா, மாடலிங் என்று போகும்போது, நீங்க ஐ.பி.எஸ் அதிகாரியாகி பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்து விட்டீர்கள்’’ எனப் பாராட்டுகிறவர்களும் உண்டு.

 தொல்லை அதிகமானதால் மெரின் தனது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையே அழித்துவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் விடவில்லை... அவர் பெயரில் இப்போதும் ஃபேஸ்புக்கில் ஏழெட்டு போலி அக்கவுன்ட்களை உருவாக்கிவிட்டார்கள். மெரின் பெயரில் எத்தனை அக்கவுன்ட் வந்தாலும் அதற்கு அரை லட்சம் லைக்ஸ் குவிவது கண்டு மல்லுவுட் நட்சத்திரங்களே திகிலாகி இருக்கிறார்கள்.

‘‘ஒரு பெண் இதர பெண்களுக்கு தூண்டுகோலாக இருந்தால், அந்தப் பெண்கள் இன்னும் அனேக பெண்களுக்கு தூண்டுகோலாக அமைவார்கள்’’ என்று ஒரு பேட்டியில் மெரின் சொல்லி இருந்தார். இப்போது அவர் தூண்டுகோலாக இருக்கிறாரா, தூண்டில்களால் சூழப்பட்டிருக்கிறாரா என்பது அவருக்கே தெரியவில்லை. எது எப்படியோ... போலீஸ் துறை இந்த மெரின் பரபரப்புகளை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புவோம்!

- பிஸ்மி பரிணாமன்