அவன் அவள் unlimited



ஆண் எப்படி அடிமையானான்!

உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ, அத்தனை வகையான பெண்ணியம் இருக்கிறது!
- கேத்லின் ஹன்னா

கோகுலவாச நவநீதன்

ஆண்களே... இவை உங்களுக்கான கேள்விகள்...‘‘என்னடா எப்ப பார்த்தாலும் பொம்பளை மாதிரி புக்கு படிச்சிக்கிட்டு? விடலப்பய காட்டுத்தனமா வேலை செய்ய வேணாமா?’’ என என்றைக்காவது உங்கள் விருப்பத்துக்கு மாறாக முரட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறீர்களா?

அவசியமாய் அழத் தோன்றுகிற நேரத்தில் கூட ‘ஆம்பிளைப் புள்ளை அழக்கூடாது’ என்ற கட்டுப்பாடு உங்களை கன்ட்ரோல் பண்ணி, உணர்வுகளை கைமா பண்ணியிருக்கிறதா?சமையல், கோலம் மாதிரியானவற்றில் ஆர்வங்கள் இருந்தும், சக ஆண்களின் கிண்டலுக்கு பயந்து அதை வெளிப்படுத்தாமல் இருந்ததுண்டா?

‘பல பெண்களோடு பழக்கம் வைத்திருப்பவன்தான் நிஜமான ஆண் பிள்ளை’ என இந்தச் சமூகம் எப்போதாவது உங்களுக்கு பிரஷர் தந்திருக்கிறதா? இதனால், கண்ணில் பட்ட பெண்ணிடமெல்லாம் கடலை போட வேண்டிய கொடுமை நேர்ந்திருக்கிறதா?

ஆம் எனில், ஆண்களே உங்களுக்கு பெண்ணியம் மிகத் தேவையானது!‘எவ்ரிடே ஃபெமினிசம்’ என்ற இணையதளத்தில், கேட்டி கெயிட்லர் என்ற பெண் எழுத்தாளர், இப்படித்தான் தன் கட்டுரையைத் துவங்குகிறார். ‘‘இதெல்லாம் ஏதோ ‘ஆணியம்’... அதாவது, ஆணாதிக்கம் மாதிரியில்ல தெரியுது...’’ எனக் குழம்பிப் பார்த்தால், பெண்ணியம் என்பதற்கே புதிய அர்த்தம் கற்பிக்கிறது இவரின் கட்டுரை.

‘‘பெண்ணைப் பற்றி மட்டுமே பேசுவதல்ல பெண்ணியம். ‘ஆண் என்றால் இப்படித்தான்... பெண் என்றால் இப்படித்தான்...’ என்று சமூகம் போட்டு வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை உடைத்து எறிவதுதான் பெண்ணியம். கடந்த நூறாண்டுகளில் பெண்கள் பெற்றிருக்கும் எழுச்சியும் சம உரிமையும் ஆண்களுக்கே அதிகம் சாதகமானவை’’ என்கிறார் கேட்டி. மேற்குலகம் இந்தக் கோணத்தில் சிந்திக்கத் துவங்கி நெடுங்காலமாகி விட்டது.

‘‘கரெக்ட் சார்... எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. ஸ்கூல் படிக்கிறாங்க. நல்லா படிக்க வச்சிட்டா போதும்... அதுங்க கல்யாணத்துக்கு அதுங்களே சம்பாதிச்சுக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால நான் ஹாயா இருக்கேன்!’’ எனத் துவங்கினார் சென்னைவாசியான நண்பர் ஒருவர். அவர்அப்பா நல்ல அரசு வேலையில் இருந்தாராம். ஆனாலும் ஏழைக் குடும்பம் போலத்தான் வளர்ப்பு.

‘‘என் அக்கா ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு வாழ்க்கை முழுக்க பதறிட்டிருந்தார் அப்பா. நினைச்சபடி எங்களை நல்லா செட்டில் பண்ணினாரே தவிர, அவர் வாழ்க்கையை அவர் வாழவே இல்ல. கடைசி வரை சைக்கிள்தான் வச்சிருந்தார். அவர் நல்லா டிரஸ் பண்ணி கூட நாங்க பார்த்ததில்ல. உலகமயமாக்கல்தான் அந்த சேமிப்பு மனநிலையை மாத்திச்சுன்னு சொல்வாங்க.

அதே உலகமயமாக்கல்ல ஒரு பார்ட்டா பெண்கள் முன்னேற்றத்தையும் சொல்லணும். வீட்டை விட்டு வெளிய போகாத எங்க அம்மா மாதிரி இப்ப என் வொய்ஃப் இல்ல. ஷாப்பிங், குடும்ப ஃபங்ஷன் எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறாங்க. வேலைக்கும் போறாங்க. நான் ஃப்ரீயா இருக்கேன்!’’ என்பது அவர் கருத்து.

உண்மையில் நம் பாரம்பரிய ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆண்கள் பெரும்பாலும் குறுகிய கால கசமுசா உறவை விரும்புகிறவர்கள் என்றும், பெண்கள் நீண்ட கால ஆண் துணையை விரும்புகிறவர்கள் என்றும் உளவியலாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஆனால், உலகப் பண்பாடுகள் அனைத்துமே நீண்ட கால உறவைத்தான் ஆதரிக்கின்றன. அதாவது, பெண்களின் இயல்புக்கு ஆணை இழுக்க முயல்கின்றன.

ஆணின் இயல்பு அதுவல்ல. அடுத்து அடுத்து என ஜோடி மாறிக்கொண்டே இருப்பதும் வெரைட்டி தேடுவதும்தான் அவனுக்குப் பழக்கம். இப்போதும், முடிந்தவரை தன் ‘சந்ததிகளைப் பரப்பும்’ அவனுடைய காட்டுமிராண்டிக் குணம் அடிக்கடி தலை காட்டும். பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பல்லையும் காட்டும். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என என்னதான் அவனுக்கு காலம் காலமாகப் பாடம் எடுத்தாலும் மண்டையில் ஏறலையே!

‘‘ஏறாது. காரணம், ஒருவனுக்கு ஒருத்தி என்பது செயற்கையாக நாம் உருவாக்கிய செட்டப்தானே தவிர, அது மனிதனின் இயல்பல்ல!’’ என்கிறார் மனநல ஆலோசகரான வாசுகி மதிவாணன்.

‘‘பழைய புராணங்களில் மட்டுமில்லை... இன்றும் சில பழங்குடி சமூகங்களில் பல தாரம், பல கணவர்கள் என்பதெல்லாம் ரொம்ப சகஜம். விலங்குகள் போல இயற்கை உள்ளுணர்வுப்படி நாமும் வாழலாம். பிடித்த இணையோடு பிடித்த காலம் வரை வாழ்ந்துவிட்டு ‘பாய்’ சொல்லிப் பிரிந்துவிடலாம்.

ஆனால், அப்படிச் செய்தால் வயோதிக வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விடும். விலங்குகளுக்கு வயோதிக வாழ்வு இல்லை. இரை தேடவும் இணை தேடவும் தெம்பில்லாது போனால் சாக வேண்டியதுதான். உடல் தளர்ந்த ஆண் சிங்கத்துக்கு பெண் சிங்கம் பார்லி கஞ்சி வைத்துக் கொடுத்து கவனிப்பதில்லை. மெனோபாஸ் நிலை தாண்டிய பசுமாட்டை காளை மாடு கருணையோடு பராமரிப்பதில்லை. இதெல்லாம் வேண்டும் என்பதற்காகத்தான் குடும்ப வாழ்க்கை!’’ என்கிறார் அவர் நுட்பமாக.

பெண்களைப் பொறுத்தவரை, எந்த வயதினர் என்றாலும் குடும்பம் எனும் ஏற்பாட்டை முற்றிலுமாக ஏற்பார்கள். ஏனெனில், அது உடனடியாக அவர்களுக்கு நன்மை செய்கிறது. உயிரியல் ரீதியாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட ‘குழந்தை வளர்ப்பு’ எனும் கடமையை குடும்பம் எளிதாக்குகிறது. ஆனால், ஆண்கள் வயோதிகத்தில்தான் குடும்பம் மூலம் பயன் பெறுவார்கள். அவர்களை இப்போதே வீட்டோடு கட்டி வைப்பது எப்படி?

இந்த இடத்தில்தான் ஆணிடம் நம் சமூகம் ஈகோவை ஏற்றுகிறது. மானம், ரோஷம், கௌரவம் போன்ற உணர்ச்சிகளை அவனுக்குள் வைத்துத் தைக்கிறது. ‘பெண் என்பவள் உனது பொறுப்பு’ எனச் சொல்வதற்கு பதில், ‘அவள் உன் அடிமை’ எனச் சொல்லி அவன் ஈகோவுக்கு கொம்பு சீவுகிறது. அடிமையைப் பராமரிப்பதும் ஒரு சுமைதானே என அவன் யோசிக்க, சமூகம் அவகாசம் தருவதில்லை. ‘ஆண் அழக்கூடாது’ என்பது போலத்தான் இதுவும். ஆணுக்குத் தரப்படும் சமூக பிரஷர்.

‘என் மனைவி யாரையும் விரும்பலாம்; நானும் யாரை வேண்டுமானாலும் விரும்புவேன்’ என்ற மனநிலைக்கு ஓர் ஆண் வந்துவிட்டால், அந்த இடத்தில் பெண்களுக்கும் விடுதலை; ஆண்களுக்கும் விடுதலை. ஆனால், நம் சமூகம் அதை விரும்புவதில்லை. ‘எனக்கா துரோகம் செய்தே’ என அவன் துடிக்க வேண்டும். அதை அவமானமாகப் பார்க்க வேண்டும்.

 கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்பட வேண்டும். இந்த உணர்ச்சிகள்தான் காட்டு விலங்கான மனிதனை வீட்டோடு கட்டி வைக்கும் ‘பாச’க்கயிறுகள். ‘அவன் மட்டும் கொலை செய்வானாம்... பெண்கள் மட்டும் ஆணின் சபலத்தை ‘ஜொள்ளு’ எனச் செல்லம் கொஞ்ச வேண்டுமாம்!’ என லாஜிக் பேசுகிறீர்களா? அதுபற்றியும் ஓர் அலசல் மிச்சமிருக்கு..!

நீங்கள் யார்?

*பொதுவாக தேர்வுகளில் ஒரு வரி விடை, டிக் செய்தல் போன்ற கேள்விகளை நீங்கள் விரும்புவீர்களா? அல்லது விரிவான விடை தர விரும்புவீர்களா?
1. ஒரு வரி     2. விரிவான விடை
*எந்தப் பொருளையும் அந்தந்த இடத்தில் வைத்து எடுப்பவரா நீங்கள்?
1. ஆம்     2. இல்லை
*உங்கள் வீட்டு மேஜை நாற்காலிகளை அடிக்கடி இடம் மாற்றிப் போடுவீர்களா, மாட்டீர்களா?
1. மாட்டேன்     2. மாற்றுவேன்
இந்தக் கேள்விகளுக்கு விடை டிக் பண்ணிவிட்டு திருப்புங்கள். பலன் தலைகீழாக!

உங்கள் விடை 1 என்றால் 1 மார்க்; 2 என்றால் 2 மார்க். மார்க்கைக் கூட்டுங்கள். 5, 6 என மதிப்பெண் வாங்கி விட்டீர்கள் என்றாலே ‘நானொரு படைப்பாளி’ என காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். 3, 4 மதிப்பெண் மட்டும் வந்தால் நீங்கள் துல்லியமான மதிநுட்பம் உள்ளவர். ஆனால், கற்பனைத் திறன் கம்மி என்று அர்த்தம்!

நீங்க என்ன பண்ணிட்டி ருக்கீங்க?

ஆபீஸ்ல ஒரே வேலைம்மா. சீட்டை விட்டு நகர முடியல! ஆமா நீ என்ன பண்றே?

இங்கதான் பீட்சா கார்னர்ல உங்க டேபிளுக்கு பின் டேபிள்ல...

- தேடுவோம்...